தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார், டி.ஜி.பி-யாக தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியிருப்பது போலிஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
சைலேஷ்குமார் யாதவ் ஐபிஎஸ்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மனித சமூகம் மறக்க முடியாத சம்பவம் 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலிசார்13 பேரை சுட்டு கொலை செய்ததில் உயிரிழந்தனர்.
அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலையில் பேப்பர் படித்த போது தான் தெரிந்து கொண்டார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு விசாராணை நடத்தப்பட்டது. 3,000 பக்கங்கள்கொண்ட அறிக்கையை, 2022-ம் ஆண்டு, மே மாதம் 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் சமர்ப்பித்தார்.அந்த அறிக்கையில் அப்போதைய கலெக்டராக இருந்த வெங்கடேஷ், தென்மண்டல ஐஜி-யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், டிஐஜி கபில் குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு உதவிகள், அரசு வேலை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாலகிருஷ்ணன் சி பி எம்.
இந்த நிலையில் மனித உரிமை ஆர்வலர் மதுரை ஹென்றி டிபேன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. அதில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை அடிப்படையில் கலெக்டர், காவல் துறையைச் சேர்ந்த 17 பேர், வருவாய்த்துறையைச் சேர்ந்த மூன்று பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது தென்மண்டல ஐஜி-யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், ஏ.டி.ஜி-பியாகப் பதவி உயர்வு பெற்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிவந்தார். இவர் 1993-ம் ஆண்டு தமிழக ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். காவல்துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியதையடுத்து இவருக்குச் சில தினங்களுக்கு முன்பு டி.ஜி.பி பதவி தமிழக அரசு உயர்வு அளித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் உயர் போலிஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
சைலேஷ்குமார் யாதவ் ஐபிஎஸ்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் அவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் டிஜிபி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அதை மறுபரிசீலனை செய்வதோடு, சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குற்றம்சாட்டப்பட்ட 27 பேரில் ஒருவர் அப்போதைய தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ். இவருக்குத் தற்போது பணிமூப்பு அடிப்படையில் டிஜிபி-யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.இது குறித்து உளவுத்துறை வட்டாரத்தில் “ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஏ.டி.ஜி.பி-யாகப் பணியாற்றிய 92-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே டி.ஜி.பி பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்டது. அதனால் 93-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேஷ்குமார் யாதவ்வுக்கு இந்த ஆண்டு டி.ஜி.பி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அதன்படிதான் அவருக்கு டி.ஜி.பி பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் நடவடிக்கை எடுக்க, சில காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இதில் இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், காவலர் என மூன்று பேர் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.மீதமுள்ள காவல்துறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கபில்குமார் சரத்கர் தற்போது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனராகப் பணியாற்றிவருகிறார். எஸ்.பி மகேந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிவருகிறார். நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ, அதனடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்கின்றனர். வேல்முருகன். எம்எல்ஏ
குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது தமிழக அரசும் நீதிமன்றமும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் கமன்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடந்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.