chennireporters.com

”தகுதியான அதிகாரிகளை நியமனம் செய்து பால்வளத்துறைக்கு புது ரத்தம் பாய்ச்சுங்க முதல்வரே.”

“தகுதியான அதிகாரிகளை நியமனம் செய்து பால்வளத்துறைக்கு புது ரத்தம் பாய்ச்சுங்க முதல்வரே.” தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் மின்னஞ்சல் கடிதம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வெழுதிய 10ம் வகுப்பு படித்து முடித்த தேர்வர்கள் வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர்களாக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றும் பட்டப்படிப்பு முடிக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களில் உரிய கல்வித் தகுதி இல்லாதவர்கள் பதவி உயர்வு பெற தகுதியற்றவர்கள் என 1995ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் அரசாணைக்கு ஆதரவாக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் குரூப் 4 தேர்வு மூலம் தேர்வாகி, இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) வருவாய் கோட்ட அலுவலர்களாகவும், வருவாய்க் கோட்ட அலுவலர்கள் (RDO) வட்டாட்சியர்களாகவும், வட்டாட்சியர்கள் துணை வட்டாட்சியர்களாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி இறக்கம் செய்யப்பட்டனர்.ஆனால் 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையில் (பால்வளத்துறை) பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற 8, 10ம் வகுப்பு மட்டுமே பயின்றவர்கள் விதிகளை மீறி தொடர்ந்து துணைப் பதிவாளர்களாக (பால்வளம்) நீடிப்பதால் பால்வளத்துறையில் தகுதியுடையவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் தடைபட்டுள்ளதோடு, முறைகேடுகள் நடப்பதற்கு வழிவகை செய்வதாகவும் அமைந்து வருகிறது.குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாக விதிகளை கடைபிடிக்காமல் 8, 10ம் வகுப்பு படித்தவர்களை நியமனம் செய்ததால் தற்போது அவர்கள் பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையில் (பால்வளத்துறை) துணைப் பதிவாளர்களாக (பால்வளம்) பதவி உயர்வு பெற்றிருப்பதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னரும் அவர்கள் பதவி இறக்கம் செய்யப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.உதாரணமாக தர்மபுரி திரு. கோவிந்தசாமி (மஸ்தூர்), திருநெல்வேலி திரு. சைமன் சார்லஸ் (இரவு காவலாளி), மதுரை திரு. செல்வம் (கருணை அடிப்படையில் நியமனம்), நாமக்கல் திரு. இரணியன் (கருணை அடிப்படையில் நியமனம்), திரு. சிவகுமார் (கருணை அடிப்படையில் நியமனம்), திருச்சி திரு. ஜெயபாலன் (கருணை அடிப்படையில் நியமனம்), நந்தனம், HQ, திரு. ராஜராஜன் (இளநிலை உதவியாளர்), திருமதி. சித்ரா (இளநிலை உதவியாளர்), திரு. சற்குணம் (இளநிலை உதவியாளர்), திரு. சுரேஷ் (தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர்), வேலூர் திரு. விஸ்வேஸ்வரன் (இளநிலை உதவியாளர்), திரு. சந்திரசேகரன் (தட்டச்சர்), திருவண்ணாமலை திரு. சந்திரசேகர ராஜா (இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்), சேலம் திரு. செந்தில் (ஜூனியர் அசிஸ்டெண்ட்), திருப்பூர் திரு. ஆர்.கணேசன் (தட்டச்சர்), திரு. .எஸ்.கணேசன் (மஸ்தூர்), திரு. நவராஜ் (இளநிலை உதவியாளர்), திண்டுக்கல் திரு. சண்முகநிதி (இளநிலை உதவியாளர்), திருமதி. புவனேஸ்வரி 19பேர் உள்ளிட்ட துணைப் பதிவாளர்கள் இதுவரை பதவி இறக்கம் செய்யப்படாமல் இருக்கின்றனர் என்கிற தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது.அதிலும் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்ற ராஜராஜன் என்பவர் தான் தற்போது துணைப் பால் ஆணையராக நந்தனம் தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகிறார் என்பதும், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் 1.5டன் இனிப்புகள் தனது சொந்த பயன்பாட்டுக்கு எடுத்து சென்ற விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டவர் என்பதும், அதிமுக ஆட்சியில் விதிமுறைகளை மீறி பணி நியமனம், பதவி உயர்வு வழங்கியதற்கு நன்றிக்கடனாக ராஜேந்திர பாலாஜி மீதான அந்த வழக்கையே நீர்த்துப் போகச் செய்தவரான இவர் மீது தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.

