chennireporters.com

#pollachi sex cases சிரித்துகொண்டே நீதிமன்றத்திற்கு வந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டபட்ட இளைஞர்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம்  முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.  பாலியல் வழக்கு விசாரணை, கோவை மகளிர் நீதிபதி முன்னிலையில் நடந்து வருகிறது. கடந்த ஓராண்டாக வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் முதல் முறையாக நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை அருகே பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண், சில இளைஞர்கள் மீது கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட காவல் துறையில் புகாரளித்தனர். கோவை மாவட்டக் காவல்துறையினர் முதலில் விசாரித்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), சதீஷ் (28), மணிவண்ணன்(25) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஹேரேன் பால்(29), பாபு என்ற பைக் பாபு(34), அருளானந்தம்(34), அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை கடந்த 2021-ம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் ஏராளமான வீடியோக்களை கைப்பற்றினர். இவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்களை கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக கைதான 9 பேரும்  (பிப்.23) கோவை மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

காலை சேலம் மத்திய சிறையிலிருந்து கோவை நீதிமன்றத்துக்கு  9 பேரும் அழைத்துவரப்பட்டனர். சிலர் முகத்தை மூடி வந்தநிலையில், சிலர் சிரித்துக் கொண்டே நீதிமன்றத்திற்கு வந்தனர். பாலியல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்கள் குறித்த விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சி.பி.ஐ கடந்த 2019-ம் ஆண்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், கடந்த 2021-ம் ஆண்டு கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், கைதுசெய்யப்பட்ட 9 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து அடுத்த விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க.!