chennireporters.com

மணல் கொள்ளையில் அமைச்சர் துரைமுருகன் ரூபாய் 60,000-ம் கோடி சம்பாதித்துள்ளார். திமுக நிர்வாகி குற்றச்சாட்டு.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  மணல் கொள்ளையில் ரூ.60,000 கோடி சம்பாதித்திருக்காரு என்று திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் என்பவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனால் அவர்  கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துரைமுருகனை எதிர்த்துப் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும், தலைமைக் கழக பேச்சாளராகவும் இருந்து வருபவர் குடியாத்தம் குமரன். மேடைகளில் வேலூர் வட்டார வழக்கில் எதிர்க்கட்சிகளை கடுமையான விமர்சனம் செய்யும் குடியாத்தம் குமரன் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவார். கடந்த 2019-ம் ஆண்டு துரைமுருகனை குடியாத்தம் குமரன் விமர்சிப்பது போன்ற ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து துரைமுருகனிடம் மன்னிப்பு கோரியதோடு பல கட்டமாக போராடி மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார். தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்த குடியாத்தம் குமரன் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வந்தார்.

குடியாத்தம் குமரன்.

பிரதமர் மோடி குறித்தும், அதிமுகவைச் சேர்ந்த நடிகை விந்தியா குறித்தும் குடியாத்தம் குமரன் பேசியது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கில் அவர் ஜாமீன் பெற்றுள்ளார் .
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார். துரைமுருகனுக்கு எதிராக பேசிய நிலையில், அவரது பெயரிலேயே நீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

அடுத்த சில மணி நேரங்களில் வீடியோ வெளியிட்ட குடியாத்தம் குமரன், “எனக்கும் துரைமுருகனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது மகன் கதிர் ஆனந்து தான் வேலூர் மாவட்டத்திற்கே பிரச்னையாக உள்ளார் என்று கூறியுள்ளார்.

திமுககாரர்களுக்கு எதிராகவே குடியாத்தம் குமரன் செயல்பட்டு வருகிறார். நான் எதிர்த்து கேட்டால் என் மீது கோபம் கொண்டு என்னையும் என் குடும்பத்தினரையும் கைது செய்ய காவல் துறைக்கு வாய்மொழி உத்தரவிடுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிய கதிர் ஆனந்த் நீ இளைஞரணி மாநாட்டுல பேச மாட்ட என்றார். அதன்படியே தற்போது நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் கட்சிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் குடும்பம்  எதைப்பற்றியும் கவலைப்படாமல் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் 60,000 கோடி சம்பாதித்துள்ளார். மிக விரைவில் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன். என்னை செருப்பால் அடித்து விரட்டினாலும் திமுகவில் தான் இருப்பேன்” என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் வேலூர் மாவட்ட அரசியலில் மட்டுமல்ல தமிழக அரசியலையே அதிர வைத்துள்ளது.

இதையும் படிங்க.!