புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் ‘ஈதுல் ஃபித்ர்’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஈது’ என்ற வார்த்தைக்கு ‘பெருநாள்’ என்றும், ‘பித்ர்’ எனும் அரபிச் சொல்லுக்கு ‘நோன்பை விடுதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
நோன்பு முடிந்ததின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, இஸ்லாமிய சகோதரர்கள் ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டவுடன் ‘சதகத்துல் ஃபித்ர்’ எனும் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய தர்மத்தை வழங்கத் தொடங்குவர். தெரிந்தோ தெரியாமலோ நோன்பில் ஏற்பட்ட சிறு தவறுகள் இந்த ஃபித்ர் தர்மத்தால் நீக்கப்பட்டு நோன்பு முழுமை பெறும்.
பெருநாள் அன்று அதிகாலை துயிலெழுந்து வழக்கம்போல் ஃபஜ்ர் என்னும் வைகறைத் தொழுகை முடித்து, நேரத்தோடு குளித்து, புத்தாடையணிந்து, பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவர். தொழுகை முடிந்ததும், ஆனந்தப் பேருவுவகையால் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வர். உறவினர்களின் வீடுக ளுக்குச் செல்வர், மதியம் சிறந்த உணவை சமைத்து உண்பர். வெளிப் படையாக பார்த்தால்,பெருநாள் என்பது அவ்வளவுதான்! ஆனால், அந்தப் பெருநாள் தரும் பாடமும் செய்தியும் மகத்தானவை.
இஸ்லாமியர்களுக்கு இரண்டே பெருநாள்கள்தான். ஒன்று நோன்புப்பெருநாள்.மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். இந்த இரு பெருநாள்களும் வெறும் கொண்டாட்டத்துக்கான நாட்களல்ல. மிக உயர்ந்த லட்சியத்தையும், மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. வாண வேடிக்கை, ஆடல், பாடல், கூத்து, கும்மாளம், கேளிக்கை என எந்த ஆரவாரமும் இல்லாத சாந்திமிக்க அமைதித் திருநாள்களே இப்பெருநாள்கள். வருடப் பிறப்பு வந்தால்கூட குடித்துக் கும்மாளமிடும் சூழலுக்கிடையே கண்ணியம் மிளிரும் புண்ணிய நாள்களே இவை.

பசியறியும் பயிற்சி, தியாகத்தின் பாடம் என்ற இருபெரும் பேருண்மைகளை புரியவைத்து அதற்கு நன்றி செலுத்தும் தருணங்களாகவே பெருநாள்கள் கொண்டாடப்படு கின்றன. பெருநாள் என்பது இறைவனை வணங்குவது, அவன் புகழ்பாடுவது, அவனுக்கு நன்றி செலுத்துவது என்ற அம்சங்கள் மட்டும்தாம்.
`அல்லாஹு அக்பர்’ (இறைவன் மிகப்பெரிய வன்) என்று சொல்லி இறைவனைப் புகழும் தக் பீர்தான் பெருநாள் தினத் தின் பெரு முழக்கமாகும். அதனால்தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய தருணங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ‘உங்களின் ஈதுப் பெருநாட்களை தக்பீரைக் கொண்டு அழகுபடுத்துங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை. நிறம், குலம் என்ற வேறுபாடு இல்லை. எவ்வளவுதான் பணம் படைத்தவனாயினும் இறைவன் முன் அவனும் அடிமையே! `இறைவா… நாங்கள் உன் அடிமைகளே. நீயே மிகப்பெரியவன்!’ என்று உரத்துச் சொல்ல வேண்டும்.
இப் பெருநாளின்போது நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். இறைவனைப் புகழ்ந்தவண்ணம் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த உரையில் மனிதனிடம் களையப்படவேண்டிய தீமைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கண்டித்தும் நன்மைகளை அடையாளப்படுத்தி, அவற்றை ஊக்கப்படுத்தவும் செய்வார்கள்.
இதே வழியில், இன்றும் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களிலும் ஒன்று கூடினோம்; தொழுதோம்; கலைந்தோம் என்றில்லாமல் இன்றையச் சூழலில் மனிதனிடம் மிகுந்துவரும் தீமைகளை எச்சரித்தும், நன்மைகளை மேலோங்கச் செய்ய வலியுறுத்தியும் பெருநாள் தொழுகையின்போது உரை நிகழ்த்தப்படுகிறது.
நமது இந்தியத் திருநாட்டில், இந்த ‘ஈதுல் பித்ர்’ நன்னாளில் இஸ்லாமியர்களை அனைத்து சமயத்தினரும் வாழ்த்துவதும், இஸ்லாமியர் வீடுகளில் விருந்துண்டு மகிழ்வதும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் மாபெரும் கருத்தை பறைசாற்றுவதின் ஓர் அங்கமாகும். ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம்.தலைவர்கள் வாழ்த்து;
ரமலான் பண்டிகை இன்று நாடு முழுக்க கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து, நல்வழியில் முன்னேறும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். நமது சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வை இந்த பண்டிகை அதிகரிக்கட்டும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து;
ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், “அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளை கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திமுக தலைவர் என்ற முறையிலும், முதல்வர் என்ற பொறுப்பிலும் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து;
அதேபோல அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோல பல்வேறு அரசியல் தலைவர்களும் ரமலான் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களிடன் அன்பைப் பரிமாறி ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்த்து அட்டையாக இதனை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்து அட்டையில் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் படங்கள் இடம்பெற்றுள்ளன.முன்னதாக அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், “ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது. எனவே, திங்கட்கிழமை (இன்று) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்’ என தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.