#சிறப்பு கட்டுரை
அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார்.கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார்.
“அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா செய்து தருவேன், அவ்வளவுதான்” என்று குழந்தை சிரிப்போடு நினைவு கூறுகிறார் ராணி.இந்தியா டுடேவிற்காக அவர் தன் நினைவலைகளை, கணவரோடு வாழ்ந்த காலத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை, (வளர்ப்பு மகன் பரிமளத்தின் உதவியோடு) பகிர்ந்து கொண்டார்.
“எல்லாரும் அவர் எப்படிப்பட்டவர் என்று என்கிட்ட கேக்குறாங்க. அதற்கு நான் பதில் சொல்லணும்னா அவருடைய இறுதிக்காலம் தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது.அப்போது அவர் முதல்வராக இருந்த காலம். மார்சளி, பயங்கரமான ஜுரம். படுத்த படுக்கையாகக் கிடந்தார். அப்போதுதான் கீழவெண்மணி என்ற இடத்தில் கலவரம் மூண்டுவிட்டதாக அவருக்குச் செய்தி வந்தது.
கருணாநிதிதான் (அப்போது அவர் பொதுப்பணித்துறை அமைச்சர்) விஷயத்தை வந்துச் சொன்னார்“நீங்கள் கவலைப்படாதீங்க. நான் அங்கு உடனே போய் நிலைமையைச் சரிசெய்ய எல்லா முயற்சியும் எடுக்கிறேன்” என்று கருணாநிதி சொல்லிவிட்டு காரில் கிளம்பி விட்டார்.
“ஆனால் இவருக்கு அமைதியாக இருக்க முடியல. ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஆபீஸ்ல இருந்து ஏதாவது செய்தி வந்ததானு கேட்டுட்டே இருந்தாரு.செய்தி வர வரைக்கும் கஞ்சி கூட சாப்பிடாமல் இருந்தார். அப்புறம் கருணாநிதி கிட்ட இருந்து போன் வந்த பிறகுதான் கஞ்சியை வாயில் வச்சாரு.அவர் முதல்வராக இருந்தபோது நாங்க எந்தச் சலுகைகளும் அனுபவிக்கக் கூடாதுனு ஸ்ட்ரிக்டா நினைச்சாரு. அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கும்போதுகூட வீட்டிலிருந்து யாரையும் கூட்டிட்டுப் போகல.
எனக்கு அதைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. அதனால எங்க வீட்டு கார் டிரைவரை விழா நடக்கிற இடத்துக்கு என்னை அழைச்சிட்டு போகச் சொன்னேன்.அங்க போனா எனக்கு பெரிய அதிர்ச்சி. நான் ஏதோ ஒரு சின்ன விழாவாக இருக்கும்னு நினைச்சுட்டுப் போனேன்.ஆனா அங்க ஆயிரக்கணக்கான ஜனங்க. உட்காரக்கூட சீட் இல்ல. அந்த ஒரு மணி நேர விழாவையும் நின்னுக்கிட்டே தான் பார்த்தேன்.
அப்புறம் அவர் முதல்வரா இருந்தபோது, நாங்க எங்க போறதுனாலும் ஆபீஸ் காரை உபயோகிக்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிடுவாரு.அது மட்டுமில்ல. அன்பளிப்பு, அது இதுன்னு யாா் எது கொடுத்தாலும் வாங்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருந்தாரு. தினமும் ராத்திரி வீட்டுக்கு வந்ததும் இதப்பத்தி விசாரிப்பாரு.அவர் எப்போதுமே நிறைய புத்தகங்கள் படிப்பாரு, நிறைய எழுதுவாரு. ராத்திரி முழுக்கப் படிச்சிட்டு காலையில நாலு மணிக்குக் காபி குடிச்சுட்டு தூங்குவாரு.
பல நேரங்களில் ராத்திரி நேரத்தில நானும் கூடவே முழிச்சிருந்து காபி போட்டுக் கொடுப்பேன். பேனாவுல இங்க் இருக்குதான்னு பார்ப்பேன். இப்படி சின்ன சின்ன உதவிகளைத்தான் அவர் என்கிட்டே இருந்து எதிர் பார்த்தாரு.அவர் அரசியல்ல சேர்ந்த பிறகு ராத்திரி பூரா கட்சிக்காரங்க வருவாங்க. அப்ப அவர் என்கிட்ட ரொம்பக் கெஞ்சலாக “ராணி பூரிப் போட்டு தர்றியாம” என்று கேட்பார். நானும் செஞ்சுக் கொடுப்பேன்.
