தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை விமர்சித்தும் தரகுறைவாகவும் பேசி வருகிறார். அதனை கண்டித்து பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன் தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவர் எழுதிய கடிதத்தை நமது வாசகர்களுக்கு நாம் அப்படியே தருகிறோம்.
ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணலை பார்த்துவிட்டு,,
அதற்கான விமர்சனத்தை “பல்லு படாம பார்த்து பண்ணுங்க” வார்த்தைகளில் சொல்கிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை..
என்னிடம் சில பத்திரிகை துறையை சேர்ந்த நண்பர்கள்.என்னங்க இப்படி பேசுகிறார் என்று ஆதங்கப்பட்டனர். நான் பதில் எதுவும் சொல்லவில்லை..
பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன்
ஆனால்”பல்லு படாம பண்ணுவது” எப்படி என்று தெரிந்துகொள்ள திரு.அண்ணாமலை சில ஹிந்தி மொழி தொலைக்காட்சிகளுக்கு, பிரதமர் கொடுத்த பேட்டியைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.அரசியலுக்கு அது அவசியமும் கூட
மற்றபடி,28-05-22 அன்று அண்ணாமலைக்கு நான் எழுதிய கடிதத்தை மீண்டும் பதிவிட விரும்புகிறேன். வேறொன்றுமில்லை
இனி கடிதம்;
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் உப்பின் பெயர் என்ன ?
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு ஒரு கடிதம்.
மரியாதைக்குரிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம்..
கடந்த முறை உங்களுக்கு எழுதிய கடிதத்தில்,, உங்களது வாலைப்பிடித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள்
நீங்கள் ரத்தம் வருமளவு கடித்தாலும் கூட வெட்கமே இல்லாமல்
திரும்பத்திரும்ப வருவார்கள் என்று கூறியிருந்தேன்.
உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.
நான் சொன்னது அப்படியே நடக்கிறது பார்த்தீர்களா ?
எனக்கு ஆழமான கடவுள் நம்பிக்கை இருக்கிறது சார்..
உங்கள் மீது துளியும் கோபமோ வருத்தமோ இல்லை. ஆனால்..
உங்களுக்கு திரும்பவும் கடிதம் எழுதத்தொடங்கியபோது,
“இறைவா.. தப்பித்தவறி கூட கெட்ட வார்த்தையை எந்த இடத்திலும் பயன்படுத்திவிடக்கூடாது” என வேண்டிக்கொண்டே எழுதுகிறேன்.
காரணம் பயமெல்லாம் கிடையாது.
உடம்பெல்லாம் சேறும் சகதியும் நிரம்பிய பன்றி ஒன்று நம் மீது வேண்டுமென்றே மோதிவிட்டது என கோபப்பட்டு,அதை கைகளால் அடிக்கத்தொடங்கினால் நம்முடைய கைகளிலும் சேறு தானே ஒட்டிக்கொள்ளும். அதனால் தான் அப்படி ஒரு பிரார்த்தனை தேவைப்படுகிறது.
சரி விஷயத்திற்கு வருகிறேன். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி தான் அரசியலில் உங்களை நீங்கள் இணைத்துக்கொண்டீர்கள்.
இன்றோடு அரசியலுக்கு நீங்கள் வந்து 19 மாதங்கள் 3 தினங்கள் ஆகிறது.
கர்நாடகாவில் பணியாற்றியபோது பிஜேபியின் கால்களை கழுவி சேவகம் செய்தது,RSS நிர்வாகிகளை காக்கா பிடித்ததன் பலனாக தமிழக பிஜேபி தலைவராக,இப்போது பதவியில் இருக்கிறீர்கள்.
வேறு நீங்கள் என்ன செய்து கிழித்துவிட்டீர்கள் தமிழக பிஜேபிக்காக..நாட்டை ஆளும் கட்சியின் மாநிலத்தலைவரான நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரிகிறதா அண்ணாமலை அவர்களே ?தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் என்ற மனுஷி உருவாக்கி வைத்திருந்திருந்த உறவுப்பாலத்தை வெடிவைத்து தகர்த்து வருகிறீர்கள்.
