chennireporters.com

ஆப்கானிஸ்தான் கிரிகெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாசின் நாடு கடந்த நல்லெண்ணம்..

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில்  இரவில் தெருவோரத்தில் தூங்கி கொண்டிருந்த ஏழை மக்களுக்கு  தீபாவளியை முன்னிட்டு  அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அந்த  செய்தி சமூக வலைதளங்களில்  ஆகி இருக்கிறது.

இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணி நிர்வாகம் தங்களது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில், ரஹ்மானுல்லா குர்பாஸ், அதிகாலை 3 மணி அளவில் அகமதாபாத் நகரத்தின் தெருவோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே 500 ரூபாய் பணத்தாள்களை அருகில் போட்டு விட்டு செல்கிறார். தீபாவளி பண்டிகையை அவர்கள் உற்சாகமாக கொண்டாடும் உயர்ந்த எண்ணத்தில் அவர் இந்த நற்செயலை செய்திருக்கிறார்.

Alex Davidson-ICC/ICC via Getty Images

அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாடு மிகப்பெரும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கடினமான தருணத்திலும் ஒரு அயல்நாட்டில் குர்பாஸ்காட்டிய இந்த கருணை, தங்களை நெகிழ வைக்கிறது; ஊக்கப்படுத்துகிறது; கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக குர்பாஸ் என்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. சர்வதேச விளையாட்டு அரங்கிலும், இந்திய அரசியல் அரங்கிலும் கூட இது பெரிய அளவில் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. அதற்குக் காரணம் அவரது ஆப்கானிஸ்தான் நாடு தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அசவுகரியமான சூழல்களும், தான் சார்ந்திருக்கும் மதத்தைக் கடந்த குர்பாஸின் மனித நேயமும்தான்.

Rahmanullah Gurbaz (@RGurbaz_21) / X

இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற பத்து அணிகள் கொண்ட பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி இடம் பிடித்ததே பெரிய சாதனையாகும். ஆசியாவின் ஏழ்மை மிகுந்த நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் எப்பொழுதுமே உள்நாட்டு குழப்பங்கள் நிலவும். மதப்பழமைவாதிகளின் கைகளில் நாடு சிக்கி இருப்பதால் அங்கு கல்வி கற்கவோ, விளையாட்டு துறையில் சாதிக்கவோ வாய்ப்பு வசதிகள் கிடையாது. இது போன்ற கடினமான சூழல்களைத் தாண்டி உலகக் கோப்பைகான போட்டி ஒன்றில் ஒரு அணி பங்கேற்க தகுதி பெறுகிறது என்றால் அது சாதாரணமான நிகழ்வு அல்ல. அதைத்தான் ஆப்கானிஸ்தான் செய்து காட்டி இருக்கிறது.

அந்த அணியை காட்டிலும் மிகப்பெரிய அணிகளான வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்றவை கூட இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறாத நிலையில், சொந்த நாட்டில் சர்வதேச தரத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் கூட இல்லாத ஆப்கானிஸ்தான், உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அதையும் தாண்டி இந்த போட்டியின் லீக் ஆட்டங்களில் அந்த அணி, முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை தோற்கடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

WATCH: Viral Video Suggests Rahmanullah Gurbaz Secretly Helping Homeless  People in Ahmedabad - News18

அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போனாலும், பங்கேற்ற பத்து அணிகளில் எட்டாவது இடத்தை பிடித்து தனது திறமையை நிரூபித்தது ஆப்கானிஸ்தான்அரை இறுதி வாய்ப்பை இழந்ததால் அந்த அணி வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப ஆயத்தமாகினர். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த நிலையில், அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த குர்பாஸ் அங்குள்ள நடைபாதைகளில் படுத்து உறங்கிய அடித்தட்டு மக்களை பார்த்து கண்கலங்கி இருக்கிறார்.

அவர்களது ஆப்கானிஸ்தான் நாட்டிலும் இது போன்ற நடைபாதை வாசிகள் அதிகம். அந்த நடைபாதை வாசிகளை தங்களது தாய் தந்தையர் போலவோ, உறவினர் போலவோ, அல்லது தங்களது நாட்டு மக்கள் போலவோ அவர் உணர்ந்து இருக்கிறார். அவர்களைப் பார்த்து மனம் இறங்கிய குர்பாஸ் தன்னை அறியாமல் தனது சட்டை பைக்குள் இருந்த பணத்தை எடுத்து அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்க ளின் அருகில், ஒவ்வொரு 500 ரூபாய் தாள்களை போட்டுச் சென்று இருக்கிறார். இத்தனைக்கும் பிற கிரிக்கெட் வீரர்களைப் போல் அவர் கோடி கோடியாய் சம்பாதித்தவர் அல்ல; இப்பொழுது தான் அவர் ஓரளவு சம்பாதிக்கவே தொடங்கி இருக்கிறார்.