ராத்திரி அவர் புத்தகம் ஏதாவது படிச்சுக்கிட்டு இருப்பாரு. அப்ப நான் துணியில எம்பிராய்டரி போட்டுக்கிட்டு இருப்பேன். ஏதோ அவ செய்யறான்னு அலட்சியமா இருக்க மாட்டார்.என்ன பண்றேன்னு கவனிப்பார். எப்படி பண்றது என்று கேட்டுக் கத்துக்கிட்டாரு. பெரியார்கிட்ட இருந்து விலகினப்பதான் அவர் முதல் தடவையா ரொம்ப சோகத்தோடு இருந்ததை நான் பார்த்தேன்.
யாரோடும் பேசாமல், மூன்று நாள் எதுவும் சாப்பிடாமல் உம்முன்னு இருந்தாரு.1962 தேர்தலில் அவா் தோல்வி அடைந்தபோதுகூட, அவர் ரொம்ப கவலைப் படலை. நான்தான் ரொம்ப அழுதேன். அப்ப அவரு அழாதே ராணி எல்லோரும் சிரிப்பார்கள் என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.கட்சிப் பணிகள்ல என்னை ஈடுபடுத்துறதுல அவருக்கு விருப்பம் இருந்தது. கட்சியில் பெண்கள் முன்னேற்ற அணி என்று ஒன்று இருந்தது. அதுல பெண்களுக்கு தையல் வகுப்பு எடுக்கிறது. இந்த மாதிரி சில பணிகள் நடக்கும்.
அதுல என்னையும் பங்கெடுக்கச் சொல்லியிருக்கிறார். நானும் பெண்கள் முன்னேற்றத்திற்காக சில பணிகள் செஞ்சிருக்கேன். கட்சிக்காகத் தேர்தல் பிரச்சாரம் கூட செஞ்சிருக்கேன்.அவர் எங்கிட்ட எவ்வளவு அன்பாக இருந்தாருன்றதுக்கு அவர் தன் தோல்வியைப் பற்றி புத்தகத்தில் எழுதியதைப் படித்து என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.அவர் என்ன எழுதியிருந்தாரு தெரியுமா? “என் நெஞ்சை மிகவும் உருக்கியதும், என் தோல்வியைப் பற்றி எனக்கு ஓரளவு வேதனையை ஏற்படுத்தியதும் எதுவென்றால், எனக்காக நகர் முழுவதும் வீடு வீடாகச் சென்று என் துணைவி ராணி ஓட்டு கேட்டதுதான்.”
எங்களுக்கு குழந்தை என்பதால் நிறைய பேர் அவரை இரண்டாவது கல்யாணம் செஞ்சுக்கச் சொன்னாங்க. ஆனா அவர் மறுத்து விட்டார்.“குழந்தை இல்லைன்னா என்ன? வேற ஏதாவது குழந்தையைத் தத்து எடுத்துப்போம்”ன்னு சொல்லிட்டாரு. பிறகு அவருடைய அக்காவுடைய மூத்த மகன் பரிமளத்தைத் தத்து எடுத்துக்கிட்டோம்.
குழந்தைகளிடம் ரொம்ப அன்பா இருப்பார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் இடையில் அண்ணன் தம்பி உறவுதான் இருந்தது.எம்.ஜி.ஆர். தான் நடித்த படங்களோட ப்ரிவியூ ஷோவுக்கு இவரைக் கூப்பிடுவார். இவா் எப்பவும் லேட்டா தான் போவார். அவருக்கு சினிமாவில் இன்ட்ரஸ்ட் இல்லை.இவர் கிட்ட கத்துகிறதுக்கு விஷயம் நிறைய இருக்கு. உதாரணத்திற்கு பாரதிதாசன் அவரைப் பாராட்டி (1946 என்று நினைக்கிறேன்) விழா நடத்தினார். அப்போது அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசாகத் தந்தார்.
1957-ல் அதே காஞ்சிபுரத்தில் பாரதிதாசனாா் இவரை மிகக் கேவலமாகப் பேசினார். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் அவருகிட்ட ஏன் நீங்க பதிலுக்கு ஏதும் சொல்லாம சும்மா இருக்கீங்னு கேட்டேன்.அதற்கு அவர் யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். நாம நம்ம நிலை மறந்து எதுவும் செய்யக்கூடாது. ரொம்ப பொறுமையா இருக்கணும்.
தவறு செய்பவர்களை மன்னிக்க கற்றுக் கொள்ளனும்னு சொன்னாரு. இதேபோலத்தான் யார் என்ன அவதூறு செஞ்சாலும் பொறுமையாக இருப்பார்.இதுதான் அவருகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அத்தனை பெரிய மனிதருக்கு, நான் மனைவியாக வாழ்ந்தது என்னோட பாக்கியம்னு நான் நினைக்கிறேன்.”-1996-ம் ஆண்டு ‘இந்தியா டுடே’ பெண்கள் சிறப்பு மலரில் அண்ணா பற்றி ராணி அண்ணாதுரை அளித்த பேட்டி.#தமிழினத்தின் தலைமகன் அண்ணாவின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி ராணி அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று.