chennireporters.com

#kaliyamma please apologize to our people; காளியம்மா உங்கள் இழி சொற்களுக்காக எமது மக்களிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள். எழுத்தாளர் கை. அறிவழகன் கண்டனம்.

இந்திய வரலாற்றில் இந்திரா பிரியதர்ஷினி என்கிற இந்திரா காந்தி ஆளுமை மிகுந்த தனித்துவம் கொண்ட தலைவராக இருந்தார்.  ஃபெரோஸ் தீவிர அரசியல்வாதியாக வெற்றி பெற முடியாமல் போனது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், இந்திராவின் வெற்றிக்கான மிக முக்கியமான காரணமாக நான் அறிவது அவரது வாசிப்பும், வரலாற்றுப் புரிந்துணர்வும் தான்.

இந்திரா காந்தி.

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தானும், வடகிழக்கில் போடோ இயக்கமும் தங்கள் தனிநாட்டு இலக்குகளுடன் போராடிக் கொண்டிருந்த சூழலில் அவர் இந்தியாவை ஆட்சி செய்தார்.

ஜனநாயக நாட்டில் பரிசீலிக்கப்படும் எந்தவிதமான சமரசங்களையும் அவர் பிரிவினைவாதக் குழுக்களோடு ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அத்தகைய அவரது பண்பின் வழியாகவே அவர் தனது இன்னுயிரைத் துறக்க வேண்டியிருந்தது. அவரது செயல்பாடுகள் குறித்த மதிப்பீடுகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அவரது ஆளுமைத்திறன் குறித்தும், தலைமைப் பண்பு குறித்துமே நான் இங்கு பேசுகிறேன்.

இந்திரா தனது தந்தையின் சோஷலிச ஜனநாயக சித்தாந்தங்களின் வழியாகவே இந்தியாவின் அரசியலை அணுகினார். நேருவின் இடதுசாரித் தத்துவங்களின் மீதான உயிர்ப்பான ஈடுபாடு, விடுதலை பெற்ற இந்தியாவின் கட்டமைப்பில் மிகப்பெரிய பங்காற்றியது.

இந்திராவின் வாழ்க்கை முழுவதும் நேருவின் அரசியல் அறிவு வியாபித்திருந்தது.

எழுத்தாளர் கை.அறிவழகன்.

ஆனால் காலப்போக்கில் அதிகாரத்தின் வழியாக அவர் ஒரு குழப்பமான வலதும், இடதும் கலந்த முதலாளித்துவப் பொருளாதார சிந்தனைகளுக்குள் வீழ்ந்தார். அவருடைய புகழ்பெற்ற “எமெர்ஜென்சி” அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால், அவர் ஒரு ஆளுமைத்திறன் கொண்ட தலைவராக இன்றும் நிற்கிறார், நேருவை இலகுவாகக் கையாளும் பாரதீய ஜனதாவும், அதன் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ்ஸும் கூட இந்திரா பிரியதர்ஷினியை கொஞ்சம் தயக்கத்தோடு தான் அணுகுவார்கள்.

குறிப்பாக அரசியல் இந்தியாவின் முதல் பெண்மணியாகவும், இன்றுவரை வேறு ஒரு பெண்ணால் வெற்றி கொள்ள முடியாத தலைவராகவும் இந்திராவைத்தான் குறிப்பிட முடியும்.

மாயாவதி.

இந்திரா பிரியதர்ஷினிக்கு அடுத்து நாம் மாயாவதி அவர்களைக் குறிப்பிடலாம், மாயாவதியின் அரசியல் வெற்றியும், அவரது தகர்க்க முடியாத வியூகங்களும் அவரது சித்தாந்த வழிகாட்டியான கன்ஷிராம் அவர்களால் வழிநடத்தப்பட்டது.

இந்திய அரசியலில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து தேசத்தின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், சாதி மற்றும் மத ஆதிக்கங்களை உடைத்து அங்கு அதிகாரத்தில் இருப்பதும் மிகப்பெரிய ஆய்வுக்கு உட்பட்டது.

அவரது வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது அவரது கல்வியறிவும், தொடர் வாசிப்பும், வறலாற்றுப் புரிந்துணர்வும் தான். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தலைவராக இருந்த மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் போற்றுதலுக்குரியது தான்.

ஜெயலலிதா.

