திருவள்ளூர் பிடிஒ அலுவலகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு அலுவலர் சங்கீதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அது தவிர பெண்களை இழிவாகவும் சாதி ரீதியாகவும் பேசுவதாக சொல்கிறார்கள் மகளிர் குழு பெண்கள்.
பல லட்சங்கள் முறைகேடு செய்துள்ள சங்கீதா மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவரைக் காப்பாற்றி வருவதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 14 ஒன்றியங்கள் உள்ளன அதாவது 14 பிடியோ அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
ஒவ்வொரு பிடியோ அலுவலகத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் 60 குழு முதல் 1000த்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த சுய உதவிக் குழுவில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் சுய வேலைவாய்ப்பு பணிக்காக அரசு நிதி வழங்கி வருகிறது. திருவள்ளூர் ஒன்றியத்தில் மொத்தம் 927 சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
அமைச்சர் ஆவடி நாசர்.
ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, வேப்பம்பட்டு, ஒதிக்காடு ,புல்லரம்பாக்கம் போன்ற பெரிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த பகுதிக்கு வட்டார மேலாளராக சங்கீதா என்பவர் தலைமை வகித்து பணியாற்றி வருகிறார்.
இவர் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததால் வில்லிவாக்கத்திற்கும் பூண்டிக்கும் பணி மாற்றம் செய்யப்பட்டார் பின்னர் அரசியல் பின்புலத்தில் மீண்டும் ஈக்காடு வட்டாரத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் சுய உதவிக் குழு பெண்கள்.
அது தவிர மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட அமைச்சரான ஆவடி நாசர் அவர்களிடமும் நேரடியாக சென்று புகார் மனு அளித்திருக்கின்றனர் ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்டத்தில் நிறைய அதிகாரிகளை பணி மாற்றம் செய்தாலும் சங்கீதா அசைக்க முடியாத நிலையில் இருக்கிறார். இவருக்கு பின்புலமாக திமுகவைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் அமைச்சர் நாசரும் இருந்து வருகின்றனர் என்கிறார்கள் மகளிர் குழு பெண்கள்.


ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றி அவர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா அறிவாலயமும் தலைமைச் செயலகமும் அறிவுறுத்தியும் கூட சங்கீதா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.


மகளிர் குழு பெண்களுக்கு சாப்பாடு வாங்கித் தருவதில் இருந்து டீ கொடுப்பது வரை எல்லாவற்றிலும் மோசடிதான். திருட்டு கணக்கு எழுதுவதில் மேடம் சங்கீதா பலே கில்லாடியாம்.
ஒரு சாப்பாடு வாங்கி இரண்டு பெண்கள் சாப்பிட வேண்டும் ஆனால் கணக்கு இரண்டு பேருக்கான சாப்பாடு செலவு பில் எழுதப்படும்.
ஆனால் சாப்பாடு வாங்கும் பணமும் மகளிர் குழுக்கானது ஆனால் பில் மட்டும் சங்கீதா மேடம் தனியாக போடுவார் அது அரசின் கணக்கு.

