chennireporters.com

அமைச்சர் ஏ.வ. வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.

தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் காலை 6 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் எ.வ. வேலுவிற்கு சொந்தமான இடங்களிலும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுக்குச் சொந்தமான அருணை கல்லூரி, அவரது வீடு, அலுவலகம், சென்னை தி.நகரில் உள்ள அமைச்சர் அலுவலகம், அவரது உறவினர்கள் வீடு , அலுவலகங்கள், இதே போல் சென்னை அடையாறில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் தொடர்புடைய தலைமை அலுவலகம், உரிமையாளர்கள் வீடு , வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் கமலேஷ் ஜெயின் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரர் அமீத் வீடு அலுவலகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடு என 80க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் திமுக பகுதி செயலாளர் எஸ்.எம். சுவாமி இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது. மீனா ஜெயகுமார் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் அவரது அலுவலகத்தில் எஸ்.எம். சுவாமி பணியாற்றி வருகிறார்.

ஏற்கெனவே கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது..

சென்னை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் அமலாக்கத்துறை சோதனை நடை பெற்றது. மணல் குவாரி அதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி ரசீதை காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மணல் அள்ளியது தெரியவந்தது.

முறையாக மணல் குவாரி அனுமதி வழங்காமல் அளவுக்கு அதிகமான மணல் எடுப்பதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ரியல் எஸ்டேட் தொழிலில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வரப்பட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுப்பணித்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் வாங்கிய கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருவதால் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவன அதிபர்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர். அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல காசாகிராண்ட் நிறுவனத்திற்கு சொந்தமாக அலுவலகம், உயர் அதிகாரிகளின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனை முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க.!