ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் டைடல் பார்க் சுமார் 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னால் முதலமைச்சர் டைடல் பார்க் திறந்து வைக்க வரப் போகிறார் என்ற தகவல் வந்ததும் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி துறை என அனைத்து துறையினரும் சாலை மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் நெமிலிச்சேரி பஞ்சாயத்து மற்றும் ஆவடி நகராட்சி இணைந்து நெடுஞ்சாலையில் உள்ள மண்ணையும் மற்றும் இரு புறங்களையும் சுத்தம் செய்து வந்தனர். நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவற்றில் சில பகுதிகளில் மட்டும் கருப்பு வெள்ளை பெயிண்ட் அடித்து விட்டு பல இடங்களில் பெயிண்ட் அடிக்காமலேயே விட்டுவிட்டனர்.
அதேபோல கேஸ் இணைப்புக்காக அதாவது டொரன்டோ நிறுவனத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த பள்ளங்கள் அப்படியே இருந்து வருகிறது. முதல்வர் இந்த வழியாகத்தான் விழா முடிந்து சென்னை செல்கிறார் என தெரிந்தும் கூட அதிகாரிகள் அந்த சாலைகளை சரி செய்யவில்லை.
ஆனால் ஆவடி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முதலமைச்சர் வந்து சென்றதற்கு செலவிடப்பட்ட தொகை என ஒரு பெரும் தொகை பில் போடப்பட்டதாக அலுவலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல நோய் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் விழா நடக்கும் இடங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் போட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ஆவடி நகராட்சி நிர்வாகமும் நெமிலிச்சேரி பஞ்சாயத்து நிர்வாகமும் ப்ளீச்சிங் பவுடர் போடாமல் சுண்ணாம்பு பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய்க்கு பொய்க் கணக்கு எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆவடி கவரப்பாளையம் பகுதியில் இருந்து திருமுல்லைவாயில் வரை சாலையின் இடது புறத்தில் இரண்டடிக்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆவடி மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு எதிரிலேயே பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்படாமலேயே இருக்கிறது.
அதேபோல் தனிஷ்க் நகை கடை அருகிலும் லலிதா ஜுவல்லரி மற்றும் ஜி.ஆர்.டி நகைக்கடை அருகிலேயும் பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே இருக்கிறது. நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட விபத்துகளும் நடைபெறுகிறது. பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் முதல்வர் இந்த பகுதிக்கு வருவதை தெரிந்தும் கூட சாலைகளை சரி செய்யாமல் சாலைகள் சரி செய்வதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டதாக பொய்யான கணக்கு எழுதி இருப்பதாக சொல்லுகிறார்கள் அரசு அதிகாரிகள் சிலர்.
இதுகுறித்து ஆவடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி AD HIGHWAYS அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் நம்மிடம் பேச விரும்பவில்லை அதேபோல ஆவடி மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளும் நம்மிடம் பேச விரும்பவில்லை.முதல்வர் இந்த பகுதிக்கு வருகிறார் என தெரிந்தும் கூட சாலைகளை செப்பனிடாமல் சாலைகள் சரி செய்ய பல லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாக பொய்யான கணக்கு எழுதி இருப்பதாக சொல்லுகிறார்கள் அதிகாரிகள். முதலமைச்சரையே பட்டப் பகலில் ஏமாற்றி இருக்கும் இந்த அதிகாரிகளை கலெக்டர் உடனடியாக அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்க செய்ய வேண்டும் என்கிறார்கள் அறப்போர் இயக்கத்தினர்.