மகளிர் சுய உதவி குழு அலுவலர் சங்கீதா.
அரசின் திட்டங்களை சிறப்பாக கொண்டு செல்லும் பெண் நிர்வாகிகளை ஊக்குவிக்காமல் அவர்களை ஒருமையில் பேசுவதும் ஆபாசமாக அசிங்கமாக பேசுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளார் சங்கீதா.
அலுவல் ரீதியாக பி டி ஓ அலுவலகத்திற்கு அதாவது தனது அலுவலகத்திற்கு வரும் மகளிர் குழுக்களை வாடி போடி என்றும் அறிவு இல்லையா எப்படி நடந்து கொள்வது வயிற்றுக்கு என்ன சாப்பிடுகிறீர்கள் மண்டையில் களிமண் இருக்கிறதா மூளை இருக்கிறதா என்றெல்லாம் பேசுவதாக மகளிர் குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கொப்பூர் பகுதியை சேர்ந்த நிர்மலா என்பவர் மிகச் சிறப்பாக பணியாற்றி பெண்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றவர் அவர் இவருக்கு லஞ்சம் தரவில்லை என்ற காரணத்தினாலும் இவருக்கு ஜால்ரா தட்டவில்லை என்கிற காரணத்தினாலும் வேலையை விட்டு விரட்டி விட்டார் அது தவிர மெர்சி என்கிற பெண்ணையும் வேலையை விட்டு நீக்கி விட்டார் சங்கீதா குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு ஈக்காடு பகுதியில் குழு ஒன்றுக்கு 25 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன அதன் மதிப்பு 3950. ஆனால் ஒரு கோழிக்குஞ்சியின் விலை வெளிமார்க்கெட்டில் 20 ரூபாய் ஏறக்குறைய 25 கோழிக்குஞ்சுகளின் விலை 500 ரூபாய் மட்டுமே. ஆனால் சங்கீதா 3450 கொள்ளை அடிக்கிறார்.
கோழிக்குஞ்சு வழங்கிய அடுத்த நாளே இறந்து போனது இது குறித்து மகளிர் குழு பெண்கள் திட்ட அலுவலர் செல்வராணியிடம் இந்த செய்தியை கொண்டு சென்றதற்கு எனக்கு இந்த தகவலே தெரியாது சங்கீதா எங்கே கோழிக்குஞ்சு வாங்கினார் என்கிற தகவலையும் எனக்கு அளிக்கவில்லை என்று மறுத்துவிட்டார் ஆனால் அவர் மீது திட்ட அலுவலர் செல்வராணி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் சங்கீதா மகளிர் குழு பெண்களிடம் திட்ட அலுவலர் செல்வராணிக்கு நான் எல்லா வகையிலும் அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அவரை அனுசரித்துத்தான் போகிறேன் என்று வெளிப்படையாகவே பேசுகிறார்.
பெண்கள் மட்டுமே செயல்பட வேண்டிய குழுவில் காக்களூரை சேர்ந்த காயத்ரி என்பவரின் கணவர் சுரேஷ்குமார் என்பவர் எல்லா கூட்டங்களுக்கும் வருகிறார். google மீட்டிலும் இணையதளங்களில் நடக்கும் கூட்டங்களிலும் சுரேஷ் தான் விளக்கம் அளிக்கிறார். பெண்கள் மட்டும் இருக்க வேண்டிய குழுவில் ஏன் சுரேஷ் இருக்கிறார் என்று கேட்டால் தன் மனைவி காயத்ரி மௌன விரதம் மேற்கொண்டுள்ளார் என்று நக்கலான பதில் சொல்லுகிறார்.
ஒரு குழுவிற்கு 15 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை தொழில் தொடங்க மகளிர் குழுவில் கடன் உதவி வழங்கப்படுகிறது. கடன் உதவித்தொகையின் மதிப்புக்கு ஏற்ற மாதிரி சங்கீதாவுக்கு லஞ்சம் தர வேண்டும். இல்லை என்று சொன்னால் அந்த குழுவுக்கு லோன் தர மாட்டார்.
குறிப்பாக வேப்பம்பட்டில் எட்டு லட்சம் ரூபாய் லோன் வழங்க 6500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அந்த பகுதி பெண்கள் தங்களுக்கு லோன் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டனர். கடந்த நான்கு வருடங்களாக ஈக்காடு பிளாக்கில் பணியாற்றி வரும் சங்கீதா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன ஆனால் அவர் அமைச்சர் நாசரின் கருணையால் ஆட்சி அதிகாரம் செலுத்தி வருகிறார் என்கிறார்கள் பெண்கள்.
இதே நிலை நீடித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் உதயசூரியனின் வெளிச்சம் பிரகாசமாக இருக்காது என்கிறார்கள் பெண்கள். திமுக என்கிற பெரிய கட்சி பெண்களை நம்பித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து தான் பெண்களுக்கான சுய உதவிக் குழுக்களை கட்சியும் அரசும் சிறப்பாக செயல்படுத்தி நடத்தி வருகிறது. அதில் ஊழல் செய்யும் பேர்வழிகளை அமைச்சர் ஆதரிப்பது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் பொதுமக்கள்.
ஒரு தனிப்பட்ட நபர் எல்லா வித ஊழல்களையும் செய்யும் ஒரு அதிகாரி வேண்டுமா? ஆயிரக்கணக்கான பெண்களின் வாக்கு வேண்டுமா என்பதை அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர் பெண்கள். ஆனால் விரைவில் சங்கீதாவின் முகத்திரை கிழிக்கும் வகையில் ஆதாரத்துடன் பல வீடியோக்கள் வெளிவரும் என்கிறார்கள் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்.
சங்கீதாவின் அடாவடித்தனங்களும் அதிகாரத் திமிர் குறித்தும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் அண்ணா அறிவாலயத்திற்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களுக்கு எதிராகவும் சுய உதவிக் குழு பெண்களுக்கு எதிராகவும் செயல்படும் மேலாளர் சங்கீதா மீது கலெக்டர் விசாரணை நடத்தி உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இந்த செய்தி குறித்து திட்ட அலுவலர் செல்வராணி பகுதி மேலாளர் சங்கீதா ஆகியோர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் அதை நாங்கள் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
