காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு வீடும் தர மாட்டார்கள் திருமணம் செய்து கொள்ள பெண்ணும் தர மாட்டார்கள் என்பதற்கு உதாரணமாய் விளங்குகிறது சென்னை தாம்பரம் மாநகர காவல் துறை அலுவலக கட்டிட விவகாரம். காவல்துறையினர் எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்றி விட முடியாது என்பதற்கு நீதிமன்றம் சரியான குட்டு வைத்திருக்கிறது.
எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தங்கள் கட்டிடத்தில் தொடர்ந்து இயங்கி வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளருக்கும், தாம்பரம் காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்த மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் தங்களுக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தை குத்தகைக்கு வழங்கியதாகக் கூறியுள்ளனர்.
மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மாற்றி அமைத்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையர் அமல் ராஜ், ஐ.பி.எஸ்
ஒப்பந்தப்படி, 2022 ஜனவரி முதல் வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்.
ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்ததாகவும், இந்த தொகையை ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தப்படுத்தியதால் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டிடத்தை காலி செய்யாமல், 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரைக்குமான காலத்துக்கு வாடகையாக, 97 லட்சத்து 10 ஆயிரத்து 792 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுவரைக்கும் கட்டிடத்தை பயன்படுத்தியதற்காக அந்த தொகையை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மார்ச் 8ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தாம்பரம் காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
ஊரில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம் ஆனால் காவல்துறையே பிரச்சினையாக இருந்தால் எங்கே போய் சொல்வது என்ற நிலையை தான் தாம்பரம் மாநகர காவல் துறையின் நிலைமை உள்ளது.