திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கர் அரசு புறம்போக்கு தன்மை கொண்ட நிலங்களான கோவில் நிலங்கள், களம், வாய்க்கால், மேய்க்கால், தரிசு, குட்டை, குளம்,மயானம் போன்ற நிலங்களை முறைகேடாக ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து, அவற்றில் பல்வேறு நிலங்களுக்கு வருவாய்த்துறை மூலம் பட்டாவும் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு 26/02/2024 அன்று வரப்பெற்றது.
அதில் அரசு புறம்போக்கு நிலங்கள் எதன் அடிப்படையில் பத்திர பதிவு செய்யப்பட்டது என்பதை 8 வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை உயர் நீதி மன்றம்.
இவ்வாறு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் குறிப்பாக தனிப்பட்ட ஒரு நபர் அரசுக்கு சொந்தமான குளம், களம் மற்றும் வண்டிப்பாதை ஆகிய நிலத்தினை தணிகை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் கிள்ளிவளவன் மற்றும் முனியாண்டி என்பவர்கள் மேற்கண்ட அரசுக்கு சொந்தமான நிலத்தினை முறைகேடாக ரெட் ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தினை கோமதி அம்மன் நகர் அநெக்ஸ் 6 மற்றும் சோனியா நகர் என்ற பெயரில் பத்திர பதிவு செய்துள்ளார். அது தவிற வியாசர்பாடி பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவர் அந்த பகுதியில் பல அரசு புறம்போக்கு நிலங்களையும் பிளாட் போட்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
கிள்ளிவளவன் அவர்களால் அரசுக்கு சொந்தமான நிலத்தினை முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு மேலும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் layout அமைத்து விற்பனை செய்துள்ள கிள்ளிவளவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
CMDA வில் தொடங்கி BDO அலுவலகம் வரை எல்லா அதிகாரிகளும் கிள்ளிவளவன் போடும் பிச்சை காசில் பெருமையாக பிரியாணி சாப்பிட்டவர்கள் தான்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர்.
அரசு புறம்போக்கு நிலத்திற்கு கையெழுத்து போட்டு உள்ளமே என்றைக்காவது ஒரு நாள் நீதிமன்றத்தின் கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டுமே என்று எந்த அதிகாரியும் பயந்து மனசாட்சியுடன் வேலை பார்த்த நாட்களே இல்லை என்று சொல்லலாம்.
யாரும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற அதிகார திமிரில் அரசு புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு மடக்கிய பிராடு முதலாளிக்கு கைகட்டி வேலை செய்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள்.
அப்பகுதியில் கிள்ளிவளவன் சுமார் 50 ஏக்கருக்கு மேல் மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்து வருகிறார். அப்பகுதியில் தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலங்களை இணைத்து மனைப்பிரிவினை அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அரசு புறம்போக்கு நிலங்களை மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்ய ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அதிகாரிகளும், பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகளும் பெரும் தொகைகளை பெற்றுள்ளனர்.
மேலும் விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது போலி ஆவணம் மூலம் மனைப்பிரிவு அமைத்து விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலங்கள் வாங்க அச்சமடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யும் விளாங்காடுபாக்கம் ஊராட்சியை சேர்ந்த பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு புறம்போக்கு நிலங்களை லேஅவுட் போட்டு விற்பனை செய்யும் கிள்ளிவளவன் முனியாண்டி ஆகிய இருவரும் இந்த செய்தி குறித்து அவர்களது தரப்பு விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.