chennireporters.com

சென்னை கலாஷேத்ரா விவகாரம்: உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசிய போது, கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்றும், எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டால் காவல்துறை அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, இன்று கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் குறித்த அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமரி தெரிவித்தார்.

இந்த நிலையில் கலாஷேத்ராவில் கடந்த 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவி ஒருவர், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், ஹரிபத்மன் என்ற ஆசிரியர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாகவே கலாஷேத்ராவில் முதுகலையை தொடர முடியாமல் வெளியேறதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!