சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகளுடன் வழக்கறிஞர்கள் கூட்டு வைத்துக் கொண்டு சதி திட்டம் தீட்டி குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜுவால் கூறியுள்ளார்.
தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜூவால் தமிழகம் முழுவதும் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜிக்கள், டி.ஐ.ஜிக்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஜன. 1ல் இருந்து ஜூலை 20 ம் தேதி வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள், 1987 முறை சந்தித்துள்ளனர். அதே போல மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரவுடிகளை மட்டும் 546 முறை சந்தித்துள்ளனர். வழக்கு தொடர்பாக கைதிகளை வழக்கறிஞர்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருக்கிறது.
தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜூவால்
குறிப்பாக சில வழக்கறிஞர்கள், கைதிகளை சந்தித்தபோது, சிறையில் உள்ள அலாரம், சந்தேக ஒலியை எழுப்பி உள்ளது. தொடர் கண்காணிப்பில், சில வழக்கறிஞர்கள் கைதிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டுவது தெரிய வந்துள்ளது. சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, அலைபேசி உள்ளிட்ட பொருட்களை, கைதிகளுக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்துள்ளது. சில வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை தவறாக பயன்படுத்துகின்றனர்.
குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்தி கொள்ளுதல், சிவில் விவகாரங்கள், சொத்து அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கைதிகளை சந்திக்க விரும்பும் வழக்கறிஞர்கள், அவர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களுடன், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அவருக்கும் கைதிக்கும் இடையிலான, வழக்கு தொடர்பான விபரங்கள், சம்பந்தப்பட்ட கைதிக்கு, அவர் சட்ட ஆலோசகர்தான் என்பதற்கான ஆவணங்களை, சிறைத்துறை கண்காணிப் பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவர் உரிய ஆவணங்களை சரிபார்த்து, கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிப்பார். கைதிகளுடன் சேர்ந்து, சதி திட்டம் தீட்டுவது உள்ளிட்ட செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜூவால் எச்சரித்துள்ளார்.
சென்னை,மதுரை, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருச்சி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்கள் குறிப்பாக இளம் தலைமுறை வழக்கறிஞர்கள் ரவுடிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளை செய்து அதன் மூலம் சம்பாதித்துள்ள சொத்துக்கள் பற்றியும் உளவுத்துறை ஒரு அறிக்கை தயார் செய்து அதை டிஜிபிக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிகிறது.
அதேபோல பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இளம் தலைமுறை வழக்கறிஞர்கள் பலர் தலையிட்டு இருப்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இனிமேல் வழக்கறிஞர்கள் ரவுடிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றே டிஜிபி சங்கர் திவால் போலீஸ அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருக்கிறார்.
வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன்
இந்த அறிவிப்பு ரவுடிகளுடன் தொடர்பில் இன்னும் வழக்கறிஞர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல்வேறு வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.