தோல்வி பயத்தின் உச்சத்தில் மோடியின் வெறுப்பு பேச்சு என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு கட்டுரை வைரலாகி வருகிறது. எழுத்தாளர் ரமணி எழுதிய அந்த கட்டுரையை நாம் அப்படியே பதிவு செய்து இருக்கிறோம் கட்டுரையில் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் எழுத்தாளர் ரமணியை சொந்த கருத்துக்களே.
எழுத்தாளர் வ. ரமணி
தோல்வி பயத்தின் உச்சத்தில் மோடியின் வெறுப்புப் பேச்சு. 2024 மக்களவைத் தேர்தலுக்கான 5 கட்டத்தேர்தல் நடந்துமுடிந்திருக்கின்றன. இன்றோ ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 5 கட்டத் தேர்தல் நிலவரங்களும் இண்டியா கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது பாஜகவிற்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
காரணம், கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பாஜகவின் மோடி, நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? என்று மக்கள் கொந்தளித்துள்ளனர். குறிப்பாக 2014ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான “கேஸ்சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கருப்புப் பணம் ஒழிப்பு, அனைவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடப்படும்” என்ற வாக்குறுதியை 10 ஆண்டுகால ஆட்சியில் மோடி ஏன் நிறைவேற்றவில்லை?
அதானி அம்பானி போன்ற கார்ப்ரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, விவசாயிகளின கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை? என்பன போன்ற சாமானிய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தற்போதைய தேர்தல் களத்தில் முக்கியமானதாக மாறியிருக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனப் பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பிவருகின்றனர் ராகுல்காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள்.
மேற்கண்ட கேள்விகளுக்கு வினையாற்றாத பிரதமர் மோடி, மாறாக, ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் இஸ்லாமியர்களுக்கான எதிரான வெறுப்புப் பேச்சுகளை இந்து முஸ்லிம் ஒற்றுமையை சிதைக்கும் நோக்கோடு மதவெறிக் கருத்துக்களை ஒரு நாட்டின் பிரதமரே பேசிவருவது ஜனநாயகத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் பெரும் ஆபத்தான ஒன்று.
இதற்கு பொது வெளியில் வலுவான கண்டங்கள் வலுத்து வருகின்றன.
இத்தகைய மோசமான, சிறுபிள்ளைத்தனமான அவதூறுகளைப் பரப்புவதன்மூலம் இஸ்லாமிய கிறித்தவ மக்களை தனிமைப்படுத்துகிறார். மோடி பேசுவதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. காரணம் 2002ல் குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வரானதற்கும் அவரே ஆட்சியில் தொடர்வதற்கும் பின் நாட்டின் பிரதமரானதற்கும் இந்துத்துவ மதவெறி வன்முறைதான் முக்கியக் காரணம்.
குறிப்பாக, காங்கிரஸ் இல்லாத இந்தியா வை உருவாக்குவோம் என முன்பு கர்வத்தோடு கர்ஜித்த பிரதமர் மோடி, தற்போது “தான் தோற்கப் போகிறோம்” என்ற பயத்தில் மதவெறிக் கருத்துக்களை, பொய் புரட்டுகளை பரப்புவதில் இட்லரை மிஞ்சுகிறார். இவர் மட்டுமல்ல அமித்ஷா, நட்டா உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த பல தலைவர்கள் இவ்வாறு சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைப் பேச்சுக்களை பேசிவருவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்துக்களின் பாதுகாவலர்களாக தங்களை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்..
அண்மையில் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மோடி பேசிய பொய்கள் என்னவென்று பார்ப்போம்.
முதலாவது, “இந்தியாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்துள்ளது, இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது” என்றார். மேலும் “நாட்டின் வளங்களை நீங்கள் கடினமாக உழைத்துச் சேர்த்த சொத்தை இந்தியாவில் ஊடுருவிய அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள் அதனை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்களா?” என்றும் இந்துக்களைத் தூண்டுகிறார்.
ஆனால், 2019-2021 கணக்கெடுப்பின்படி, இந்துப்பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் விகிதம் 1.94 ஆகவும், இஸ்லாமியப் பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் விகிதம் 2.6 ஆகவும் உள்ளது. இரு மதத்தினரிடையே குழந்தைப் பிறப்பு வேறுபாடு 0.41 என்ற அளவில் மட்டுமே இருக்கிறது என்ற புள்ளிவிவரங்கள் மூலம் மோடியின் கருத்துத் தவறானது என்பது நிரூபணமாகியுள்ளது. புள்ளிவிவரங்களைப் பேசினால் நாம் அம்பலப்பட்டு விடுவோம் என்றுணர்ந்த மோடி, தற்போது, மக்களை பீதியூட்டும் வன்முறையைத் தூண்டும் பயங்கரவாதக் கருத்துக்களைப் பேசத்தொடங்கியுள்ளார். இதுவரை இந்தியாவில் நடந்த இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குலுக்கு கண்டித்ததில்லை. தடுக்கவுமில்லை. ஆனால், நான் அதற்குப் பொறுப்பில்லை என்பதுபோல் தன்னை அடையாளப்படுத்திவந்த மோடி தற்போது அவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.
