chennireporters.com

12 மணி நேர வேலை சட்டத்தை கைவிட வேண்டும். த.ம.வி.இயக்கம் கோரிக்கை.

தமிழக அரசே கொண்டு வந்துள்ள12 மணி நேரம் வேலை சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமையை நசுக்கும் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

பல்வேறு நாடுகளின் தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்தி பெறப்பட்ட உரிமைதான் 8 மணி நேர வேலைத் திட்டமாகும். இந்தியாவில் துளி இரத்தம் சிந்தாமல் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் எட்டு மணி நேர வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக 1923 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தான் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களால் மே தினம் கொண்டாடப்பட்டது. இப்போது மே தினத்தின் நூற்றாண்டு வருகிறது.

இந்த வேளையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர்களின் வேண்டுகோளான 12 மணி நேர வேலை திட்டத்தைக் கொண்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இது அம்பேத்கரையும் சிங்காரவேலரையும் அவமதிக்கும் செயலாகும்.

தொழிலாளரின் உரிமை பறிக்கும் இந்த 12 மணி நேர வேலை வாங்கும் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் தொழிலாளி வர்க்கம் கிளர்ந்து எழுவதை யாராலும் தடுக்க முடியாது. மீண்டும் ஒரு ஹே மார்க்கெட் போராட்டம் இங்கு நிகழும். தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பிலும் இந்த தொழிலாளர் விரோத தொழிற்சாலைகள் திருத்த சட்டத்தை எதிர்த்து இடதுசாரிகளுடன் சேர்ந்து மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறக்கட்டுள்ளது.

 

இதையும் படிங்க.!