 

மேலும் கால்நடை துறையிலிருந்து அயல்பணி அடிப்படையில் Dairy Officer ஆக பணியில் சேர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி, காமராஜ் ஐஏஎஸ் ஆகியோரது ஆதரவோடு ஏற்கனவே காலாவதியான பால் பத அலுவலர் என்கிற பணியிடத்தை இவருக்காக மீண்டும் உருவாக்கி அதன் பொறுப்பில் இருந்தவரும், விழுப்புரம் ஆருத்ரா என்கிற தனியார் பால் நிறுவனத்திற்கு பால் வழங்கி அதற்குரிய சுமார் 3.31கோடி ரூபாய் ஆவினுக்கு வாராக்கடனாகி இழப்பு ஏற்படுத்தியதோடு, ஆவினில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளில் தொடர்புடையவரும், பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகள் தொடர்பாக இணையத்திலும், ஒன்றியங்களிலும் விசாரணை நடத்தும் அதிகாரியாகவும், முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 236பணி நியமனங்கள் தொடர்பான விசாரணை அதிகாரியாகவும் செயல்பட்ட அலெக்ஸ் ஜீவதாஸ் என்பவர் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவரை, பால் பத அலுவலர் என்கிற கோதாவில், துணைப் பதிவாளர் (பால்வளம்) ஆக ரகசியமாக பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் மீதான கடும் குற்றச்சாட்டுகள் மீது இறுதி முடிவெடுத்து பணி அமர்வு செய்திருக்க வேண்டிய சூழலில் அவ்வாறு ஏதும் நடைபெறாமல், கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறையில் வசூல் மாமன்னனாக திகழ்ந்த, அந்த நபரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது மிகுந்த வியப்பை அளிக்கிறது. அதுபோல உரிய கல்வித் தகுதி இல்லாமல் பால்வளத்துறையில் தற்போது பணியாற்றி வரும் துணைப் பதிவாளர்களால் தான் தமிழக பால்வளத்துறை தற்போது முற்றிலுமாக சீரழிந்து, ஊழல், முறைகேடுகள் பெருமளவில் பெருகிப் போய் அத்துறையின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்குவதாக அமைந்துள்ளது.கூட்டுறவுத் துறையில் அரசின் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை ஆய்வாளர்கள், முது நிலை ஆய்வாளர்கள், கூட்டுறவு சார் பதிவாளர் என்கிற நிலையை எய்திட கடும் சிரமத்தில் இருக்கையில், இரவு காவலாளி ஆக இருந்தவர் குறுகிய காலத்தில் துணைப் பதிவாளர் ஆக, அதுவும் மாவட்ட அளவிலான அலுவலராக பணியாற்றும் வகையில் பால்வளத் துறையின் செயல்பாடுகள் உள்ளது வேதனைக்குரிய செயலாகும்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு 1995ம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணை மற்றும் 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையில் (பால்வளத்துறை) உரிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றி வரும் தகுதியற்றவர்களை பதவி இறக்கம் செய்தோ அல்லது பணி நீக்கம் செய்தோ உத்தரவிட்டு, தகுதியானவர்களை பணியில் சேர்க்கவும், ஏற்கனவே பணியில் உள்ள தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், அலெக்ஸ் ஜீவதாஸ் அவர்களை மீண்டும் பால் பத அலுவலர் ஆக நியமனம் செய்ததை ரத்து செய்திடவும் உத்தரவிட்டு பால்வளத்துறைக்கு புது ரத்தம் பாய்ச்சிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தோழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

.

இதையும் படிங்க.!