தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சில தினங்களுக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள வீடுகள் மற்றும் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ‘அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்’ என, தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்தனர். அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இ.சி.ஜி-யில் மாறுபாடு தெரிய வந்ததால் இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா? என பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்தக்குழாய்களில் 3 இடங்களில் அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதில் 3 முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.இந்நிலையில் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது கணவர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
நன்றி ANI.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞரும், தி.மு.க எம்.பி.யு-மான என்.ஆர்.இளங்கோ, நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வு முன்பு ஆஜராகி, முறையிட்டனர். ஆனால் வழக்கு பிற்பகல் 2:15 மணிக்கு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நீதிபதி சக்திவேல் வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அவருடைய அறையிலேயே இந்த வழக்கு விசாரணை நடந்தது.அப்போது அமலாக்க துறை வழக்கறிஞர்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறைக்கே சென்று தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
மேலும் செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார்? என தெரியவில்லை என்று செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்; இளங்கோ வாதத்தை முன்வைத்து பேசினார்.அதற்கு நீதிபதி அல்லி ‘இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ளுங்கள். செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து விசாரிக்கவே நீதிமன்றம் வந்தேன்’ என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், ‘அமலாக்கத்துறையினர் துன்புறுத்தினார்களா?’ என்ற கேள்வியை நீதிபதி அல்லி முன்வைத்தார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பதில் அளித்தார்? என்பது தெரியவில்லை.
இதன் பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.