கோயமுத்தூரில் நடந்த தைப்பூச விழாவில் முருகன் என்றால் அழகன் என்பது மட்டும் பொருள் அல்ல அநீதிக்கு எதிரானவன் என்ற பொருளும் குறிக்கும் என்று மேனாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேசினார். இந்து மதத்தை சேர்ந்தவர்களே முருகனைப் பற்றி இப்படி தெளிவாக பேச மாட்டார்கள் ஆனால் முஸ்லிம் மதத்தை சார்ந்த ஒரு நீதிபதி எவ்வளவு சிறப்பாக இதிகாசத்தையும் தமிழ் கடவுள் அழகன் முருகனைப் பற்றியும் இவ்வளவு வரலாற்று விஷயங்களை பேசுகிறார் என்று விழாவில் கலந்து கொண்டவர்கள் வியப்புடன் பார்த்தனர்.மேனாள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்.
கோவை நேருநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ரங்கசாமிக் கவுண்டர் பழனி தைப்பூச பாதயாத்திரைக் குழுவின் சார்பில் கும்மி நிகழ்ச்சி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசும்போது முருகன் என்றால் அழகன் என்பது மட்டுமல்ல அநீதியை எதிர்ப்பவன் என்பதும் பொருள் என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்து பழனிக்கு போகிற இந்த நிகழ்வுகளில் இதே பகுதியில் வசிப்பவன் என்ற அடிப்படையில் பலமுறை நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
அன்புச் சகோதரர் விசுவநாதன் அவர்களும் அவரை சார்ந்தவர்களும், அவரது குடும்பத்தினர்களும், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒன்று சேர்ந்து பாத யாத்திரையாக பழனிக்கு போய் வருகிறீர்கள்.
மத சமயங்களும், பல்வேறு கடவுள்களும் இருந்தாலும் எல்லா தத்துவங்களும் சேருகிற இடம் ஒன்றாகத்தான் இருக்கிறது.முருகனை தமிழ்க் கடவுள் என்கிறோம்.அதிலும் குறிப்பாக முருகன் என்றால் அழகன் என்று பொருள். ஆனால் முருகன் அழகன் மட்டுமல்ல போரும் செய்திருக்கிறான்.
தேவ சேனாதிபதியாகவும் இருந்திருக்கிறான்.
தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் இன்றும் கொண்டாடப்படுகிறது.சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.திருஞானசம்பந்தர் “தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த” என்று பாடியிருக்கிறார்.
பிற்கால சோழர்கள் காலத்தில் தைப்பூசத் திருநாளில் கோயில்களில் கூத்துகளும் கும்மிகளும் நடத்தப்பட்டதாகவும் திருவுடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடந்ததாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய அருட்பிரகாச வள்ளலார் தை மாதம் ஒரு வெள்ளிக்கிழமை தான் ஒளி வடிவானார். ஒவ்வொரு ஆண்டும் வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் என்ற ஊரில் தைப்பூசம் அன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வள்ளலார் விழாவாக கொண்டாடுகிறார்கள்.
இங்கே பெண்கள் ஒன்றாக சேர்ந்து கும்மி பாடல்கள் பாடி நடனமாடினீர்கள்.
இந்த மகிழ்ச்சி உங்கள் எல்லோருக்கும் எப்போதும் இருக்கட்டும்.
உங்கள் பாத யாத்திரை பாதுகாப்பாக அமையவும் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் நானும் வேண்டுகிறேன் என்று பேசினார்.விழா முடிந்ததும் தைப்பூச விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலான பெண்களும் ஆண்களும் நீதிபதிக்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.