chennireporters.com

#jarkant spain couple sexually assaulted; உலக அரங்கில் இந்தியாவை தலை குனியவைத்த வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை .

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண் முன் கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது.  இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி, மாநில முதல்வர் சம்பாய் சோரன் இந்த முழு விவகாரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் டிஜிபி அஜய் குமார் சிங், “இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் ஜார்க்கண்டின் காவல்துறை நிர்வாகத்தையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

பிரேசிலில் பிறந்த ஸ்பானிய பெண்ணான ஹியானா, அவரது கணவர் ஜான்(இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) உடன் மார்ச் 2ஆம் தேதியன்று காலை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் இணைந்து பயன்படுத்தும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். வீடியோவில், ஹியானாவும் ஜானும் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்த தகவல்களை அளித்துள்ளனர். அவர் ஸ்பானிய மொழியில் பேசியுள்ள அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “எங்களுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. என்னை ஏழு பேர் பாலியல் வல்லுறவு செய்தனர். அவர்கள் எங்களை அடித்து, கொள்ளையடித்தனர். அவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை, ஏனெனில் அவர்களுக்கு என்னை வல்லுறவு செய்வதே நோக்கமாக இருந்தது. நாங்கள் மருத்துவமனையில் காவல்துறையுடன் இருக்கிறோம். இந்தச் சம்பவம் எங்களுக்கு இந்தியாவில் நடந்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீடியோவில் ஜான், “எனது முகம் சேதமடைந்துள்ளது. ஆனால், ஹியானாவின் நிலை என்னைவிட மோசமாக உள்ளது. அவர்கள் என்னை ஹெல்மெட்டால் பலமுறை அடித்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவள் ஜாக்கெட் அணிந்திருந்தாள். ஆகையால் அவளுக்குக் காயம் சிறிதளவு ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார்.

அந்தக் காணொளிகளில், இருவரின் முகத்திலும் பல இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன. இந்த வீடியோ மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஹியானா, “விசாரணையில் சிக்கல்களை உருவாக்கக் கூடும் என்பதால், வழக்கு குறித்த தகவல்களை வெளியிட காவல்துறை மறுக்கிறது” என்று தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அவர் பகிர்ந்துள்ள சுய விவரக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் குடிமக்கள்ஜான், ஹியானா இருவருமே ஸ்பானிய சுற்றுலாப் பயணிகள். ஜான் ஸ்பெயினில் உள்ள கிரனாடா என்ற கடலோர நகரத்தில் வசிப்பவர். ஹியானா பிரேசிலை சேர்ந்தவர். அனால், அவர் ஸ்பானிய குடியுரிமையைப் பெற்றுள்ளார். இருவரிடமும் ஸ்பானிய பாஸ்போர்ட் உள்ளது.

மோட்டார் சைக்கிளில் உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இந்தக் கணவன்-மனைவி, கடந்த 5 ஆண்டுகளில் 66 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து 1,70,000 கிலோமீட்ட தூரத்தைக் கடந்துள்ளதாக அவர்களது சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் ஒன்றாகப் பயணிக்கும் இருவரும் இந்தியாவை தொடர்ந்து நேபாளம் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிருந்தனர். அவர்களது பயணத்தின்போது, ஜான் – ஹியானா தம்பதி இரான், இராக், இத்தாலி, ஜார்ஜியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைக் கடந்து வந்துள்ளனர்.

இந்தத் தம்பதி கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் இருந்தனர். ஜார்க்கண்ட் வருவதற்கு முன், அவர்கள் தென்னிந்தியா, காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்குச் சென்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் அவர்களுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தவிர, யூடியூப்பிலும் அவர்கள் பிரபலமாக உள்ளனர்.

ஹியானாவும் ஜானும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பிகார் வழியாக நேபாளம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருந்தது. அவர்கள் இருவருமே சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளனர்.

மார்ச் 1ஆம் தேதி இரவு, அவர் தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற சிறிய கிராமத்தில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து உறங்கினார்கள். அப்போது சில இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தமது மற்ற நண்பர்கள் சிலரை அங்கு அழைத்தனர். அவர்கள் அனைவரும் ஜான், ஹியானாவின் கூடாரத்திற்குள் நுழைந்து ஹியானாவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.

