chennireporters.com

கொடநாடு கொலை வழக்கில் திருப்பம். என் கணவர் ஒரு மனநோயாளி தனபாலின் மனைவி புகார்.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் பல திடுக்கிடும் தகவல்களைப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். தனபால் என்னை சி.பி.சி.ஐ.டி போலிசார் ஏன் இன்னும் விசாரிக்காமல் இருக்கின்றனர். இதில் முக்கியக் குற்றவாளிகள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரின் ஆதரவாளரான இளங்கோவனும்தான். இவர்களை விட்டு,விட்டு சி.பி.சி.ஐ.டி யாரை விசாரித்துக்கொண்டிருக்கிறது என்று கூறிய அவர் . சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று சொல்லிவந்தார்.

இந்த நிலையில் நேற்று 06.09.2023  தனபாலுக்கு கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திலிருந்து வழக்கு தொடர்பாக 14.09.2023 அன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருக்கிறது.

இந்த நிலையில் தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி, சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “என்னுடைய கணவர் தனபாலால் எனக்கும், என்னுடைய பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. அவர் ஒரு மன நோயாளி, அந்தப் பிரச்னைக்காக நீண்ட நாட்களாக  சிகிச்சை எடுத்து வருகிறார்.இப்படியிருக்க சமீபத்தில் சிறையிலிருந்து வெளியில் வந்தவர்,  மற்றவர்களின் பேச்சை கேட்டு கொடநாடு வழக்கு தொடர்பாக தேவையில்லாத விஷியங்களை பேசி வருகிறார். இது குறித்து நான் கேட்டதற்கு, என்னையும் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துகிறார். அது மட்டுமல்லாமல் இவர் சிறையிலிருந்தபோது ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் சிறையில்  இவரை சந்தித்து பேசியிருக்கிறார்.அவர் எந்த உதவி என்றாலும் கேளுங்கள், அண்ணன் உங்களை (ஒபிஎஸ்)பார்த்து வரச் சொன்னார்’ என்று அவரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் இவர் சிறையிலிருந்து வெளியில் வந்து இது போன்ற தேவையில்லாததை பேசி வருகிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை.இவரால் எனது குடும்பம், என்னுடைய குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, என்னுடைய கணவரால் என்னுடைய குழந்தைகளுக்கோ எனக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜியின் அண்ணன் தனபாலின் மனைவி செந்தாமரை செல்வி கொடுத்த புகாரால் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனபாலை இயக்குவது ஓபிஎஸ் தரப்பு என்றும் செந்தாமரைச்செல்வியை இயக்குவது எடப்பாடி தரப்பு என்றும் சொல்கிறார்கள் திமுகவினர். தமிழக அரசு உடனடியாக இந்த வழக்கில்  நேர்மையான அதிகாரிகளை நியமித்து  உண்மை என்ன என்பதை இந்த உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்கின்றனர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள்.

இதையும் படிங்க.!