நெல்லையில் திருட்டு வழக்கில் கைதான நபர் லாக்கப்பில் இறந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சுலைமானை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் நேற்று திருட்டு வழக்கில் கைது செய்தனர்.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து சுலைமான் திடீரென உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இருப்பினும் சுலைமான் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பில் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் எழவில்லை.
இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சை நீடித்தது.அதே சமயம் நேற்று இரவு நெல்லை கொக்கிரகுளம் அருகில் தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மர்ம நபர்கள் அவரை கொலை செய்து ஆற்றில் வீசி இருக்கலாம் என்று நெல்லை சந்திப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முகமது உசேன் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது முருகன் என்பவருன் அடிக்கடி பேசியுள்ளார்.
முருகனை பிடித்து விசாரித்தபோது காவல் நிலையத்தில் இறந்ந சுலைமான் தான் முகமது உசேனை கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
முருகன் அளித்த வாக்குமூலத்தில், நான், சுலைமான், முகமது உசேன் மூவரும் நண்பர்கள். சம்பவத்தன்று மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சுலைமான் முகமது உசேனை கத்தியால் கொலை செய்து ஆற்றில் வீசினார்.
நான் அங்கிருந்து தப்பி விட்டேன் என்று தெரிவித்தார்.இதற்கிடையில், சுலைமான் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பைக் திருடிவிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள பாரில் மது வாங்க செல்வது போன்றும்.
அப்போது பைக் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் சுலைமானை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பது போன்ற வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அப்போது சுலைமானுடன் இருந்த முதியவர் வைத்திருந்த பையில் கத்தி உள்பட ஆயுதம் இருந்துள்ளது.பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் ஏற்கனவே சுலைமான் நிலை
குலைந்துள்ளார்.
இதற்கிடையில், திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கியதால் முகமது உசேனை கொலை செய்த விஷயமும் போலீசாருக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் காவல் நிலையத்தில் இருந்த சுலைமான் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.கொலையை மறைத்த காரணத்திற்காக முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் காவல் நிலையத்தில் வைத்து சுலைமான் உயிரிழந்ததில் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.