ஒடிசாவில் ரயில் விபத்து மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் 300 பேர் உயிரிழந்தனர். ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பிரதமர் ரயில்வே அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் சென்றுள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் ஒரு பெரிய விபத்து ஒடிசாவில் நேற்று நடந்தது. ஒரு ரயில் தடம் புரண்டு மற்றொரு ரயில் பெட்டியின் மீது மோதியதால் பல பெட்டிகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 300 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.
பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் விபத்துக்குள்ளானது. யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகளின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகி எதிர் பாதையில் விழுந்ததாக ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
சரக்கு ரயில் உடன் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 7 – 8 பெட்டிகள் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரத்தில் இதே எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் வந்துள்ளது. அதனை நிறுத்த முடியாத நிலையில்தான் ஏற்கனவே தடம் புரண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்து ஏற்பட யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 – 3 பெட்டிகள் தடம் புரண்டன. அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல் தெரியவரும்.
இப்படி 3 ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டதில் இதுவரை 300பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளனர். மேலும் உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க மீட்பு படையினருக்கு உதவி வருகின்றனர். ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் (ODRAF) நான்கு பிரிவுகளும், 60 ஆம்புலன்ஸ்களும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர 54 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழு, விமானப்படையினர் என மொத்தம் 600 பேர் மீட்புப் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர் என்று ஒடிசா தலைமைச்செயலாளர் கூறியுள்ளார். எனினும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
விபத்துக்குள்ளான இரண்டு பயணிகள் ரயிலும் தமிழகம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் என்பதால் தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்புள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டும் 800 பேர் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் தமிழர்கள் அதிகம் பாதிப்படையவும் வாய்ப்புள்ள அச்சம் நிலவி வருகிறது.
மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஒடிசா சென்றுள்ளனர். அவர்களுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் சென்றுள்ளனர். என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் படுக்கைகள் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் ஒடிசாவில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் சிறிய காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.