ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பல நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் என பலர் தங்ளது சுய நலத்திற்காக ஸ்டெர்லேட் நிறுவனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகின்றனர் என்று தூத்துக்குடி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டத்தில் காங்கிரஸ் – INTUC யின் குழப்பமான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
2018 -ல் தமிழக அரசு அரசாணை மூலம் ஸ்டெர்லைட்டை மூடிய பிறகு, ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்த அரசாணையை இரத்து செய்வதற்காக உயர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையிலிருந்த பொழுதும், ஸ்டெர்லைட்டை திறக்கச் சொல்லி கடந்த சில வருடங்களாக “துளசி மகளிர் சுய உதவி குழு ” என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலட்சுமி என்பவர் தூத்துக்குடி மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வந்தார். 
ஸ்டெர்லைட் ஆலை.
அந்த நேரத்தில் ஒரு சில காங்கிரஸ் பொருப்பாளர்களிடம் பலரும் முறையிட்ட பொழுது “தனலட்சுமி என்பவர் காங்கிரஸ் பெயரில் எதுவும் பண்ணவில்லை, அவர் சார்ந்துள்ள மகளிர் சுய உதவி குழு என்ற பெயரில் செய்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, அது அவர் தனிப்பட்ட விருப்பம்” என்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் “ஸ்டெர்லைட்டை மூடிய த.நா. அரசின் GO செல்லும், ஆலையை திறக்க அனுமதி இல்லை” என்ற இறுதி தீர்ப்பும் வந்தது. இதை எதிர்த்து சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் தாக்கல் செய்தது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் கூட INTUC தேசிய செயலாளர் கதிர்வேல் என்பவர் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார். 
பொதுக்கூட்டம், போராட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு நடத்தினார். இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அவர் தற்சமயம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஸ்டெர்லைட்டை திறக்க போராடுவதாக பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிலைமையில் கதிர்வேலுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப் பதிவு செய்தனர். இந்த நிலைமையில் INTUC மாநில பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், INTUC தேசய பொதுச் செயலாளர் மேற்படி கதிர்வேல் என்பவரது மகனான பெருமாள் சாமி என்பவர் ஸ்டெர்லைட் எதிர்த்து போராடுவதாக அறிவிப்பு கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் உச்சபட்சத்தில் இருந்த பொழுது “ஸ்டெர்லைட்டை மூடக்கூடாது” என்று பேட்டி கொடுத்தவர். ஸ்டெர்லைட் ஆலை.
மேலும் இந்த விஷயத்தில் தற்சமயம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ் முரளிதரன் என்பவர் “தகப்பனும், மகனும் ஒருவர் திறக்க வேண்டும் என்றும், மற்றவர் திறக்க கூடாது என்றும் சொல்வதற்கு ஸ்டெர்லைட் இவர்கள் வீட்டு சொத்தா? இது யாரை ஏமாற்றுவதற்காக?” என்றும், “தூத்துக்குடியின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடும் இவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றும், “ஆலையை அகற்றுவதற்கு காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் தூத்துக்குடி மக்களை திரட்டி இந்த மண்ணிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை அகற்றுவதற்கு போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் உள்ளார்கள். இந்த நிலைமையை தமிழக அரசு புரிந்து கொண்டு உடனடியாக ஸ்டெர்லைட் நிறுவனத்தை அகற்றுவதற்கு (DISMANTLING) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பல கிராமங்களில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக தீர்மாங்களும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.