ICC Cricket World Cup 2019: Afghanistan team profile - India Today

பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் கொடுப்பதை கூட நமது ஊரில் படம் எடுத்து போஸ்டர் அடித்தும், சமூக வலைதளத்தில் பதிவிட்டும் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளும் அற்பர்களுக்கு மத்தியில், உதவி செய்வது, தான்தான் என்பது தெரிய வேண்டும் என்று கூட நினைக்காமல் குர்பாஸ் இந்த உதவியை செய்திருக்கிறார். அந்த நேரத்தில் ஒருவர் எடுத்த இந்த வீடியோவைத் தான் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அவரது மனிதநேயத்தை பெருமைப்படுத்தி இருக்கிறது.

நடைபாதை வாசிகளின் அருகில் 500 ரூபாய் தாளை வைத்த போது, அவர்கள் தான் சார்ந்த இஸ்லாம் மதத்தினராக இருக்கலாம் என நினைத்தா குர்பாஸ் அந்த உதவியை செய்தார்? நிச்சயமாக இல்லை. காரணம் அதுதான் உண்மையான மனித நேயம். அந்த இடத்தில் குர்பாசின் கண்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்;அந்த நடைபாதை வாசிகளின் ஆதரவற்ற நிலை. அவர்களது வறுமை. அவர்களின் இயலாமை இதன் காரணமாகவே மனம் நெகிழ்ந்தும், உதவி புரிவதை நினைத்து மகிழ்ந்தும் குர்பாஸ் தனக்குள் இருக்கும் மனிதத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனது அபாரமான பேட்டிங் திறமையால் ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட அவர், இப்போது ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களுக்குள்ளும் குடி புகுந்திருக்கிறார்.

இந்த மகத்தான நிகழ்வின் மூலம் தான் சார்ந்த மதம், தான் பேசும் மொழி, தான் வசிக்கும் நாடு என்பதை எல்லாம் தாண்டி, தான் ஒரு மனிதன் என்பதை மட்டும் மிக நயமாக உறுதிப்படுத்திச் சென்று இருக்கிறார் ரஹ்மானுல்லா குர் பாஸ். இந்த மதத்தைச் சார்ந்தவர் என்றால் அவர் ஒரு தீவிரவாதி என முத்திரை குத்தும் மூடர்கள் இதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் நிற்காமல் மத வெறுப்பில் ஈடுபடும் கேடுகெட்ட தங்கள் சிந்தனையில் இருந்து விடுபட வேண்டும். இதே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தான் மற்றொரு மோசமான நிகழ்வையும் உலகத்திற்கு எடுத்துக் காட்டியது.

இதே குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் லீக் ஆட்டத்தில் விளையாடிய போது, அந்த மாநிலமே திரண்டு வந்து அந்த மைதானத்தில் அமர்ந்தது போல் அப்படி ஒரு கூட்டம். ஆனால் அங்கே விளையாட்டு ரசிக்கப்பட்டதாக தெரியவில்லை. இது ஒரு விளையாட்டு என்பதை மறந்து பாகிஸ்தான் வீரர்களை தங்களுக்கு எதிரான போர் வீரர்களாக சித்தரித்து ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் எழுப்பப்பட்டதை பார்த்து உலகமே முகம் சுழித்தது. அதை நியாயப்படுத்துவது போல் ஆளும் பாஜக அரசு சார்பில் சம்பிரதாயத்திற்கு கூட கண்டனம் தெரிவிக்கப்படவில்ல. நமது பிரதமர் மோடி வழக்கம் போல் மௌனியாகவே இருந்தார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குரூபாஸின் இந்த மனிதநேயம், அந்த சம்பவத்திற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறது. மதமும், அது உயர்த்தி பிடிக்கும் சிந்தனையும், மத வெறியும் மனிதனுக்குள் இருக்கும் மனிதத்தை கொன்றுவிடும் என்று பாடம் நடத்தி யிருக்கிறது.

நாடு, மொழி, மதம் கடந்த சிந்தனையே வாழ்க்கையை அழகாக்கும்; ஒரு நிம்மதியான சமூகத்தை வாழ வைக்கும் என தனது மனிதநேயத்தால் வெளிப்படுத்திய குர்பாஸே போய் வாருங்கள்! அடுத்த போட்டிக்காக நீங்கள் இந்தியா வந்து விளையாடப் போகும் அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..

இதையும் படிங்க.!