டாக்டர் அம்பேத்கரின் அவர்களின் 67-ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாட்சியில் வாக்குரிமை என்பதைச் சொத்து, கல்வி, பாலினம் என்று பலவற்றைக் கொண்டு நிர்மாணித்தார்கள். மதம் சார்ந்து சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள், வாக்களிப்பதற்கான தகுதியை குறைவாக நிர்மாணிப்பது ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பிரிட்டிஷ் காலத்தில் இந்திய அரசு சட்டம் 1935-ல் தான் அதிகபட்ச வாக்குரிமை விரிவாக்கம் நிகழ்ந்தது. அப்படியும் கூட ஐந்தில் ஒரு பங்கு வயது வந்த மக்களுக்கே வாக்குரிமை கிட்டியது.இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று பல்வேறு பெண்கள் போராடினார்கள். இவர்களின் வரலாற்றை வரலாற்றாசிரியர் சுமிதா முகர்ஜி ஆவணப்படுத்தியுள்ளார்.1928-ல் வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று கனவு கண்டது. இதனையடுத்து, கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இப்படிப் பல தரப்பினரும் வயது வந்தோர் வாக்குரிமைக்கு ஆதரவாக இந்தியாவில் இயங்கினார்கள். எனினும், ஏட்டளவில் வயது வந்தோர் வாக்குரிமை எனும் கனவை முன்மொழிந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே காலனிய ஆட்சியாளர்கள், மாகாணங்களில் பதவியில் இருந்த இந்தியர்கள் எண்ணினார்கள் (இந்திய வாக்குரிமை அறிக்கை, 1932).
இந்தப் பின்னணியில் தான் வாக்குரிமையைக் குறித்த அண்ணல் அம்பேத்கரின் வாதங்கள், பார்வைகள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. யாருக்கெல்லாம் வாக்குரிமை தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட சவுத்பரோ கமிட்டியின் முன் அம்பேத்கர் தோன்றி தன்னுடைய கருத்துகளை 1919-ல் பதிவு செய்தார். அப்போது, ஒரு நாட்டின் குடிமக்களுக்குப் பிரதிநிதித்துவ உரிமை, ஆட்சியதிகாரத்தில் பதவி வகிக்கும் உரிமை ஆகியவை மிக முக்கியமான உரிமைகள் என்று கருத்துரைத்தார்.
மேலும், தகுதியுள்ளவர்களே வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் என்கிற வாதத்தை அழகாக எதிர்கொண்டார். அவர் பேராசிரியர் L.T.Hobhouseஐ மேற்கோள் காட்டி ‘ஜனநாயகம் வெற்றியடைவது மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒட்டியே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், வாய்ப்புகள் தரப்பட்டால் தான் மக்கள் அவற்றைப் பயன்படுத்த இயலும். பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு இயங்கும் அரசின் செயல்பாடுகள் பங்கேற்பது எல்லாமே கல்வி தான்… வாக்குரிமை வழங்குவதன் மூலமே மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, தட்டியெழுப்ப இயலும்.’ என்று வாதிட்டார்.
மேலும், சொத்துரிமையைக் கொண்டு வாக்குரிமையைத் தீர்மானிப்பது எப்படிப் பட்டியலின சாதி மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். பட்டியலின சாதி பெண் ஒருவர் தர்பூசணி விற்றதற்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட அநீதியை தொட்டுக் காட்டினார். செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை, உரிமைகளை மறுதலித்து விட்ட சாதி சமூகத்தில் தங்களுக்கான வாக்குரிமையைச் சொத்துரிமையைக் கொண்டு தீர்மானிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அல்லவா இருக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பத்தாண்டுகள் கழித்துச் சைமன் கமிஷன் முன்பு தோன்றிய அண்ணல் அம்பேத்கர் வாக்குரிமை என்பது சலுகை அல்ல, அது உரிமை என்றார். மேலும், அதனை வெறுமனே சலுகை என்று கருதுவதால் வாக்குரிமை இல்லாத மக்கள் முழுக்க முழுக்க வாக்குரிமை உள்ளவர்களை அண்டி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும் என்று வாதிட்டார். கல்வியை அடிப்படையாகக் கொண்டு வாக்குரிமையை மறுப்பது என்பது கயமைத்தனமானது என்று அம்பேத்கர் சாடினார். கல்வியைக் காலங்காலமாக மறுத்துவிட்டு, அதனையே வாக்குரிமைக்கான தகுதி ஆக்குவது எப்படித் தகும் என்பது அவரின் வினாவாக இருந்தது. ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் ஜனநாயகத்திற்கும், அரசியல் பங்கேற்பிற்கும் இடையே உள்ள உறவை கவனப்படுத்தினார்.