27-05-22 ம் தேதி நடந்த உங்களுடைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நீங்கள் பேசியது சரியென்று உங்களுக்கு தோன்றுகிறதா ? ரூ.200,ரூ.400 வாங்கிக்கொள் என்று தொகையை ஏற்றிக்கொண்டே செல்கிறீர்கள். ஏலம் விடுகிறீர்கள். வெளிப்படையாக ஏளனம் செய்கிறீர்கள். பிரதமரின் வருகையின் போது அனுமதியோடு தான் பேனர் வைக்கப்பட்டதா என்று கேட்பது, பிஜேபி கட்சிக்கு எதிரான அவதூறா ஐயா?
சென்னை மாநகராட்சி பேனர் வைப்பதற்கு எந்த அனுமதியும் வழங்குவதில்லை.
அப்படி இருக்க நீங்கள் யாரிடம் அனுமதி வாங்கினீர்கள் ?
சென்னையில் எந்த அளவில் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது என்றாவது தெரியுமா உங்களுக்கு ?
தற்காலிகமாக பேனர் வைத்தால்கூட , அரசுக்கு தலா 50 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அரசின் அனுமதியே இல்லாதபோது,பேனர் வைத்ததற்கான கட்டணத்தை எந்த துறைக்கு செலுத்தினீர்கள் மிஸ்டர் ?
மிக எளிமையாக கடந்து செல்லவேண்டிய ஒரு கேள்விக்கு உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம் வருகிறது..அண்ணாமலை…? அத்தோடு, கேள்வி கேட்ட தம்பியிடம் அறிவாலயத்தில் இருந்து பணம் வந்துவிடும் என்று அடிக்கடி நக்கலாக கூறுகிறீர்களே ..அறிவாலயத்திடம் இருந்து எப்போது,யார் அப்படி பணம் வாங்கும் போது விளக்கு பிடித்து பார்த்தீர்கள் அண்ணாமலை.?
சூடு,சொரணை,வெட்கம்,மானம் எதுவுமே இல்லாமல் உங்களது செய்தியாளர் சந்திப்புக்கு வரும் பத்திரிகையாளர்கள் உங்களிடமோ அல்லது உங்கள் கட்சி நிர்வாகிகளிடமோ வாயைத்திறந்து, யார் பணம் கேட்டார்கள் என்று உங்களுக்கு உண்மையிலேயே ஆண்மை இருந்தால் கூறமுடியுமா ?
30 ஆண்டு சர்வீஸ் இருந்தும் அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு பிஜேபி மாநிலத் தலைவர் என்ற பதவியோடு பந்தாவாக காரிலும் விமானத்திலும் நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்களே அதற்கு உங்கள் கட்சி தானே செலவு செய்கிறது ?
அந்த பணம் யாருடைய பணம் சார் ? பெரிய பெரிய தொழில் நிறுவனங்களிடம் நன்கொடை என்ற பெயரில் பிச்சை எடுத்த பணம் தானே ?
இப்படி ஊரெல்லாம் பிச்சை எடுத்த காசில் ஊரை சுற்றி வரும் நீங்கள்
தொழில் தர்மம் குறித்து பேசுகிறீர்கள் ?
உண்ணும் உணவு உடம்பில் ஓட்டவேண்டும் என்றெல்லாம் பாடம் எடுக்கிறீர்கள்..
பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன்
அதாவது உங்கள் கட்சி குறித்து அவதூறு செய்தால் நீங்கள் திருப்பி அடிப்பேன். அதுவே என் தர்மம் என்கிறீர்கள். நல்லது
அவ்வளவு பெரிய யோக்கிய சிகாமணியா அண்ணாமலை நீங்கள் ? அப்படி என்றால் கடந்த ஆண்டு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் எதற்காக விலைமதிப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்தீர்கள் அண்ணமலை ? நீங்கள் கொடுத்த செல்போனை எல்லோருமே வாங்கிக்கொண்டார்களா என்ன ?
அதாவது.லஉங்களை அவதூறு செய்தால் திருப்பி அடிப்பது உங்களுக்கு தர்மம் என்றால், பத்திரிகை துறையை சேர்ந்தவர்களை நீங்கள் அவமானப்படுத்தினால்
அதற்கு உரிய பதிலை கொடுப்பது, அதே துறையைச்சேர்ந்த எனக்கும் தர்மம் தானே?