ஏனெனில் ஆணாதிக்கம் மட்டுமே இருந்த தமிழக அரசியலில் ஒரு பெண்ணால், அதிமுகவைப் போன்ற எம்.ஜி.ஆரின் திரைக்கவர்ச்சி அரசியலை நம்பி மட்டுமே அதிகாரத்தை அடைந்த கட்சியை முழுமையாகக் கைப்பற்றி இறுதிவரை வெற்றிகரமாக செயல்பட முடிந்தது என்பது சாதனைதான்.

இந்த அரசியல் வெற்றிக்குப் பின்னும் ஜெயலலிதாவின் இளமைக்காலக் கல்வியறிவு, அவரது தொடர் வாசிப்பு மற்றும் வரலாற்றுப் புரிந்துணர்வு ஆகியவையே மூலகாரணிகள். ஜெயலலிதாவின் பிற்கால திராவிட இயக்க வரலாற்றுப் புரிந்துணர்வு தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 69 % இட ஒதுக்கீட்டை தீவிரமாகக் களமாடிப் பெற்றுத் தருவதற்கு உறுதுணையாக இருந்தது.Indian women praise 'inspiring' Jayalalitha on social media - BBC News

ஜெயலலிதா.

தன்னை ஒரு பாப்பாத்தி என்று நெஞ்சுரத்தோடு சட்டமன்றத்தில் முழங்க முடிந்த ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் பெரியாரை எந்தத் தளத்திலும் புறக்கணிக்க முடியாமல் போனதற்கு அவரது வரலாற்றுப் புரிந்துணர்வு தான் காரணம். ஜெயலலிதா தனிப்பட்ட வாழ்வில் ஒரு ஃபாசிஸ்ட், நடிகையாக இருந்த காலத்தில் இருந்து துவக்க கால அரசியலில் அவர் எதிர்கொண்ட ஆணாதிக்க விழுமியங்களால் ஃபாசிஸ்ட்டாக மாறியவர் ஜெயலலிதா.

அவருடைய அரசியல் மதிப்பீடுகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றி தமிழகத்தின் அரசியல் களத்தில் அறிவுச் சூறையாடலை நிகழ்த்தியவர் ஜெயலலிதா. ரஷிய ஜார் மன்னர்களைப் போல மக்களின் உழைப்பை உறிஞ்சிக் குடித்து எல்லையற்ற ஊழல்களில் திளைத்தவர் மட்டுமில்லாமல் இரண்டாம் அடுக்கில் இருப்பவர்களையும் அவர் அத்தகைய ஊழல்களுக்கு அனுமதித்தார்.

ஆனால், ஜெயலலிதா ஒரு தலைவராக அரசியலில்  மிகப்பெரிய வெற்றியடைந்த ஆளுமை என்பதை மறுக்கவியலாது. தனியொரு பெண்ணாக ஏறத்தாழ‌ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆணாதிக்க அரசியலில் ஆண்களின் நிழல் கூடப் படியாதபடி அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததும் உளவியல் ஆய்வுகளுக்கு உரியது.

காளியம்மாள்

இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் காளியம்மாள் அவர்களை ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவரைப் போலவும், புரட்சிப்‌ பெண்மணி போலவும் ஊடகங்கள் பேசி வருவதைப் பார்க்கும் போது நமது ஊடகங்களின் செய்தி வறட்சியாகத்தான் அதை கவனிக்க முடிகிறது.

காளியம்மாள் மீனவ கிராமங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார், அங்கு அவருக்கு மக்களை சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது. மக்களை தான் பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைக்கவும், பொருளாதார நன்மைகளை அடையவும் அவருக்கு கவர்ச்சிகரமான பேச்சு தேவைப்படுகிறது.

வாயை மூலதனமாக்கிப் பிழைத்தவர், வாயைத் தவிர எதுவுமே இல்லாத சீமானின் கவனத்திற்கு வருகிறார், நம்மைப் போலவே சிறப்பாக இயங்கும் வாயை நாமே குத்தகைக்கு எடுத்தால் என்ன? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை நிதி ஒருங்கிணைப்பாளரான சீமான் காளியம்மாளை தன் பக்கமாக ஈர்க்கிறார்.

அரசியல் வரலாற்றுப் புரிந்துணர்வுகள் ஏதுமில்லாத, வாசிப்பறிவும் இல்லாத காளியம்மாள் தனது வாயை வாடகைக்கு விட்டுப் பிழைக்கிறார். வாய்ஜாலத்தில் மயங்கிய புதிய YouTube தலைமுறை சீமானைப் போலவே பெண் சீமானாக உருமாற்றம் அடைந்த காளியம்மாளையும் தலையில் ஏற்றுகிறது.

காளியம்மாள்.

