chennireporters.com

ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது குற்ற வழக்கு பதிவு.

பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரம் பல்வீர் சிங் மீது  குற்ற வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்யப்படலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், உதவி காவல் கண்காணிப்பாளரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்று சாட்சியங்களிடம் விசாரணை நடந்து வருகிறது.  இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சில காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் வேறு மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த சூழலில்தான், தமிழக அரசு அமுதா IAS தலைமையில் உயர்மட்ட குழு விசாரணையை அறிவித்தது. அரசு அறிவிப்பின்படி அமுதா ஐஏஎஸ் தலைமையில் கடந்த பத்தாம் தேதி நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், அம்பாசமுத்திரம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் எழுத்தர் வின்சென்ட் இருவர் மட்டுமே ஆஜராகி இருந்தனர். பாதிக்கப்பட்ட சாட்சியங்கள் யாரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இரண்டாம் கட்ட விசாரணை நேற்றும் இன்றும் (ஏப்ரல் 17, 18) ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரண்டாம் கட்ட விசாரணை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நான்கு பேர் ஆஜரானர்.

அதில் முதலாவதாக பல் உடைப்பில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற இளைஞரின் தாத்தா பூதப்பாண்டி, தனது பேரனுக்காக ஆஜரானார்.

அவரை போலவே ராஜேஸ்வரி என்ற பெண், தனது மூத்த மகன் அருண்குமார், உடன் இளைய மகன் (பாதிக்கப்பட்டவர் மற்றும் சிறார்) மற்றும் அவரது நண்பருடன் (பாதிக்கப்பட்டவர் மற்றும் சிறார்) வந்திருந்தார். இவர்களுடன் பாதிப்புக்குள்ளான கணேசன் (வயது 31) என்பவரும் ஆஜரானார்

முதல் நாள் விசாரணைக்கு சாட்சிகள் யாரும் ஆஜராகாத நிலையில், அன்றைய தினம் அங்கு வந்திருந்த போலீசார் சிலர் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு முன் கூடியிருந்தனர். இரண்டாம் நாள் விசாரணையான இன்றும், காவல்துறையினர் சிலர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் வந்தனர்.

ஆனால் இன்று சாட்சியங்கள் வந்திருந்ததை கருத்தில்கொண்டு, ‘காவல்துறையினரால் விசாரணைக்கு வரும் நபர்களுக்கு அச்சுறுத்தலோ அல்லது விசாரனையின் போது இடையூறோ ஏற்படுமோ’ என்ற அடிப்படையில் காவல்துறையினருக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களே நேரடியாக சாட்சியம் அளிக்க வந்ததும், இன்று மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.

 

இதற்கிடையே, பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு தற்போது செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய தண்டனைச் சட்டம் 506 பிரிவு ஒன்று அதாவது மிரட்டல் விடுப்பது உயிர்ப்போக்கும் அளவிற்கு அடித்து கொடுங்காயம் ஏற்படுத்துவது இந்த பிரிவிற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

இந்திய தண்டனைச் சட்டம் 324  தன்னிச்சையாக ஒருவர் மீது காயம் ஏற்படுத்துவது குற்றமாகும். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம்.  பிரிவு 326 மரணத்தை  உண்டாக்குவதற்காக ஆயுதம் மற்றும் பிற பொருள்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துவது மரணத்தை உண்டாக்கும் அளவிற்கு காயும் ஏற்படுத்துவது இதற்கு பத்து வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் மேற்கண்ட மூன்று பிரிவுகளின் கீழ் பல்வீர் சிங் மற்றும் நான்கு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்தார்’ என கிடைத்த புகாரின்பேரில் பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிந்திருப்பதாக தெரிகிறது. மேற்கொண்டு அவரை கைது செய்வதற்கான வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க.!