செய்யாறு மேல்மா சிப்காட்டை எதிர்த்த 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம், மக்கள் பாதை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம், நேர்மை மக்கள் இயக்கம் கண்டன அறிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து 124 நாட்களுக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 7 விவசாயிகளை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து நடை பெற்ற போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள், விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, காவல் துறையினர் தடையை மீறி செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 2-ம் தேதி பேரணியாக புறப்பட்டனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நியாய விலை கடை அட்டைகளை ஒப்படைக்க செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது, அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, இரண்டு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். எனினும், அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டும் போராட்டம் தொடர்ந்தது. பின்னர், இவர்களிடம் சார் ஆட்சியர் அனாமிகா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவரிடம் மனுவை அளித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில், பந்தலை காவல் துறையினர் அகற்றினர். தொடர்ந்து மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களில் 7 பேர் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அத்திபாடி கிராமத்தில் வசிக்கும் அருள் ஆறுமுகம் (45), விவசாயிகளான செய்யாறு வட்டம் தேத்துறை கிராமத்தில் வசிக்கும் பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தில் வசிக்கும் தேவன் (45), மணிப்புரம் கிராமத்தில் வசிக்கும் சோழன் (32), மேல்மா கிராமத்தில் வசிக்கும் திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தில் வசிக்கும் மாசிலாமணி (45), குரும்பூர் கிராமத்தில் வசிக்கும் பாக்கியராஜ் (38) ஆகிய 7 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று (நவம்பர் 15-ம் தேதி) உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் உள்ள அருள் ஆறுமுகம், கோவை சிறையில் உள்ள தேவன், கடலூர் சிறையில் உள்ள சோழன், மதுரை சிறையில் உள்ள பச்சையப்பன், திருச்சி சிறையில் உள்ள திருமால், வேலூர் சிறையில் உள்ள மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை செய்யாறு காவல்துறையினர் வழங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து செய்யாறு வட்டத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களாட்சி ஜனநாயக குடியாட்சி நாட்டில் அறவழியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் அவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் கஞ்சா போதைப் பொருட்கள் விற்பவன், கொலை கொள்ளை செய்பவன் மீது போடக்கூடிய தடுப்புக் காவல் சட்டத்தை விவசாயிகள் மீது பயன்படுத்தியுள்ளதுவெட்கக்கேடானது ஆகும். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு அறவழியில் போராடிய ஏழை கூலி விவசாயிகள் மீது போடப்பட்ட தடுப்பு காவல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நேர்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .