chennireporters.com

கனிம வள கொள்ளையை தடுக்க போலீஸ் தயங்குவது ஏன்?

கனிமவள கொள்ளையை தடுக்க யாருமில்லை அரசாணையை செயல்படுத்த தயக்கம் காட்டுகிறார்கள் தமிழகம் முழுவதும் சட்ட விரோத கனிமவள கொள்ளையை தடுக்க, வி.ஏ.ஓ., முதல் மாவட்ட கலெக்டர் வரை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டும், அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள் என்ற செய்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும், 37 மாவட்டங்களில், 1,551 கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, கோவை – 131; திருப்பூர் – 95, விருதுநகர் – 149 குவாரிகள் உள்ளன.

குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக எடுத்தல், சட்ட விரோத வெடி பொருட்கள் பயன்படுத்துதல், அனுமதி சீட்டு முறைகேடு, வெளி மாநிலங்களுக்கு கடத்துதல் நடக்கிறது. கனிமவள கொள்ளையை தடுக்கும் வகையில், வி.ஏ.ஓ., அவரது எல்லைக்கு உட்பட்ட அனைத்து குவாரிகளையும், வருவாய் ஆய்வாளர் 75 சதவீதம் குவாரிகளையும், தாசில்தார் 50 சதவீதம், சப்-கலெக்டர் 10 சதவீதம், டி.ஆர்.ஓ., 5 சதவீதம் மற்றும் கலெக்டர் 3 முதல், 5 சதவீதம் குவாரிகளையும், மாதம் தோறும் ஆய்வு செய்து, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கவும், வாகனங்களை ஆய்வு செய்து பறிமுதல் செய்யவும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வட்ட கண்காணிப்பு குழு அறிக்கை, மாவட்ட கண்காணிப்பு குழு அறிக்கை தயாரித்து, தலைமை செயலாளருக்கு, ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், என அரசு ஆணை எண், 19/ 2022, பிப்.,14ல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கனிமவள கடத்தல் அபரிமிதமாக நடப்பதோடு, சட்ட விரோத செயல்பாடுகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்துதல், என, கனிமவள சுரண்டல் காரணமாக, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.அதிகாரிகள் ஆய்வு செய்து, சட்ட விரோத கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பதை அறிய, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், அரசாணை எண் 19 அடிப்படையில், ஆய்வு செய்த விவரங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெறப்பட்டுள்ளது.

இதில், 95 சதவீதம் அதிகாரிகள் ஆய்வு செய்யாதது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த, டிச., 2022 வரை, மக்கள் போராட்டம் காரணமாக, கோவை கோட்டாட்சியர், 11 முறை ஆய்வு செய்து, 8 வழக்குகளில், 5.42 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். நெல்லையில், 5.05 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு மட்டும் செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில், வி.ஏ.ஓ., முதல் கலெக்டர் வரை யாருமே ஆய்வு செய்யவில்லை. வட்ட, மாவட்ட கண்காணிப்பு குழு ஆய்வும், அறிக்கையும் வழங்கவில்லை, என, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:கனிம கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டிய அரசு அலுவலர்கள் அரசாணையை அலட்சியப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தலைமை செயலகத்தில் கேட்ட போது, எந்த மாவட்டத்திலுமே, நுாறு சதவீதம் கல் குவாரிகள் ஆய்வு செய்யவில்லை. இதனால், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தந்த கிராமங்களில் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் அழித்து, நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று, நிலங்கள் பாலைவனமாகி, நிலநடுக்கம் வருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது, அரசும், அதிகாரிகளும் கனிமவள சுரண்டலை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!