chennireporters.com

கொரோனாவில் உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பங்களுக்கு வேலை வழங்கவேண்டும். (LCC) கோரிக்கை.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அதில் அரசு மருத்துவர்களின் வாழ்வின் நிலையை புரிந்து கொண்டு செயல்படவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை உடனே வழங்கவும், அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நம் நாடு சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக சிறப்பாக திகழ்கிறது.  Health indicators எனப்படும் சுகாதாரக் குறியீடுகள் IMR, MMR ஐ கணிசமாக குறைத்துள்ளோம். தொடர்ந்து 6 வது முறையாக இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் சிறந்த மாநிலம் என்ற விருதை வென்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

இருப்பினும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுவது தான் வருத்தமளிக்கிறது. அதுவும் கிட்டத்தட்ட சுதந்திர போராட்டத்துக்கு இணையாக, பல ஆண்டுகளாக, காந்திய வழியில் போராடி வருகிறோம்.

2019 ம் ஆண்டு மருத்துவர்கள் போராட்டத்தின் போது,, நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நம் முதல்வர், திமுக ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேறும் என உறுதியளித்தார். இருப்பினும் ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோரிக்கை நிறைவேறவில்லை என்ற வலியும், வருத்தமும் 19 ஆயிரம் அரசு மருத்துவர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது.

அதுவும் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்த பிறகும், அரசு மனம் இரங்கவில்லை. என்ன பாவம் செய்தோம் நாங்கள்? டாக்டர் ஆனது தவறா? தமிழகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தது தவறா? தினந்தோறும் ஏராளமான உயிர்களை காப்பாற்றி வருவது தான் தவறா?

தொடர்ந்து இவ்வாறு அரசு மருத்துவர்களை மன வருத்தத்துடன் பணி செய்ய வைப்பது சுகாதாரத் துறைக்கும் நல்லதல்ல, தமிழகத்துக்கும் நல்லதல்ல என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். நம் முதல்வர் பதவியேற்ற போது, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த அந்த கடினமான தருணத்தில், அரசு மருத்துவர்கள் உறுதுணையாக இருந்ததை முதல்வரால் மறக்க முடியாது.

இருப்பினும் கொரோனா பேரிடரில் பணியாற்றி, உயிரிழந்த  திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி, அரசு வேலை கேட்டு, கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பிறகும், அந்த குடும்பத்தின் மீது முதல்வரின் பார்வை விழவில்லை.

 இருப்பினும் நம் முதல்வர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே வருகின்ற ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு, அரசு வேலைக்கான உத்தரவை முதல்வரின் கைகளால் வழங்கிட வேண்டும். மேலும் நீண்டகாலமாக போராடி வரும் அரசு மருத்துவர்களுக்கு, போராட்டத்தில் இருந்து விடுதலை கிடைத்திடும் வகையில், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு என்ற அறிவிப்பை வெளியிட, மாண்புமிகு முதல்வரை வேண்டுகிறோம். என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க.!