chennireporters.com

சீரழியும் பச்சையப்பர் கல்லூரி நிர்வாகத்தில் முதல்வர் தலையிட வேண்டும். பழ.நெடுமாறன் வேண்டுகோள்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

மிக உயர்ந்த நோக்கத்துடன் பச்சையப்பர் உருவாக்கிய அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஆறு கலைக் கல்லூரிகள் உள்படப் பல கல்வி நிலையங்கள் தொடர்ந்து சீரழிவிற்குள்ளாகி வருகின்றன.

இதைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழக முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன். அறக்கட்டளைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பணிக் காலம் கடந்த 2018ஆம் ஆண்டு சூன் மாதமே நிறைவு பெற்றுவிட்டது.

இதற்குப் பின் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சொத்தாட்சியர், அறக்கட்டளை செயலர் ஆகியோர் பொறுப்பில் நிர்வாகம் நடை பெற்று வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 10 வாரங்களுக்குள் அறங்காவலர் குழு தேர்தலை நடத்தி, தேர்வு பெற்றோரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என சொத்தாட்சியருக்கு கட்டளைப் பிறப்பித்திருந்தது.

இந்த காலக்கெடு முடிந்து பல மாதங்கள் கடந்த பிறகும் தேர்தலை நடத்தாமல் சொத்தாட்சியரும், செயலரும் காலங்கடத்தி வருகின்றனர்.

தங்களின் தவறான போக்கினை எதிர்க்கும் பேராசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத அலுவலர்களையும் பணி இட மாற்றம் செய்ததோடு, பல மாதங்களாக அவர்களுக்கு ஊதியங்களும் வழங்காமல் பழிவாங்கும் போக்கில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 2014ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் அனைவருக்கும் தமிழக அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு பணி மேம்பாட்டுக் கோப்புகள் தயாரிக்கப்பட்டு செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவற்றை அரசுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.இவற்றை உடனடியாக அனுப்புமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் கட்டளையிட்டும் இன்னும் அனுப்பாமல் காலங்கடத்தி வருகின்றனர்.

கல்லூரி முதல்வர்களும் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர்.சொத்தாட்சியர், செயலர் ஆகியோரின் எதேச் சதிகாரப் போக்குகளுக்கு எதிராக ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் மாணவர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படுகிறது.எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு அறங்காவலர் குழுவின் தேர்தல் நடத்தப்படும் வரையில் சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் நலன்களைக் காக்க உடனடி நடவடிக்கையை எடுக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள,

(பழ.நெடுமாறன்)
தலைவர்.

இதையும் படிங்க.!