பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஐபிஎஸ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஐபிஎஸ்
பாலியல் தொல்லை வழக்கில் ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் தண்டனையை முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள் கிழமை உறுதி செய்தது.
2021, ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை(ஏககாலம்) விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2023, ஜூன் 16-ம்தேதி வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்தார். இந்த விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை ஜனவரி 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யது.
இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இரு வேறு அமர்வுகளில் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுக்கள் ஜனவரி 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து ஜனவரி 29-ம் தேதி நடைபெற்ற விசாரணை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகாத நிலையில் அவரது தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, வாதிட கால அவகாசம் கோரினார். ஆனால், நீதிமன்றம் மறுத்து, பிப்ரவரி 1-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான ராஜேஷ்தாஸ், தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்து தானே வாதாடினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 7-ம் தேதி வரை வாதிட 5 நாட்கள் அவகாசம் வழங்கி முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.
தொடர்ந்து பிப்ரவரி 2,7-ம் தேதிகளில் ராஜேஷ்தாஸும், 5-ஆம் தேதி அவரது வழக்குரைஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர். பிப்ரவரி 6-ம் தேதி இருவரும் ஆஜராகவில்லை. கடந்த 7-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது தான் வாதிடுவதற்கு மேலும் 5 நாட்கள் காலஅவகாசம் வழங்குமாறு ராஜேஷ்தாஸ் கோரினார். ஆனால், அதையேற்க மறுத்த நீதிபதி, பிப்.9அரசுத் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி அரசு வழக்குரைஞர்கள் வைத்தியநாதன், கலா ஆகியோர் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி, அரசுத் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். அரை மணி நேரம் நடைபெற்ற விவாதத்தை பதிவு செய்து கொண்ட முதன்மை நீதிபதி ஆர்.பூர்ணிமா, மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு பிப்ரவரி 12(திங்கள்கிழமை) வழங்கப்படும் எனக்கூறி உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் தொடங்கியதும், ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்குரைஞர்கள் பழனி, ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினார். நிகழ்வு நடைபெற்ற பகுதி கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள்பட்டதால், விசாரணையை அந்த மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருவதால், தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினர்.
இதையேற்க மறுத்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா இந்த மனுவையும், மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார். இது போல பெண் எஸ்.பி-யை பணி செய்ய விடாமல் தடுத்தாக புகார் கூறப்பட்ட அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனுக்கு விதிக்கப்பட்ட ரூ. 500 அபராதத்தையும் நீதிபதி உறுதி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள போலிஸு அதிகாரிகள் மீதான பாலியல் வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி முடிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.