திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் பெரியகாலனி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை(75).இவரின் மகன் சிலம்பரசன் என்கிற ரிச்சர்ட்(30), இவர் தனது தந்தை பெயரிலான நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி வருவாய்த்துறையில் விண்ணப்பித்திருந்தார்.
வெகு நாட்கள் ஆகியும் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாத தால் திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலரும் வி.ஏ.ஓ சங்கத்தின் மாவட்ட தலைவருமான திருமாலிடம் கேட்டபோது ரூபாய் 5, ஆயிரம் வழங்கினால் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ரிச்சர்ட் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தார்.இதனை அடுத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த ரசாயனம் தடவிய 5,000 ரூபாய் பணத்தை வி.ஏ.ஓ. திருமாலிடம் நேரில் வழங்கினார்.
அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர் கையும் களவுமாக பிடித்து கிராம நிர்வாக அலுவலர் திருமாலை கைது செய்தனர்.
விவசாயி மகனிடம் லஞ்சம் பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வி.ஏ.ஒ திருமால் வாங்கிய லஞ்ச பணத்தில் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம் அருகே பல லட்சம் மதிப்புள்ள சொகுசு வீடு கட்டியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது