chennireporters.com

ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன் அறப்போர் இயக்கம் கேள்வி?

கடந்த ஆட்சி ஊழல்கள் மீது விசாரணை நடத்த அனுமதி தராமல் தாமதிக்கும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சிவ் தாஸ் மீனா IAS மற்ற சில IAS அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கோரி அறப்போர் முதல்வருக்கு புகார்!

தமிழ்நாட்டின் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி மற்றும் துறையின் தலைமை பதவி ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்து ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஊழல் புகார்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு விசாரணை செய்ய அனுமதி கொடுக்காமல் பல மாதங்கள் தாமதித்து வருகிறது.

சிவதாஸ் மீனா ஐஏஎஸ்

கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த இந்த அரசு இதுவரை ஒருவர் மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் திணறுவதற்கும் பல ஊழல்களில் விசாரணையே துவங்க முடியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தவிப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணம். அறப்போர் இயக்கம் இது சம்பந்தமான புகாரை முதலமைச்சருக்கும் தலைமை செயலருக்கும் அனுப்பியுள்ளோம்.

2017 இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஊழல் கண்காணிப்பு ஆணையர் யாராக இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் அரசாங்கத்திலிருந்து தன்னிச்சையாக செயல்பட வேண்டியவர் என்றும் ஏற்கனவே அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறையின் தலைவராக இருப்பின் அவர் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியவராக இருப்பார் என்றும் அவரால் தன்னிச்சையாக இயங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் வேறு எந்தத் துறையிலும் இல்லாத அரசு மற்றும் அரசியல் தலையீடு இல்லாத வகையில் தன்னிச்சையாக ஊழல் கண்காணிப்பகம் மட்டும் பார்க்கக் கூடிய வகையில் உச்சபட்ச நேர்மையான ஒரு நபரை கண்காணிப்பு ஆணையராக நியமிக்க வேண்டும் என்பது உயர் நீதிமன்ற தீர்ப்பு. ஆனால் இந்தத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலராகவும் ஊழல் கண்காணிப்பகத்தின் ஆணையராகவும் திரு திரு சிவ தாஸ் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் சொன்னது போல திரு சிவ தாஸ் மீனா ஐஏஎஸ் தன்னிச்சையாக இயங்காமல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கத் துறையின் கீழ் வரும் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி சம்பந்தமான அறப்போரின் ஊழல் புகார் மீது ஐஏஎஸ் மற்றும் பிற அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்காமல் எட்டு மாதத்திற்கும் மேல் தாமதப்படுத்தினார்.

மத்திய அரசாங்கம் 2018ல் ஊழல் தடுப்பு சட்டத்தில் ஒரு மாற்றம் கொண்டு வந்து இனி எந்த ஒரு புகாரியிலும் பொது ஊழியர்களை விசாரிக்கப்பட வேண்டும் என்றாலும் அந்தத் துறையின் தலைவரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் விசாரணையை தொடங்க முடியும் என்றது. இதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக உள்ள திரு சிவ தாஸ் மீனா அவர்கள் சென்னை கோவை மாநகராட்சி ஊழல்கள் சம்பந்தமாக பொது ஊழியர்களை விசாரிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக செயல்படும் தமக்கே கடிதம் அனுப்பி அனுமதி பெற வேண்டும்.

 

இது ஒரு அப்பட்டமான Conflict of Interest. நகராட்சி நிர்வாக செயலர் திரு சிவதாஸ் மீனா 8 மாத காலத்திற்கும் மேல் பொதுஊழியர்களை விசாரிக்க அனுமதி தராமல் காலம் தாழ்த்தினார். ஊழல் கண்காணிப்பு செயலரான திரு சிவ தாஸ் மீனா IAS அதன் மேல் கேள்வி கேட்கவில்லை. தன் சக ஐஏஎஸ் அதிகாரிகளை மற்றும் தனக்கு கீழ் வரும் மாநகராட்சி அதிகாரிகளை காப்பாற்ற செய்யும் இந்த தாமதத்தினால் சென்னை கோவை மாநகராட்சி ஊழல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டது.

