சொத்து, குடிநீர், தொழில்வரி வசூலிக்க ரசீது புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தருமபுரி மாவட்ட கலெக்டரும், தற்போது தமிழ்நாடு அறிவியல் நகரின் துணை தலைவராக உள்ள மலர்விழி ஐஏஎஸ் வீடு, ஒப்பந்ததாரர்கள் வீடு என 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வாங்காத பிளீச்சிங் பவுடருக்கு ரூ.29.94 லட்சம் கணக்கு காட்டி மோசடி செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னை அறிவியல் நகரின் துணை தலைவராக இருப்பவர் எஸ்.மலர்விழி ஐஏஎஸ் இவர் தருமபுரி மாவட்ட ஆட்சியராக கடந்த 28.2.2018 மற்றும் 29.10.2020ம் தேதி வரை ஆட்சியராக இருந்தார். அவரது பணிக்காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் 5வது மாநில நிதி குழு மானிய நிதியிலிருந்து 20.11.2019ம் தேதி மற்றும் 28.4.2020ம் ஆண்டு காலக்கட்டத்தில் சொத்துவரி வசூல் ரசீது புத்தகங்கள், குடிநீர் கட்டணம் வசூல் ரசீது புத்தகங்கள், தொழில் வரி வசூல் ரசீது புத்தகங்கள் மற்றும் இதர கட்டண புத்தகங்கள் என 1,25,500 எண்ணிக்கையில் ‘கிரசண்ட் மற்றும் நாகா டிரேடர்ஸ்’ ஆகிய 2 நிறுவனங்களில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து, கிராம ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்துள்ளார்.
இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படாமல் நேரடியாக, அதாவது அரசு விதிகளுக்கு எதிராக தனக்கு தெரிந்த கிரசண்ட் மற்றும் நாகா டிரேடர்ஸ் நிறுவனத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ய மலர்விழி அனுமதி அளித்துள்ளார். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட புத்தகம் ஒன்றின் விலை ரூ.40. ஆனால் கலெக்டர் மலர்விழி 2 நிறுவனங்களிடம் இருந்து ஒரு புத்தகத்துக்கு அதிகபட்சமாக ரூ.135 விலையில் கொள்முதல் செய்துள்ளார். மேலும், தருமபுரியில் உள்ள அரசு அச்சகத்தில் 1,25,500 ரசீது புத்தகங்கள் அச்சடிக்க ரூ.50.20 லட்சம் மட்டுமே செலவானது. ஆனால், மலர்விழி அரசு அச்சகத்தின் மூலம் புத்தகங்களை அச்சடிக்காமல் தனியார் மூலம் 1,25,500 புத்தகங்கள் கொள்முதல் செய்ய 1 கோடியே 81 லட்சத்து 97 ஆயிரத்து 500 செலவு செய்துள்ளார்.
அதேநேரம், இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோடியே 31 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் கூடுதலாக இழப்பை ஏற்படுத்தி அந்த பணத்தை தருமபுரி கலெக்டராக இருந்த மலர்விழி மற்றும் 2 தனியார் நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்களான தாகீர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகிய 3 பேர் கூட்டு சேர்ந்து அரசு பணத்தை கையாடல் செய்துள்ளது உறுதியானது. இதுகுறித்து தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் படி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணா ராஜன் விசாரணை நடத்தினர்.
அதில், தருமபுரி கலெக்டராக இருந்த மலர்விழி, தான் பணியாற்றிய காலத்தில் சட்டத்துக்கு புறம்பாக உயரதிகாரிகளின் அனுமதியின்றி தன்னிச்சையாக அதிக விலைக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்து கிராம ஊராட்சிகளுக்கு வழங்கியது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களும் சிக்கியது. அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணா ராஜன், முன்னாள் தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் புத்தகங்கள் கொள்முதல் செய்து வழங்கிய கிரசண்ட் மற்றும் நாகா டிரேடர்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்களான தாகீர் உசேன் மற்றும் வீரய்யா பழனிவேல் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்தனர்.
