chennireporters.com

புலவர் புலமைப்பித்தன் மரணம் தமிழர்கள் அஞ்சலி..

ஐயா புலமைப்பித்தன் அவர்களை வாழ்வில் ஒரேயொருமுறைதான் பார்த்திருக்கிறேன். அது ஒரு பெரும் பேறு. தமிழக அரசியல் இதழ் அலுவலகத்துக்கு ஐயா வந்திருந்தபோது தற்செயலாக அவரைக் காணும் வாய்ப்பு கிட்டியது.

திரைப்படப்பாடல்களில் ஐயா புலமைப்பித்தன் அவர்களின் முதல்பாடல் ‘நான் யார்? நான் யார்? நீ யார்?’ என்ற பாடல். (படம்: குடியிருந்த கோயில்)

அது அவருக்கு முதல் பாடல்தான். அந்த முதல் பாடலையே, மனிதவாழ்வின் இறுதிப்பாடலுக்கான இலக்கணமாக்கியவர் ஐயா புலமைப்பித்தன்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவார்’ என்ற திருமூலரின் வரிகளை நினைவூட்டும் பாடல் அது. ‘பிணியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ? உயிரார் பறப்பார், உடம்பார் கிடப்பார், துணை யார் வருவாரோ?’ என்ற வரிகளும்,

‘எடுப்பார், சிரிப்பார், இழப்பார், அழுவார்’, பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார்’ என்ற வரிகளும் சித்தர்களின் பாடல்கள் அளவுக்குச் சிறப்பானவை.

ஆயிரம் நிலவே வா’ என்ற அடிமைப் பெண் படப்பாடலில், ‘கார்குழலும் பாய்விரிக்கும், கண்சிவந்து வாய்வெளுக்கும்’ என்ற அவரது வரி,
கலிங்கத்துப்பரணியை நினைவூட்டும் கற்கண்டு வரிகள்.

‘அழகென்னும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே?’ என்ற பாடலில் ‘காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இருவிழியில்’ என்று கண்ணுக்குள் ஒரு கல்லூரியை வைத்தவர் ஐயா புலமைப்பித்தன்.

‘முத்துச் சரங்கள் சிந்தாமல் சிந்தும் குறுநகையில், நான் மூன்றாம் தமிழைப் பார்க்கின்றேன் கண்ணே உந்தன் இடையசைவில்’ என்று நடையசைவில் நாடகத் தமிழைப் பார்த்தவர் அவர்.

‘பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்பநினைவு’ என்ற இதயவீணை படப்பாடலில் காஷ்மீரத்தின் கண்கவர் அழகை, ‘மலைமகள் மலர் உடை அணிந்தாள், வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்’ என்று இரண்டே வரிகளில் சில்லென இதமாக்கி இருப்பார் அவர்.

ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் வடிக்கவில்லை. சில நூறுபாடல்களைத்தான் அவர் எழுதியிருப்பார். ஆனால், அவை அத்தனையும் முத்துக்கள்.

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே’

‘சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே’

‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா? இன்னும் இருக்கா?’

‘முத்தமிழ் கவியே வருக, முக்கனிச் சுவையே வருக’

‘மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன்’

‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில்’

‘ஓ வசந்த ராஜா, தேன் சுமந்த ரோஜா’

‘தேன்மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே’

‘(தமிழ்ச்)சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது?’

‘நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரில்’

‘எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா’

‘செண்டுமல்லிப் பூப்போல் அழகிய பந்து சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து’

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’

‘உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது’

‘இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று’

‘பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த’……

இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது…அழகியது… இனிமையானது.

ஈழத்தை எப்போதும் இதயத்தில் சுவாசித்து வாழ்ந்திருந்த அந்த பெருமகனார்க்கு என் இதயம் கனிந்த இரங்கல்! என்று தனது முகநூல் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் மோகன ரூபன் அவர்கள்.

எழுத்தாளர் மோகன ரூபன்

ஐயா தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்த திரு புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணையதள நிர்வாகத்தின் சார்பில் நாமும் அவருக்கு நமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதையும் படிங்க.!