திராவிட இயக்க எதிர்ப்பு மட்டும்தான் காளியம்மாளின் மேடை மூலதனம், அதைத்தாண்டி கருணாநிதி எதிர்ப்பு, அவரது குடும்பம் குறித்த அவதூறுகள் என்று சீமானை விடக் கூடுதலாகத் தனது பாய்ச்சலைத் துவங்க ஒரு கட்டத்தில் புகழ்பெற்ற வசனமொன்றை மேடையில் முழங்குகிறார்.

“1000 ரூபாய்க்குப் பொறந்தவங்களா” என்று அவர் ஒரு தேர்தல் பிரச்சார மேடையில் பேசியபோது அவர் எவ்வளவு அருவருப்பான அரசியல்வாதி என்பதை உணர முடிந்தது. எம்.ஜி.ஆர் சத்துணவு வழங்கினார், அதற்காக நம்முடைய குழந்தைகளை “சத்துணவுக்குப் பிறந்தங்களா” என்று யாரும் சொன்னால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்களா?

எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்குக் காலணிகளை வழங்கினார், ஜெயலலிதா ஆடு, கோழிகளை வழங்கினார், கலைஞர் வண்ணத் தொலைக்காட்சி வழங்கினார். அப்படியே முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான உதவித் தொகை என்று 1000 ரூபாய் வழங்கினார், அப்படியென்றால் தமிழக மக்கள் காலணிக்குப் (செறுப்பு) பிறந்தவர்களா? ஆடு, கோழிகளுக்குப் பிறந்தவர்களா? வண்ணத் தொலைக்காட்சிக்குப் பிறந்தவர்களா?

எழுத்தாளர் கை.அறிவழகன்.

கட்சிகளையும், தலைவர்களையும் கடந்து பயனாளிகளான மக்களை 1000 ரூபாய்க்குப் பிறந்தவர்கள் என்று சொல்கிற துணிவு காளியம்மாளுக்கு எங்கிருந்து வந்தது? அவரது முட்டாள்தனத்தில் இருந்தும், அவரது சிந்தனைத் தொகுப்பில் இருந்தும், அரசியல் அறியாமையில் இருந்தும் தானே வருகிறது.

இப்போது இவரை திமுகவில் சேர்ப்பதற்கு முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் நடக்கிறது என்கிறார்கள், பாமகவில் இணையப் போகிறார் என்கிறார்கள். ஒருவேளை திமுகவில் கூட இவரை இணைத்துக் கொள்வார்கள். ஆனால், திராவிட இயக்கங்களின் வழிவந்த சுயமரியாதை மிக்க எந்தத் தொண்டனும் இத்தகைய வாயை வாடகைக்கு விட்டுப் பிழைக்கும் காளியம்மாள்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

திமுகவில் காளியம்மாளைப் போன்றவர்கள் இணைய வேண்டுமென்றால் முதலில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும், கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் அவர் மேடைகளில் நாகரீகமின்றிப் பேசி இருக்கிறார், அதைப் பெருந்தன்மையாக நீங்கள் மன்னிக்கலாம்.

காளியம்மாள்.

ஆனால், எமது மக்களை, உழைக்கும் பெருமக்களை 1000 ரூபாய்க்குப் பிறந்தவர்கள் என்று பேசிய அகங்காரமும், ஆணவமும் மிகுந்த சொற்களை அவர் திரும்பப் பெற வேண்டும், அதற்காக முதல்வரிடமும் மக்களிடமும் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

இவரைப் போன்ற வாயை வாடகைக்கு விட்டுப் பிழைக்கும் பெண்களை தமிழகத்தின் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும். ஊடகங்களுக்கு பாவம் வேறு ஆக்கப்பூர்வமான செய்திகள் இல்லை, அவர்கள் பிழைத்துப் போகட்டும். சாமானியத் தமிழ்‌ மக்களின் பிரதிநிதியாக, எளிய உழைக்கும் மக்களின் சார்பாக நான் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.

எழுத்தாளர் கை.அறிவழகன்.

“காளியம்மாள், பொது வாழ்வில், தமிழ் சூழலில் நீங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால் முதலில் உங்கள் இழி சொற்களுக்காக எமது மக்களிடம் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள். பிறகு உங்கள் வாய் வாடகைப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடலாம்.”  பெங்களூரில் பணியாற்றும் எழுத்தாளர் கை.அறிவழகன் தனது முகநூலில் எழுதியுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காளியம்மாளின் அரசியல் வாழ்க்கைக்கு இந்த பதிவு பெரும் சவாலாக இருக்கும் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இதையும் படிங்க.!