மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்.
கொற்றவை முகநூல் பதிவிலிருந்து பதிவிடப்பட்டுள்ள இந்த கவிதை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிறந்த நொடியில் கள்ளிப் பாலா தாய்ப் பாலா என்ற ஆபத்து!
நிழலையும் எவனாவது வன்புணர வந்து விடுவானோ என்னும் ஆபத்து!
காதலை ஏற்க மறுத்தால் அமிலம் தெறிக்கும் ஆபத்து!
பருவம் எய்திய பின் உடலே கருப்பையாதல்
கரண்டி பிடிக்க மறுத்தால் தாலி அறுக்கும் ஆணைகள்!
தாலி கட்டுவதே கரண்டி பிடிக்கவும்
காலை விரிக்கவும் தானே!
களைப்பில் கணவனோடு படுக்க மறுத்தால் யோனிச் சிதைவு!
அது வல்லுறவில்லை என்னும் சட்டங்கள்!
நம் உடலுக்கான விதிமுறைகளை யாரோ எழுதி இருக்க
அது பற்றிய பிரக்ஞை கூட இல்லாத
பெண்களாக நாம் வளர்க்கப்பட்டு
மூச்சு முட்டி திணறும் போது
நீ எப்படி இப்படி திணறுகிறது
என்று கூக்குரலிடலாம்
நீ பெண் வாயை மூடு வேசி
என்னும் பட்டங்கள் எல்லாம் கடந்து
பிறப்பும் வாழ்வும் போர்களமென மாறிப் போனாலும்
புன்னகை பூக்கும் பெண்களே
மகளிர் தின நல் வாழ்த்துகள் 💐
நமை நதி என்பார்கள்
தேவதை என்பார்கள்
தெய்வம் என்பார்கள்
நாம் படைக்கப்பட்டதே
ஆணுக்கு சேவகம் செய்ய என சொல்லி சொல்லி வளர்த்து மிருகமாக்கிய
கயவனின் கண் நம் மீது விழுகையில்
தேவடியா என்பார்கள்
நீ என்ன உடை உடுத்தி இருந்தாய் என்பார்கள்
பொம்மைக்கு உடை உடுத்தி அழகு பார்த்த சிறுமி ஆர்த்தி என்ன உடை உடுத்தி அழைப்பு விடுத்தாள் என்று கேட்டுப் பாருங்கள்
அவன் பொறுக்கி அவனை சுட்டுத் தள்ளுங்கள் என்பார்கள்!
எத்தனை தோட்டாக்களை எடுப்பது மகளே!
உலகில் உள்ள துப்பாக்கிகள்
தோட்டாக்கள் அனைத்தையும்
கொண்டு வந்து நிரப்பினாலும்
அச்சமில்லை அச்சமில்லை
என்று வலம் வரும் ஆண்களை
வளர்த்துவிடுவது ஆணாதிக்கம்
என்று கதறினால்
மீசைகளுக்கு கோவம் வருகிறது!
அந்த கோவம் தானடா ஆணாதிக்கம்
அது உங்களை மனிதனாக உருவாக்காமல்
ராஜாக்களாக
எஜமானர்களாக
பெண்ணை வெறும் முலைகளாகவும்
யோனியாகவும் பார்க்கவே கற்றுத் தருகிறது என்றால்
கேடு கெட்ட பெண்ணியவாதிகளென
சாபங்கள் வழிகின்றன!
ஒரு நொடி கணவனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும்
மனைவியின் உடலில்
ஓராயிரம் இரத்தக் கட்டுகள்
ஆம்பிளைனா அப்ப்டித்தான் இருப்பான்
விட்டுக்கொடுத்து போ
அவருக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோ
அறிவீர்கள் அல்லவா
பெண்களுக்கான
இந்த தாலாட்டு பாடல்களை
பெருமக்களே
எங்கள் உடல்கள் சிதையக்
காரணம் எவனோ ஒரு பொறுக்கியோ
அல்லது சைக்கோவோ இல்லை
ஆஆஆஆஆம்பிளை என்று ஏற்றி வளர்க்கும்
பொம்பளைதான நீ என்று தாழ்த்தி
வளர்க்கும் நீங்கள் தான்!
#womensdayspecial
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்.