12-ம் வகுப்பு தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் எடுத்து சாதித்து காட்டியுள்ளார் மாணவர் சின்னதுரை. தனது சாதனையின் மூலம் சாதியத்தைத் திருப்பி அடித்த வீர ஆண்மகன் என்பதை நிருபித்து காட்டியுள்ளார் சின்னதுரை.
சாதனை மாணவர் சின்னதுரை.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் அரசுப்பள்ளியில் நாங்குநேரியை சேர்ந்த மாணவன் சின்னதுரை 12-ம் வகுப்பு படித்து வந்தார்., நன்றாகப் படிக்கக் கூடிய அவரை சக மாணவர்கள் சாதிய ரீதியில் துன்புறுத்தியுள்ளனர். அதை ஆசிரியரிடம் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சின்னதுரையை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டினர். அதைத் தடுத்த அவரது சகோதரி சந்திரா செல்விக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை நேரில் சந்தித்து உரிய உதவிகள் செய்வதாக உறுதியளித்தார்கள். பாதிக்கப்பட்ட சிறுவன் சின்னதுரைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாணவன் சின்னதுரை தொடர் சிகிச்சையில் இருந்ததால் அவரால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பள்ளிக்குச் சென்று எழுத இயலவில்லை. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை அனுமதி பெற்று அந்தத் தேர்வுகளை மருத்துவமனையில் இருந்து எழுத அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சின்னதுரை 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளார்.
சாதிய பாகுபாடு காரணமாக அரிவாள் வெட்டுக்கு உள்ளான சின்னதுரை தனக்கு ஏற்பட்ட சோதனைகளை மீறி அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகி இருப்பது பலராலும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் அன்பில் மகேஸ், அந்தச் சிறுவனைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், ”சம்பவம் நடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சின்னதுரையை தொடர்புகொண்டு உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் சேருவதற்கு உதவி, அவரின் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தன்னால் இந்த அளவுக்கு மதிப்பெண் எடுக்க முடிந்ததை நினைத்து சின்னதுரை மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரிடம் பேசியபோது, “வள்ளியூர் பள்ளியில் படித்தபோது சாதிய வன்மத்தால் வெட்டப்பட்டேன். கைகளில் ஏற்பட்ட பலத்த வெட்டுக் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். ஆனாலும் எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதே பாடங்களைப் படிக்கத் தொடங்கினேன்.
எனக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பல வழிகளில் உதவிகளைச் செய்தார்கள். என்னால் தொடர்ந்து வள்ளியூர் பள்ளியில் படிக்க முடியாது என்பதால் பாளையங்கோட்டை துய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் சேர உதவினார்கள். எனது தாய் அம்பிகாவின் பணியிடத்தை ரெட்டியார்பட்டிக்கு மாற்றியதோடு, அருகிலேயே குடிசை மாற்று வாரிய குடியிருப்பிலும் வீடு ஒதுக்கினார்கள். அரசின் ஒத்துழைப்பு காரணமாகவே என்னால் இந்த அளவுக்குப் படிக்க முடிந்திருக்கிறது. கல்லூரியில் பி.காம் படிக்க ஆசைப்படுகிறேன். தொடர்ந்து நல்ல முறையில் படித்து உயர் பதவிக்கு வர வேண்டுமென்பதே என் விருப்பம்” என்றார், சாதனை மாணவர் சின்னதுரை.
மாணவர் சின்னதுரைக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார் விடுதலைசிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாங்குநேரி சின்னதுரை தனக்கு நேர்ந்த இழிவுகளையும் தாக்குதல்களையும்அதனால் ஏற்பட்டுள்ள ஆறாத வடுக்களையும் தீராத வலிகளையும் தனது கல்வி வேட்கையென்னும் பெருநெருப்பால் பொசுக்கியுள்ளான். இவனுக்குள் அம்பேத்கர் என்னும் தீ கங்கு கனன்று கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவன் பெற்றுள்ள மதிப்பெண்கள்.
தொலைபேசியில் அவனைத் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். “சென்னையில் தங்கிப் படிக்கலாம் வா ” என்றேன். ” நெல்லை சேவியர் கல்லூரியில் படிக்க விரும்புகிறேன் அண்ணா” என்று உடனே விடையிறுத்தான். அவனது குரலில் தெளிவும் உறுதியும் தெறித்தது. அவனுடைய தாயாரிடமும் எனது மகிழ்வைப் பகிர்ந்துகொண்டேன்.
சாதிவெறித் தாக்குதலிலிருந்து அவனைக் காப்பாற்றிய அவனுடைய தங்கை சந்திராவிடம் நான் நலம் விசாரித்ததாகச் சொல் என்று கூறினேன். பி.காம் படித்து பின்னர் ஆடிட்டராக வர வேண்டும் என்கிற அவனது கனவு நனவாகட்டும். தம்பி சின்னதுரை, தனது
இந்த சாதனையின் மூலம் சாதியத்தைத் திருப்பித் தாக்கியுள்ளான்.
சாதிய தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்ன துரையை நேரில் அழைத்து நீளம் பண்பாட்டு மையத்தின் தலைவர் பா ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு தேவையான உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.