300 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் அரசு நிலம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவு ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகள் 8 வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள விளாங்காடுபாக்கம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மீரான். இவர் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் எவ்வளவு உள்ளது, எங்கெல்லாம் உள்ளது என தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை பெற்றிருக்கிறார். அதில் 100 ஏக்கர் நிலம் அரசு வருவாய்த்துறை கணக்கில் குளம், குட்டை, வாய்க்கால், மயானம், கோயில் நிலம், புறம்போக்கு என இருப்பது தெரியவந்தது.
ஆனால் அவை அனைத்தும் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கு அவர் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடரவே, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி., மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர் உள்ளிட்டோர் 8 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய செல்வம் மீரான், வருவாய்க் கணக்கில் அரசுக்கு சொந்தம் என உள்ள நிலங்கள் அனைத்தும் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதற்கு முதல் காரணம் விளங்காடு ஊராட்சி நிர்வாகம்தான் எனக்கூறிய அவர்,
சட்டவிரோதமாக அரசு நிலத்திற்கு வரி போடப்பட்டுள்ளது, அதன் மூலம் அனுபவ சான்று பெறப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ஒரு சில நிலங்களுக்கு வருவாய்த்துறையினரும் எந்தவொரு ஆவணமும் இல்லாமல் பட்டா வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.