இரண்டாவது, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர்மூலம் இடித்து விடுவார்கள்” காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்களிடம் உள்ள இரண்டில் ஒரு எருமை மாட்டைப் பிடித்துச் சென்றுவிடுவார்கள்” “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தாய்மார்களின் தங்க நகைகளை பறித்துவிடுவார்கள்“, “தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற தென் மாநிலக் கட்சிகள் உத்தரபிரதேச மக்களைப் பற்றி தவறாக பேசுகிறார்கள்“. “பூரிஜெகன்னாதர் கோயில் அறக்கட்டளையைப் பூட்டிவிட்டு சாவியை எடுததுச்சென்றுவிட்டனர்.”
உத்தரப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு என்றபெயரில் 100க்கணக்கான இஸ்லாமியர்களின் வீடுகள் எந்த உத்தரவுமின்றி இடித்து தரைமட்டமாக்கப்பட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மனிதநேயமற்ற பாசிச நடவடிக்கையைத்தான் ‘யோகியிடமிருந்து காங்கிரசு கற்றுக்கொள்ள வேண்டும்‘ என்கிறார் மோடி.. இதுபோன்ற மிக மிக ஆபத்தான நாட்டை பிளவுபடுத்தும் மதவெறியைத் தூண்டும் வெறுப்புப் பேச்சை மோடி தெரியாமலோ, அல்லது தோல்வி பயத்திலோ பேசவில்லை. ‘நாங்கள் எந்த எல்லைக்கும் சென்று ஆட்சியைப் பிடிப்போம்‘ என்ற சர்வாதிகார சங்பரிவார மதவெறித்தனத்தின் வெளிப்பாடே பாஜக மோடியின் பேச்சு. தேர்தல் ஆணையமோ இதனை வேடிக்கைப் பார்க்கிறது. சில ஊடகங்களோ சர்வாதிகாரத்திற்கு துணைபோகிறது.
வன்முறையும் மதவெறி அரசியலும் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதும் பாஜக சங்பரிவார் போன்ற அமைப்பிற்கு புதிதல்ல என்றாலும், தேர்தல் முடிவுகள் நெருங்க நெருங்க பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பொருளாதார நிபுணர் பரகால பிரபாகர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனை நிரூபிக்கும் வண்ணமாக மோடியின் தொடர் வெறுப்பு பேச்சுகள் அமைகின்றன. மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்த காந்தியைக் கொன்ற கோட்சேக்களின் வாரிசுகளான பாசிச மோடி அமித்ஷாக்கள் இந்தியாவின் பன்முகப்பட்ட மக்கள் பண்பாட்டை கேலிக்கூத்தாக்குகிறார்கள். ஒற்றைப்பண்பாட்டை கட்டமைக்க முயல்கிறார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் உண்மையில் நாம் உரக்கச் சொல்லவேண்டிய விசயம், இஸ்லாமியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் இல்லையா? இஸ்லாமியர்களுக்கு இந்திய மண்ணில் உரிமை இல்லையா? ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லையா? இந்தியாவை ஆட்சி செய்ததில் இந்தியாவை வளர்த்தெடுத்ததில் கட்டமைத்ததில் இஸ்லாமியர்கள் உழைப்பு இல்லையா? இந்திய சுதந்தரப் போராட்டத்தை நடத்திய தலைவர்களில் முதன்மையானவர்கள் பின் இந்தியாவின் கல்வித்துறை அமைச்சராக இருந்தவரரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் பங்கு அளப்பரியது. சுதந்திர போராட்டத்தின் முதல் தந்தை எனப் போற்றப்படும் பகதூர் ஷா, ரபீக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத், முஹம்மது இஸ்மாயில், முஹம்மது அலீ, ஷௌக்கத் அலீ, குஞ்ஞாலி மரைக்காயர், வங்கத்தின் சிங்கம் சிராஜ் உத்-தௌவ்ளா, ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட ஜபார் அலி, மிர் நிசார் அலீ,ஆதம் ஜவேரி சகோதரர்கள், அஷ்ஃபகுல்லாஹ்கான், ஹைதர் அலி, திப்புசுல்தான், அஸ்ரத் பேகம் போன்ற இஸ்லாமியத் தலைவர்களை இந்திய வரலாற்றிலிருந்து மறைத்திட முடியுமா?, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்காகத் தங்களின் உயிரைத் தியாகம் செய்தவர்களில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர். அவற்றில் 12ஆம் நூற்றாண்டில்டெல்லியை ஆட்சி செய்த முதல் அரச வம்சப் பெண் ரசியா சுல்தான், ஆஸ்ரத் பேகம் உள்ளிட்ட பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதே போல சுத்ணதர இந்தியாவின் தேசிய கொடியை அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண் சுரையா தியாப்ஜி என்பவர்.