அதை தொடர்ந்து தற்போது அறிவியல் நகரின் துணை தலைவரான எஸ்.மலர்விழி வசித்து வரும் விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் குடியிருப்பான ‘தாய்சா’ குடியிருப்பில் டிஎஸ்பி கிருஷ்ணா ராஜன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, தருமபுரி மாவட்டத்தில் கலெக்டராக மலர்விழி பணியாற்றிய காலக்கட்டத்தில் அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள், தங்க நகைகள், வங்கி சேமிப்பு புத்தகங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதேபோல் சொத்துவரி ரசீது புத்தகம், குடிநீர் கட்டண வசூல் ரசீது புத்தகம், தொழில்வழி ரசீது புத்தகங்கள் தருமபுரி மாவட்டத்துக்கு மொத்தமாக வழங்கிய சென்னை சுப்பராவ் நகர் தெய்வசிகாமணி தெருவை சேர்ந்த கிரசண்ட் நிறுவன உரிமையாளர் தாகீர் உசேன் வீடு, சென்னை பத்மாவதி நகர் கோதாவரி தெருவை சேர்ந்த நாகா டிரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரய்யா பழனிவேல் வீடு மற்றும் தொழில்நிறுவனங்களில் சோதனை நடந்தது. குறிப்பாக சென்னையில் மலர்விழி வீடு, ஒப்பந்ததாரர்கள் வீடுகள் என 4 இடங்களிலும், தருமபுரி, விழுப்புரம் பகுதியில் தலா ஒரு இடம், புதுக்கோட்டையில் 3 இடம் என மொத்தம் 10 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையில் மலர்விழி வங்கி கணக்கிற்கும் அவரது உறவினர்கள் வங்கி கணக்கிற்கு பல லட்சம் ரூபாய் எந்த வித தொடர்பும் இல்லாமல் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வாங்காத பிளீச்சிங் பவுடருக்கு ரூ.29.94 லட்சம் கணக்கு தருமபுரி மாவட்ட கலெக்டராக மலர்விழி இருந்த காலக்கட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி மண்டலங்களுக்கு தலா 25 கிலோ எடை உள்ள 580 பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் என மொத்தம் 2,320 பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் வாங்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அப்போது கலெக்டராக இருந்து மலர்விழி உத்தரவுப்படி தருமபுரி மாவட்டத்துக்கு உட்பட காரிமங்கலம் ஊராட்சி, பென்னாகரம் ஊராட்சிகளின் தொகுதி வளர்ச்சி அலுவலராக இருந்த கிருஷ்ணன்(50) என்பவர் மூலம் கலெக்டர் மலர்விழி ஒப்புதலுடன் விழுப்புரம் சாலமேடு அசங்குளம் புஹாரி நகரில் உள்ள ‘ நாடியம்பாள் ஏஜென்சி’ சென்னையில் உள்ள ‘நாகா டிரேடர்ஸ்’, சென்னையில் உள்ள ‘கிரசண்ட்’, காஞ்சிபுரம் மேடவாக்கம் விமல் நகர் 1வது தெருவில் உள்ள ‘ஆர்.வி.என். டிரேடர்ஸ்’ ஆகிய 4 நிறுவனங்களுக்கு அரசு விதிகளை மீறி ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 4 நிறுவனங்களும் 25 கிலோ எடை உள்ள பிளீச்சிங் பவுடர் மூட்டை ஒன்று ஜிஎஸ்டி உட்பட ரூ.1,394க்கு கொள்முதல் செய்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால் முறையாக 4 நிறுவனங்களுக்கு பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் விடப்பட்டு அதன்படி 4 ஊராட்சி மண்டலத்திற்கு தலா 580 மூட்டை பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்ததாக தலா 7 லட்சத்து 48 ஆயிரத்து 699 ரூபாய் வீதம் 29 லட்சத்து 94 ஆயிரத்து 796 ரூபாய் தருமபுரி கலெக்டர் மலர்விழி உத்தரவின்படி, தொகுதி வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் அரசு பணத்தை விடுவித்துள்ளார்.