நீங்கள் கூறுவது போல பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு சாதகமானவர்களாக மாற்றிக்கொள்ள முடியுமென்றால் ரெட் லைட் மீடியா என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு R.S.பாரதி ஏன் திட்டினார் அண்ணாமலை ?
உண்ணும் உணவு, உடம்பில் ஒட்டும்படி நேர்மையாக வாழும் ஆசாமி தானே நீங்கள்!
கொஞ்சம் யோசித்து பாருங்களேன். இந்தியாவின் சரித்திரத்தில்,,ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் இருக்கும் தொலைக்காட்சிகள்/பத்திரிகை களின் முக்கிய நபர்களை அழைத்து, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரகசியமாக கூட்டம் போட்டதே கிடையாது.
மரியாதைக்குரிய அமைச்சர் அனுராக் தாக்கூர் எதற்காக,குறிப்பிட்ட தமிழக பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து, ரகசியமாக சந்தித்து பேசினார் ?
என்ன காரணம் அண்ணாமலை ?
இலுமினாட்டிகளை போல எதற்காக அந்த சீக்ரட் சந்திப்பை நடத்தினீர்கள் என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு ? அவர்களது தங்குமிடம் விமானப்போக்குவரத்து செலவையெல்லாம் யார் செய்தார்கள்? நீங்கள் தொழில் நிறுவனங்களிடம் பிச்சையெடுத்த பணத்தில் தானே செலவு செய்தீர்கள் ? இல்லை மத்திய அரசின் செலவா ?
இது தான் தர்மப்படி நாணயமாக நடக்கக்கூடிய கட்சியின்/ அரசின் அடையாளமா என்ன?
இந்தியாவிலோ,தமிழகத்திலோ இப்படி எந்த கட்சியும்/ ஆட்சியாளர்களும் ரகசியமாக பத்திரிகை மற்றும் ஊடகங்களை சந்தித்தது இல்லை..
உங்கள் கட்சி மட்டும் ஏன் அதை செய்து வருகிறது ஐயா ?
இந்தியாவில் இருக்கும் மொத்த ஊடகத்தையும் பிஜேபிக்கு ஏற்றார் போல ஆடவைத்துவிட்டீர்கள். தென்மாநிலங்களில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.
அதற்காக தானே ரகசிய சந்திப்பு நடத்தி வருகிறீர்கள் ?
உங்களது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் உங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர் பிரபல தொலைக்காட்சியின் இளம் செய்தியாளர்.
அறிவாலயத்திடம் இருந்து பணம் வாங்கிக்கொள் என்று அவமானப்படுத்திய பிறகு,நீங்கள் அதோடு நின்றீர்களா என்ன ? இல்லை..வெளிநாட்டில் இருக்கும் அந்த தொலைக்காட்சியின் உரிமையாளருக்கு தொலைபேசியில் அழைத்து புகார் வேறு செய்திருக்கிறீர்கள். உங்கள் யோக்கியதை என்னவென்று உங்களுக்கு தெரிகிறதா ?
ஆங்கில நாளிதழ் செய்தியாளரையும் சமீபத்தில் ஏகவசனத்தில் பேசியிருக்கிறீர்கள்.
வீட்டில் இருக்கும் நபர்கள் பற்றியெல்லாம் கூட பேசி வரம்பு மீறி இருக்கிறீர்கள். நான் இந்த கடிதம் எழுதும் போது, கடவுளை வேண்டிக்கொண்டே எழுதுவதால் தவறான வார்த்தைகளை பயன்படுத்திவிடக்கூடாது என்று கவனத்தோடு இருக்கிறேன்.
உங்களது பேட்டியை பார்த்துவிட்டு என்னுடைய நண்பன் ஒருவன் அழைத்திருந்தான். என்னடா.. அண்ணாமலை பெரிய டேஷ் போல பேசறான்..
நீங்கெல்லாம் சோறு தான் திங்கறீங்களா இல்லை வேற ஏதாவது திங்கறீங்களான்னு கேட்டான்.