இன்று வரை அது தாக்கல் செய்யப்படவில்லை. ஜூன் 2022-ல் ஒரு ஆங்கில நாளேட்டில் விசாரணைக்கு அனுமதி கொடுக்காமல் எட்டு மாதத்திற்கு மேல் தாமதிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளிவந்த பிறகே பொது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் சில புகார்களிலும் இந்த தாமதம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. எனவே ஊழல் கண்காணிப்பு ஆணையராக சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது படி நேர்மையாக தன்னிச்சையாக இயங்கக்கூடிய வேறு துறைகள் பார்க்காத ஒருவரை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

                                                           சிவன் அருள் ஐஏஎஸ்
அதேபோல் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அறப்போர் புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி கேட்டும் தராமல் தாமதித்து வருகிறார்கள். பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் மீது அறப்போர் இயக்கம் ஜனவரி 2022 ல் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தது.

இதை விசாரிக்க அனுமதிக்கோரியும் பத்திரப்பதிவுத்துறை செயலர் திருமதி ஜோதிநிர்மலா சாமி ஐஏஎஸ் மற்றும் பத்திர பதிவுத்துறை தலைவர் திரு சிவன் அருள் ஐஏஎஸ் பொது ஊழியர்கள் மேல் விசாரிக்க அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

    ஜெயராம் வெங்கடேசன்

ஏற்கனவே பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலில் நடவடிக்கை எடுக்காமல் திருமதி ஜோதிநிர்மலாசாமி IAS மற்றும் திரு சிவனருள் IAS பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராயபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சட்டவிரோதமாக மோசடியாக பதிவு செய்த அங்கயர்கன்னியை ஓய்வு பெற அனுமதித்தது நமக்குத் தெரியும்.

பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலில் அவர்கள் அலுவலர்களை காப்பாற்றும் வேலையை இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் மீதும் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

விசாரணைக்கு துறை தலைவர்கள் அனுமதி கொடுக்க கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் புகார் முற்றிலுமாக ஒரு பொய் புகார் ஆக இருப்பின் அந்த பொது ஊழியர் பாதிக்கப்படக்கூடாது என்பதே. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராயபுரத்தில் பதிவு செய்தது.  மோசடி ஆவணம் என்று பத்திரப்பதிவு துறையே வெளியிட்ட பிறகும் பதிவு செய்யப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நில ஆவணங்கள் பல ரத்து செய்த பிறகும் அதை பதிவு செய்த பொது ஊழியர்கள் மீது மட்டும் விசாரணை நடத்த அனுமதி தராதது அந்த பொது ஊழியர்களை காப்பாற்றுவதை தவிர வேறு எதற்கு?

எனவே இந்த துறை தலைவரிடமே அனுமதி கோரும் சட்ட திருத்தம் ஊழலையும் ஊழல்வாதிகளையும் காப்பாற்ற மட்டுமே பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அறப்போரின் பல புகார்களான பேருந்து நிழற்குடை மாநகராட்சி ஊழல், முன்னாள் அமைச்சர் திரு வைத்தியலிங்கம் லஞ்சம் வாங்கிய புகார், நிலக்கரி போக்குவரத்து ஊழல், KP பார்க் ஊழல் என பல அறப்போர் புகார்கள் மீது விசாரிக்க அனுமதி கோரப்பட்டும் பல மாதங்களாக ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் துறை தலைவர்கள் அனுமதி தர தாமதிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.

கடந்த ஆட்சியின் ஊழல்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை ஒருவர் மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கும் பல புகார்களில் இன்னும் விசாரணையே துவங்காமல் இருப்பதற்கும் சில IAS அதிகாரிகள் செய்யும் தாமதம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

எனவே இதன் மீது உடனடி கவனம் செலுத்தி முதல்வர் அவர்கள் தன்னிச்சையாக இயங்கக்கூடிய நேர்மையான ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமிப்பதும், சட்டப்படி மூன்று மாதத்திற்குள் அனுமதி தராமல் தாமதிக்கும் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது தொடரா வண்ணம் உடனடி நடவடிக்கை கோரியும் அறப்போர் இயக்கம் முதல்வர் மற்றும் தலைமை செயலருக்கு புகார் அனுப்பி உள்ளது.

 

இதையும் படிங்க.!