இந்தியாவைக் கட்டமைத்த இஸ்லாமியர்கள் அதேபோல் வணிகம், கல்வி, கலை இலக்கியம் குறிப்பாக கட்டிட வடிவமைப்பு, அழகியல் சார்ந்த கட்டமைப்புகள், நகரத்தை மிளிரச்செய்யும் கலைநுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்வர்கள் இஸ்லாமியர்கள். இந்திய இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய கல்வி, கலை, ஓவியக் கட்டிடங்களில் புகழ் பெற்றவை பல. அவற்றில் டில்லியிலுள்ள குதுப் மினார், ஆக்ராவிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், அலாவுதீன், அலகாபாத் கோட்டை, செங்கோட்டை, ஜீம்மா மசூதி போன்ற எழில்மிகு நகரங்களை உருவாக்கினார்கள். ஆராய்ச்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் இஸ்லாமிய மன்னர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
அதேபோல் இசைக்கலை, ஓவியக்கலை போன்ற கலைப் பண்பாட்டை ஈரானிய இசையோடு நவீன வடிவில் வளர்த்தெடுத்தவர்கள் சிக்கந்தர் லோடி, யூசுப் அடில்ஷா, முஹம்மது பின் துக்லக், தான்சேன், ஜஹான்கீர் தத், பாவிஸ்தத் குர்தம தத், ஹமஜான் சத்தூர் கான், ஷாஜகான், இஸ்லாமிய மன்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷாஜகானின் காலத்தில் சிற்பக் கலை சிறப்புமிக்கதாக விளங்கியிருக்கிறது. இத்தகைய கலைப்படைப்பில் பல்லாயிரக்கணக்கான சிற்பக் கலைஞர்கள், கலையாளுமை கொண்ட தொழிலாளர்கள் இந்து முஸ்லிம் என்ற பேதமின்றி உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். ஆக, இந்திய நாகரிகத்தை வளர்த்தெடுத்தவர்களில் இஸ்லாமியர்களின் ரத்தம் உறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைதவர்களில் அமீர் ஹைதர் கான், சவுகத் உஸ்மானி, முகமது சபிக் உள்ளிட்ட பல இஸ்லாமிய தலைவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இத்தகைய வரலாற்று ஆளுமைகளை, இஸ்லாமிய மக்களைத்தான் ‘அந்நியர்கள் ஊடுருவல்காரர்கள்’ என்று ஆர்எஸ்எஸ் இந்துத்துவ மோடி கூறுகிறார். அதிகம் குழந்தை பெற்று கொள்பவர்கள். இஸ்லாமியர்கள் குறித்த வன்மத்தை கக்குகிறார் மோடி. உலகில் எந்த நாட்டிலும் எவர் ஒருவரும் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவத்தை மதச்சார்பின்மையை அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. பாஜகவோ மதச்சார்பின்மைக்கும் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கும் மாநில அதிகாரங்கள் மற்றும் பன்முகக் கலாச்சாரத்திற்கும் எதிரான சித்தாந்தத்தை கொண்டிருப்பதன் விளைவே மோடி அமித்ஷாக்களின் பிளவுவாத விஷக் கருத்துக்கள்.
அதுமட்டுமின்றி ஒரு பக்கம் திருவள்ளுவரையும் திருக்குறளையும் நேசிப்பதாக புகழும் மோடி, தற்போது தமிழ்நாட்டை தமிழர்களை “திருடர்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது அமித்ஷா ஒரு படி மேலே சென்று *ஒடிசாவில் தமிழர் ஏன் ஆள வேண்டும்? ஒரியா தான் ஆள வேண்டும் என்று இன,மொழி வெறுப்பை வன்மத்தோடு தூண்டி விடுவது அப்பட்டமான தமிழர் விரோத போக்கு. இப்பொழுது நான் மனிதன் இல்லை, பரமாத்மா என்று பிதற்ற தொடங்கிவிட்டார். ஆக, மோடி அமித்ஷா கும்பலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர்கள் தோல்வியிலிருந்து மீள முடியாது. இத்தகைய ஜனநாயக விரோத, தமிழர் விரோத, ஒட்டுமொத்த மக்கள் விரோத நோக்கத்தோடு பேசிவருவது தோல்வியின் வெளிப்பாடு. இவ்வாறு பேசத் தொடங்கி நிமிடமே மோடி தோற்றுவிட்டார். தோல்வி தொடரட்டும். பாசிசம் வீழட்டும் ஜனநாயகம் மலரட்டும் என்று எழுதியுள்ளார் எழுத்தாளர் ரமணி.