பலதரப்பட்ட மக்கள் இணைந்து ஜனநாயகத்தில் இயங்க வேண்டியிருக்கிறது. அது மக்கள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. வாக்குரிமையின் மூலமே ஒருவர் பிறரோடு இணைந்து வாழும் தன்னுடைய வாழ்க்கையை நெறிப்படுத்தும் அதிகாரத்தைப் பெற முடியும் என்று அம்பேத்கர் தெளிவாகப் பேசினார். இத்தகைய வாக்குரிமையை மறுதலிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்தால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்குண்டு கிடக்க நேரிடும் என்று அவர் கவலைப்பட்டார். (இப்பத்தி மாதவ் கோஷ்லாவின் ‘India’s founding moment, முனைவர் Scott Stroud-ன் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது)
மேலும், வாக்குரிமை குறித்துச் சைமன் கமிஷன் முன்பு கருத்துகளை முன்வைத்த அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் ஏழைகளாக, சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களாக, அரசியல்ரீதியாகப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்; ஆகவே,சிறுபான்மையினராக அவர்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்புக் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. ஆகவே, அனைவருக்கும் வாக்குரிமை இல்லையென்றால் தனித் தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தரவேண்டும் என்றும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை இருந்தால் ஒதுக்கீட்டு இடங்கள் தரப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார்.
மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப மட்டும் இடங்களை ஒதுக்குவது சரியான அணுகுமுறை இல்லை என்று அவர் வாதிட்டார். சட்டமன்றத்தை ஏதோ அருங்காட்சியகம் போலக் கருதிக்கொண்டு ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த சிலரை மாதிரிகளாகச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பது சரியானது அல்ல. சட்டமன்றம் என்பது அரசியல் போர்கள் நிகழும் களம், சிலர் மட்டும் வாய்ப்புகளில் தனியுரிமை செலுத்துவதைத் தகர்க்கவும், உரிமைகளை வென்றெடுக்கவும் முனைந்து இயங்கும் இடம் அதுவே ஆகும். மக்கள் தொகைக்கு ஏற்ப சிறுபான்மையினருக்கு இடம் தருவது என்பது சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வாய்ப்பை மறுத்து, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினராகச் சிறைப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகும் என்று அண்ணல் அம்பேத்கர் பேசினார்.
சிறுபான்மையினர் என்று அவர் பட்டியலின மக்களை மட்டும் குறிக்கவில்லை என்பது அவரோடு சைமன் கமிஷன் உறுப்பினர்கள் நிகழ்த்திய உரையாடலில் தெளிவாகிறது. பழங்குடியினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் ஆகியோரில் உள்ள வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை தர வேண்டும் என்று கருதுகிறீர்களா என்று அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது. மேற்சொன்ன சிறுபான்மையினரில் உள்ள அனைத்து வயது வந்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.
இவ்வாறு வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயராது குரல் கொடுத்தார். இந்திய அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் , தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்ட பிரிவு 289 ( தற்போது 324 ) ஐ ஜூன் 15 அன்று 1949 -ல் தேர்தலதேவைபட்டதும உருவாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தினார்..
அதுமட்டுமல்ல இங்கிலாந்தில் பாராளுமன்ற அமைப்பு தோன்றியது 1264 ஆம் ஆண்டு , ஆனால் அங்கே வயது வந்தோருக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது 1928 – ஆம் ஆண்டில்தான் . ஆகவே எழுநூறு ஆண்டுகள் தேவைபட்டது இங்கிலாந்து நாட்டிற்கு . ஆனால் அம்பேத்கர் அவர்களின் எழுதுகோலின் சிறு அசைவின் மூலம் இந்தியா விடுதலை அடைந்து 20 மாதங்களில் நமக்கு வாக்குரிமை சட்ட பூர்வமாக்கப்பட்டது அதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆவார். இந்தியாவில் ஒவ்வொருவரும் வாக்கு அளிக்கும் போதெல்லாம் அம்பேத்கர் அவர்களின் நினைவு வர வேண்டும் .
இன்று டிசம்பர் – 6 அவருடைய நினைவு நாளில் போற்றி வணக்கம் செலுத்துவோம்.