நான் என்ன சொல்லியிருப்பேன்னு நினைக்கறீங்க ?பதிலே சொல்லவில்லை எழுதவே முடியாத வார்த்தைகளில் என்னை கண்டபடி திட்டிவிட்டு போனை வைத்துவிட்டான். அவன் எந்த கட்சி தெரியுமா ? பிஜேபி..
நீங்கள் கூறுவது போல பணம் வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு கோடீஸ்வரனாக மாறிய ஒரே ஒரு பத்திரிகையாளரை தமிழகத்தில் உங்களால் காட்ட முடியுமா அண்ணாமலை அவர்களே ?பஞ்சப்பராரிகளைப்போல,, பத்திரிகையாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் மிஸ்டர். அதனால் தான் அவர்களுக்கு நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், “அண்ணா.. அண்ணா..” என் பேரை கொஞ்சம் போடுங்க, என்னையும் சேர்த்து படம் பிடிங்கன்னு பத்திரிகையாளர்களை கெஞ்சி கோடீஸ்வரன் ஆன அரசியல்வாதிகளை நான் காட்டவா…?
2014-க்கு முன்பு வரை தமிழக பிஜேபியின் நிலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா ? 50 சேர் போட்டு ஒரு தெருக்கூட்டம் கூட்டம் போடுவதற்கு கூட தடுமாறுவார்கள். கட்சி முக்கிய நிர்வாகிகளின் வெளியூர் பயணச்செலவுகளுக்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு,,
அதிமுக அரசுக்கு ஏற்பட்ட அச்சத்தின் விளைவாக, தமிழக பிஜேபியின் வசதி அதிகரிக்கத்தொடங்கியது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களிடம் பணமே வாங்கவில்லை என்று உங்கள் கட்சி நிர்வாகிகளை கூறச்சொல்லுங்களேன் பார்க்கலாம். இப்படி ஊரெல்லாம் காசை பிச்சையெடுத்து கட்சி நடத்தும் நீங்கள் தான்..
பத்திரிகை துறையை சேர்ந்தவர்களை அறிவாலயத்தில் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று இழிவாக பேசுகிறீர்கள். அதாவது,
உங்களது செய்தியாளர் சந்திப்புக்கு வந்து கேள்வி கேட்டால் அறிவாலயத்தில் பணம் கொடுப்பார்கள்.அப்படித்தானே !?
தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிமுக,திமுக மற்றும் எந்த கட்சியின் அரசியல் தலைவரும் இன்னொரு கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு எங்களுக்கு எதிராக எழுதுகிறீர்கள் என்று ஒரு நாளும் பத்திரிகையாளர்களை நோக்கி பேசியதில்லை.
அவ்வளவு ஏன்,,உங்களுக்கு முன்பு தமிழக பிஜேபி தலைவர்களாக இருந்த ஒரே ஒரு நபர் கூட பேசியதில்லை. நீங்கள் மட்டுமே இந்த தரங்கெட்ட வேலையை செய்து வருகிறீர்கள். கமலாலயத்திற்கு செய்தியாளர்கள் வருவது “அண்ணாமலை” என்ற உங்களுக்காக அல்ல. பிஜேபி என்ற கட்சிக்காக.
உங்களது இடத்தில் ஒரு கழுதையை அமரவைத்தாலும் வருவார்கள்..
ஏனென்றால், அது அந்த கட்சிக்கு கொடுக்கும் மரியாதை என்ன சொல்கிறீர்கள்!?
செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருக்கவேண்டுமா ? சரி…
நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் நேர்மையற்றவர்கள் என்றே வைத்துக்கொள்வோம். நீங்களே ஹரிச்சந்திரனின் மறுபிறப்பாக இருந்து கொள்ளுங்கள்
நீங்கள் கூறும் அதே நேர்மையை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடமும் எதிர்பார்ப்பது தவறில்லை தானே ? ஒரு பழைய விஷயத்தை நினைவூட்டுகிறேன்.
ஏன் தெரியுமா ? இதெல்லாம் உங்களுக்கு தெரியாது.
2016-ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, குஜராத் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் அவசர அவசரமாக தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது. எவ்வளவு தொகை தெரியுமா ? 745 கோடி ரூபாய்.
