chennireporters.com

#golden son who turned the barren land into a forest; தரிசு நிலத்தை வனமாக்கிய தங்க மகன். மரம் மாசிலாமணி.

இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இடையில் சும்மா கிடந்த மண்ணை பசுமையான காடாக்கி மகுடம் சூடி இருக்கிறார் மரம் மாசிலாமணி. அவரின் செயல்பாடுகளைப் பற்றி தமிழ் மாநில காங்கிரசின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தொழிலதிபர் வழக்கறிஞர் என பன்முகங்களைக் கொண்ட மலையூர் புருஷோத்தமன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் மரம் மாசிலாமணி பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்.

மலையூர்  வீ.புருஷோத்தமன்.

அந்த செய்தியின் தொகுப்பை வாசித்த பிறகு நமக்கே அந்த இடத்தை பார்வையிட்டு ஐயா மரம் மாசிலாமணி அவர்களுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று ஆவல் எழுந்திருக்கிறது.

மண் மனித வாழ்வியலின் ஆதாரமாக விளங்குகிறது அது உயிரினங்களை உருவாக்குகிறது. அதனால் மானுட இனம் பசியில்லாமல் வாழ்வதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்று சொல்லலாம்.தரிசு நிலத்தைத் தவம் இருந்து வனமாக்கிய ஒரு மாமனிதர் – ‘மரம்’ மாசிலாமணி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தனிமனிதன் நினைத்தால் ஒரு காட்டையே உருவாக்க முடியுமா? ஆம் முடியும் என்று வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெருமை, ஐயா ‘மரம்’ மாசிலாமணி அவர்கள்.

மரம் மாசிலாமணி.

உத்திரமேரூர் அடுத்த கைத்தண்டளம் கிராமத்தில், சுடுதரிசாகக் கிடந்த சுமார் 15 ஏக்கர் நிலத்தை, இன்று கண்கள் குளிரும் பசுமைச் சோலையாக மாற்றியிருக்கும் அந்த உழைப்பின் பின்னால் ஒரு பெரிய தவம் இருக்கிறது.

இயற்கையின் மீது கொண்ட தீராத காதலால், அரசு வேலையைத் துறந்துவிட்டு, முழுமையாக மரம் வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களோடு நெருங்கிப் பழகி, இயற்கை வேளாண் நுணுக்கங்களைக் கற்றவர். இன்று அவர் பெயரோடு ‘மரம்’ என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது அவரது விடாமுயற்சிக்குச் சான்று.எழில்சோலை ஒரு மினி அமேசான் என்றே சொல்லலாம். சாதாரண மரங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் தேடித் தேடி அரிய வகை மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். அரிய மரங்கருத்ராட்சம், திருவோடு, மகாவில்வம், கொடம்புளி, அசோக மரம், வெண் தேக்கு என 600-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன.பல நூறு மூலிகைச் செடிகள் இங்கே இயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன. மரங்கள் வளரத் தொடங்கியதும், மனிதர்கள் நடமாட அஞ்சிய அந்த இடத்திற்குத் தேன்சிட்டுகள், மயில்கள், ஆந்தைகள் மற்றும் அரிய வகை இடம்பெயரும் பறவைகள் வரத் தொடங்கிவிட்டன. பல்லுயிர் பெருக்கத்தையும் இந்த காடு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.இந்தப் பண்ணையை ஒரு சுற்றுலாத் தலமாகப் பார்க்காமல், தாவரவியல் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் ஒரு “வாழும் நூலகமாக” (Living Library) மாற்றி வைத்துள்ளார். வெறும் பண்ணையோடு நிறுத்தாமல், சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களுக்கு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரம் இருக்க வேண்டும்” என்பதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறார்.

புவி வெப்பமயமாதல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், வெறும் பேச்சோடு நிற்காமல், தன் வியர்வையை நிலத்தில் சிந்தி ஒரு சோலையையே உருவாக்கிய மாசிலாமணி ஐயாவின் பணி போற்றுதலுக்குரியது.

“மரம் வளர்ப்போம்… மழை பெறுவோம்” என்பது வெறும் முழக்கம் அல்ல; அது நமது வாழ்வாதாரம் என்பதை இவரது ‘எழில்சோலை’ நமக்கு உணர்த்துகிறது.

இதையும் படிங்க.!