தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கப்போகும் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்ட் தற்போது இனையத்தில் வைராகி வருகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்திவிட்டார். ஆனால், அ.தி.மு.க கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் விரும்பும் நபர்கள் தலைமையிடம் பேசலாம் என்று வாய்மொழி உத்தரவிடப்பட்டிருந்தது. அதே போல, மூன்று தகுதியான வேட்பாளர்கள் பட்டியலை மாவட்டச் செயலாளர்கள் அனுப்பியுள்ளனர்.
அந்த லிஸ்டில் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான சீனியர்களிடமிருந்தும் ஒரு பட்டியலை பெற்றுள்ளார். இதனை ஒப்பிட்டு உத்தேசப் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளார் எடப்பாடி. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் அ.தி.மு.க தலைமை தேர்வு செய்து இருக்கும் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு முன்னாள் எம்.பி டாக்டர் வேணுகோபால், வட சென்னைக்கு அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ அல்லது பாலகங்கா போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. தென் சென்னைக்கு முன்னாள் எம்.பி ஜெயவர்தன், மத்திய சென்னைக்கு முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.விஜயகுமார், திருப்பெரும்புதூருக்கு முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.
அரக்கோணம் தொகுதியில் திருத்தனி கோ.அரி, மற்றும் சுமைதாங்கி ஏழுமலையும் ரேசில் இருக்கின்றனர். வேலூருக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, கிருஷ்ணகிரிக்கு கே.பி.எம்.சதீஷ், (கே.பி.முனுசாமி மகன்), தருமபுரில் சந்திரமோகன் (கே.பி.அன்பழகன் மகன்), திருவண்ணாமலையில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசுதா, ஆரணியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் பரிசீலனையில் இருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சியில் முன்னாள் எம்.பி டாக்டர் கே.காமராஜ், சேலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செம்மலை அல்லது சேலம் இளங்கோவன் ஆகியோர் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். நாமக்கலுக்கு மோகனும், ஈரோட்டுக்கு கே.வி.ராமலிங்கமும், கோயம்புத்தூருக்கு சர்மிளா சந்திரசேகரும், பொள்ளாச்சிக்கு பேராசிரியர் கல்யாண சுந்தரமும் பரிசீலனையில் இருக்கிறார்கள்.
திண்டுக்கல்லை பொறுத்தவரை கண்ணன் (நத்தம் விசுவநாதனின் மருமகன்), கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது சின்னசாமி, திருச்சிராப்பள்ளி – பா.குமார், பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி, கடலூர் – ராஜேந்திரன் அல்லது சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் (தனி) – முருகுமாறன் ஆகியோர் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.
நாகப்பட்டினம் தொகுதிக்கு சரவணனும், தஞ்சாவூருக்கு மா.சேகர் (ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர்) போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், மதுரையில் ராஜ்சத்யனும், தேனியில் ஜக்கையனும், விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், இராமநாதபுரத்தில் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜாவும் ரேஸில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் என்.ஆர்.தனபாலன் அல்லது ராஜா (முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன்), தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அல்லது முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி லிஸ்ட்டில் இருக்கிறார்கள். கன்னியாகுமரிக்கு நாசரேத் பசிலியான் பெயர் லிஸ்ட்டில் இருக்கிறது. மீதமுள்ள திருநெல்வேலி, மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கு உத்தேச வேட்பாளர் பட்டியல் இன்னும் தயாராகவில்லை.
இந்த பட்டியல் என்பது உத்தேச பட்டியல்தான். அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் தேர்வாகி இருந்தாலும், அந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு பங்கீடு செய்யப்பட்டால், வேட்பாளர்கள் மாற்றியமைக்கப்பட வாய்ப்பும் இருக்கிறது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர்.