அப்போது, ஹியானா, ஜான் இருவரும் தாக்கப்பட்டனர். ஹியானாவின் குற்றச்சாட்டுப்படி, அவர்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களது கூடாரத்தையும் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் திகிலடைந்த ஜான், ஹியானா இருவரும் தங்களது பொருட்களைச் சேகரித்துக் கொண்டு சாலைக்கு வந்தனர். பிறகு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹன்ஸ்திஹா காவல் நிலைய போலீசார், இரவு 10:30 மணியளவில் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து விசாரித்தனர். போலீசார் அவரை சரையாஹாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ஹியானாவுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளை பற்றிய முழு தகவலும் கிடைத்தது.

தும்கா எஸ்பி பீதாம்பர் சிங் கெர்வார் பிபிசியிடம் பேசியபோது, அவர்களது நிலையைப் பார்த்ததும் ஹன்ஸ்திஹா போலீசார் அவருக்கு ஏதோ தவறு நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டனர். ஆனால், மொழிச் சிக்கல் காரணமாக அவருடன் நேரடியாகப் பேச முடியவில்லை என்றார்.

மேலும், “அவர்கள் ஸ்பானிய மொழியில் மட்டுமே பேசினர். அவர்களின் ஆங்கிலம் சிறிதளவே பேசினர். எங்கள் போலீசார் அவர்களிடம் இந்தியில் பேசிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு என்ன ஆனது என்று தொடக்கத்தில் தெரியவில்லை,” என்று தெரிவித்தார்.

“மருத்துவமனையை அடைந்ததும், கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் நடந்த முழு சம்பவத்தையும் அவர்கள் போலீசாரிடம் கூறினர். மேலும் குற்றவாளிகளின் தோற்றத்தை விவரித்தனர். நள்ளிரவுக்குப் பிறகு, முழு சம்பவம் பற்றிய தகவலும் கிடைத்தது. நான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன். போலீசார் சிலரைப் பிடித்தனர். இரவிலேயே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் விசாரணையின்போது அவர் இந்தச் சம்பவத்தில் தனக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டதோடு, மற்ற கூட்டாளிகளின் பெயர்களையும் தெரிவித்தார். எஞ்சியவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் குழுக்கள் இதில் ஈடுபட்டுள்ளன,” என்றார் எஸ்பி பீதாம்பர் சிங் கெர்வார்.

குற்றவியல் சட்டப்பிரிவு 164இன் கீழ் ஸ்பெயின் சுற்றுலாப் பயணியின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, தும்காவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து கூடாரம் அமைத்துத் தங்கியது குறித்து உள்ளூர் போலீசாருக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ அமித் மண்டல் இந்த விவகாரத்தை எழுப்பி, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். முன்னாள் முதல்வரும் பாஜக மாநிலத் தலைவருமான பாபுலால் மராண்டியும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சம்பவத்தால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஜார்க்கண்ட் அரசுதான் காரணம் எனவும் அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ தீபிகா பாண்டே சிங்கும் இது வெட்கக்கேடான சம்பவம் என்று கூறியுள்ளார். மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் உறுதியளித்துள்ளனர். விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், இந்தியாவில் உள்ள ஸ்பெயின் தூதரக அதிகாரிகள் ஜார்க்கண்டில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊடக செய்திகளின்படி, தூதரக அதிகாரி ஒருவர் தும்காவுக்கு சென்று பாதிக்கப்பட்ட தம்பதியைச் சந்தித்து முழு வழக்கு பற்றிய தகவல்களைக் கேட்டறிவார்.

ஜார்க்கண்டில் தினழும் 4க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஜார்க்கண்ட் காவல்துறையின் இணையதள தரவுகளின்படி, மாநிலத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் நான்கு பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். மேலும், மாநிலத்தில் 2015 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், அதாவது கடந்த 9 ஆண்டுகளில் மொத்தம் 13,533 வல்லுறவு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கான தண்டனையும் திருப்திகரமாக இல்லை.

இதையும் படிங்க.!