chennireporters.com

தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் உயரதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஐ.ஜி.முருகன்

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனுக்கு எதிராக, அவருடன் பணியாற்றிய பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார், அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து உயரதிகாரிகளின் அறையிலும் சிசிடிவி பொருத்த வேண்டும். எனது அறையிலும் 2 வாரத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல்துறை உட்பட அனைத்துத் துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் சி.சி.டி.வி. பொருத்துவதன் மூலம், பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், ஐ.ஜி. முருகன் மீதான புகார் குறித்து சிபிசிஐடி குழுவே விசாரிக்கலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனுக்கு எதிராக, அவருடன் பணியாற்றிய பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழுவை அமைத்தது.இந்தக் குழு ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க பரிந்துரைத்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி. முருகன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐ.ஜி.முருகன் மீதான புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு இருவரின் பணி நெறி சார்ந்த வழக்கு. இந்த வழக்கை சம்பந்தப்பட்ட தனி நீதிபதி தான் விசாரித்து இருக்க வேண்டும்.

ஆனால் நேரடியாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் எப்படி விசாரிக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக உள்ளது.எனவே, இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பதற்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் ஐஜி முருகன் மீதான புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!