ஆனால், ஒப்பந்தங்கள் பெற்ற 4 நிறுவனங்களும் 4 ஊராட்சி மண்டலங்களுக்கு பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்து தராமல் ரூ.29.94 லட்சம் பணத்தையும் தொகுதி வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உதவியுடன் மோசடி செய்துள்ளனர். அதைதொடர்ந்து பிளீச்சிங் பவுடர் மோசடி தொடர்பாக தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தருமபுரி மாவட்ட காரிமங்கலம், பென்னாகரம் முன்னாள் தொகுதி வளர்ச்சி அலுவலரும் தற்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் மற்றும் ஒப்பந்தம் பெற்ற 4 நிறுவனம் அதன் உரிமையாளர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது
அதன்படி பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் ரூ.29.94 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் வீடு, பிளீச்சிங் பவுடன் கொள்முதல் செய்து கொடுத்த 4 தனியார் நிறுவன உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன்(50) வீட்டில் தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ரசீது புத்தகம் கொள்முதல் மற்றும் பிளீச்சிங் பவுடர் முறைகேடு தொடர்பான 2 தனித்தனி வழக்குகளிலும் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி நேரடியாக தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், சோதனை முடிவிற்கு பிறகு தான் இந்த மோசடி குறித்து முழு விபரங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.1.31 கோடி மோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், அவர் தற்போது பணியாற்றி வரும் அறிவியல் நகரின் துணை தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தொடர்ந்து அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மோசடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு நடத்தும் குரூப்-1 தேர்வில் 2001ம் ஆண்டு மலர்விழி வெற்றி பெற்றார். இதனால் சென்னை வணிகவரித்துறையில் இணை ஆணையராக பணியை தொடங்கினார். பிறகு பதவி உயர்வு மூலம் விருதுநகர் டி.ஆர்ஓ ஆக இருந்தபோது ஐஏஎஸ் கேடர் வழங்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரியாக 2009ம் ஆண்டு முதல் தனது பணியை தொடர்ந்தார். அதிமுக ஆட்சியாளர்களுக்கு விஸ்வாசமாக இருந்ததால் மலர்விழி 2015-17ம் ஆண்டு சிவகங்கை கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். பிறகு 2018-2020ம் ஆண்டு வரை தருமபுரி கலெக்டராக பணியாற்றினர். சென்னை அறிவியல் நகரத்தின் துணை தலைவராக மலர்விழி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் வீட்டில் சோதனை மலர்விழி ஐஏஎஸ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விழுப்புரம், சாலாமேடு புகாரி நகரில் உள்ள தனியார் ஏஜென்சி ஒன்றில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். இங்கு செயல்பட்டு வந்த அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிளீச்சிங் பவுடர் விநியோகம் செய்த நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* மாஜி அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான கான்டிராக்டர் வீட்டில் ரெய்டு
தர்மபுரி மாவட்ட ஊராட்சிகளுக்கு தேவையான குடிநீர் வரி புத்தகம், வீட்டு வரி, தொழில்வரி மற்றும் இதர வரி புத்தகங்களை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காடு பழனிவேலு என்பவரின் நாகா டிரேடர்ஸ் என்று நிறுவனமும், புதுக்கோட்டை பிரிட்டோ நகரில் உள்ள தாகரி உசேன் நிறுவனங்கள் சப்ளை செய்தன.
இந்நிலையில், கறம்பக்குடி அருகே கருக்காடு கிராமத்தில் உள்ள நாக டிரேடர்சின் உரிமையாளர் பழனிவேலு வீட்டில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் மற்றும் சார்லஸ் தலைமையிலான போலீசார் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை பிரிட்டோ நகரில் உள்ள தாகிர் உசேனின் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் பழனிவேலு அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நண்பர். அதிமுக ஆட்சியின் போது வேலுமணியின் ஆசியுடன் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் அரசு ஒப்பந்தம் எடுத்திருக்கிறார். கொரோனா காலத்தில் பிளிச்சிங் பவுடர் வாங்கியதிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்போது இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது அதிமுகவில் உள்ளார்.