இதே வீட்டில்தான் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்தும் வசித்து வருகிறார். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் துரைமுருகன் வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். தி.மு.க-வினரும் அங்கு குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதேபோல், காட்பாடியில் கதிர் ஆனந்த் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
துரை முருகன் வீட்டின் முன்பு ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது, அமைச்சர் துரைமுருகனும், எம்.பி கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை. இருவருமே சென்னையில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான வேலூர் மாநகர தி.மு.க நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவரும் காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின்போது, பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான இடத்தில் இருந்து ரூ.10.57 கோடி பணத்தை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக, எம்.பி கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துரைமுருகன் – கதிர் ஆனந்த்
சமீபத்தில் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏறக்குறைய 200 ஏக்கரிலான அரசுப் புறம்போக்கு நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து தனியாருக்கு விற்பனைச் செய்துவந்த குற்றச்சாட்டிலும் சிக்கினார் பூஞ்சோலை சீனிவாசன். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரேடாரிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் அமலாக்கத்துறையினரும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனாலும், என்ன காரணத்திற்காக இந்த ரெய்டு நடந்தது என்கிற உறுதியான தகவல்கள் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. ஆனாலும், இந்த ரெய்டு எம்.பி கதிர் ஆனந்தை குறி வைத்து நடத்தப்படுவதாகவும், அவருக்கு சிக்கல் ஏற்படலாம் எனவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் சூழலில் இன்று இரவு முதியவர் ஒருவர் கடப்பாரையை எடுத்து கொண்டு உள்ளே சென்றார். 
அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில் அவர் கடப்பாரையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருப்பவர் துரை முருகன். திமுகவில் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
சென்னையில் இருந்து இன்று வேலூர் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வீட்டு உரிமையாளர்கள், உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் 5 மணிநேரம் கழித்து தான் இந்த சோதனை தொடங்கியது. இரவு நேரம் ஆனபோதிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று இரவு திடீரென்று முதியவர் ஒருவர் கடப்பாரையை கையில் எடுத்து கொண்டு துரைமுருகன் வீட்டுக்குள் நுழைந்தார்.
அந்த முதியவர் துரைமுருகன் வீட்டில் வேலை பார்த்து வரும் நபர் ஆவார். இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து தான் அந்த முதியவர் கையில் கடப்பாரையை எடுத்து உள்ளே சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏதேனும் ஒன்றை கடப்பாரையால் உடைத்து சோதனை மேற்கொள்கின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சோதனைக்கு கடந்த 2019 ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நடந்த சம்பவம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் ரூ.11 கோடி பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் அந்த வழக்கின் தொடர்ச்சியாகத்தான் இந்த ரெய்டு என்கிறார்கள். திமுகவினர்.