அப்போது அந்த வங்கியின் இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் யாரென்று நான் கூறப்போவதில்லை. இந்தியாவிலேயே அதிகமான தொகை மாற்றப்பட்ட,கூட்டுறவு வங்கி அது ஒன்று மட்டுமே. ஆனால், நான் சொல்ல வரும் விஷயம் இதுவல்ல.
2018-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி மாநிலங்களவையில் கேள்வி எண். 668 நீரஜ் சேகர்,ரவி பிரகாஷ் வர்மா என்ற இரண்டு உறுப்பினர்கள் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் பணம் மாற்றப்பட்டது குறித்து கேள்வியெழுப்பினர்.
முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த மரியாதைக்குரிய திரு.பொன் ராதாகிருஷ்ணன் தான் எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தார்.
வெறும் 5 தினங்களில் 745 கோடி பழைய ரூபாய் தாள்கள் அந்த வங்கியில் மாற்றப்பட்டது உண்மையே என்று..
ஆனால்,என்ன ஆச்சர்யம் தெரியுமா ? அந்த ஆவணத்தையே ராஜ்யசபாவின் இணையப்பக்கத்தில் பதிவிடவில்லை மத்திய அரசு.
இதெல்லாம் நாடாளுமன்ற வரலாற்றில் நடக்காத விநோதங்கள்.
இவ்வளவு உண்மையும் நேர்மையும் ததும்ப ததும்ப ஆட்சி செய்யும் கட்சியின் மாநிலத்தலைவரான நீங்கள் தான் பத்திரிகைகளுக்கு நாணயம் குறித்து பாடமெடுக்கிறீர்கள். அவ்வளவு ஏன்,, இந்த நாட்டின் பிரதமர் பெயரில் இருக்கும் Namo App-ன் உரிமையாளர் யாரென்றே மத்திய அரசாங்கத்தின் எந்த அமைச்சகத்துக்கும் தெரியாது. எவ்வளவு கேலிக்கூத்து பாருங்கள்..
அந்த Namo App மூலமாக கூச்சமே இல்லாமல் தேசத்தின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் சொந்த கட்சியின் தொண்டர்களை ஏமாற்றி பணம் வசூலித்துக்கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் உலகத்தில் எந்த நாட்டிலாவது நடக்குமா அண்ணாமலை அவர்களே. யோசித்து பாருங்கள்..
கர்நாடகாவின் மொத்த IPS அதிகாரிகளின் எண்ணிக்கை 215..
அதில் ஒருவராக, இளநிலை அதிகாரியாக இருந்த உங்களை எவனோ ஒரு ஆர்வக்கோளாறு செய்தியாளர் “கர்நாடகா சிங்கம்”-னு உங்களுக்கு டைட்டில் கொடுத்தான் பாருங்க.
இன்று பிஜேபியின் மாநிலத் தலைவர் என்ற ஆணவத்திலும் அகம்பாவத்திலும் வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா ? உங்கள் பொது வாழ்க்கைக்கான விதை போட்டது அந்த பத்திரிகைக்காரன் கொடுத்த டைட்டில் என்பதை மறந்துவிடாதீர்கள் அதற்காக,, விமர்சனத்திற்கோ,கேள்விகளுக்கோ அப்பாற்பட்டவர்கள் செய்தியாளர்கள் என்று நான் கூறவில்லை.
சரியான முறையில் நாகரீகமாக பேசுங்கள். தவறாக, அவதூறாக செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். எருமை மாடு மேய்ப்பதற்காகவா வழக்கறிஞர் பிரிவை வைத்துள்ளீர்கள் ?
அப்புறம், அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கும் சில நூறு ரூபாய்கள் பிச்சையல்ல ப்ரதர். அது துறவியின் பாத்திரத்தில் வைக்கப்படும் காணிக்கைக்கு சமமானது.
ஏனெனில் உங்களைப்போன்ற அரசியல்வாதிகள் செய்யும் எந்தவிதமான அயோக்கியத்தனத்தையும் பத்திரிகையாளர்கள் செய்வதில்லை. அநியாயமாக பணத்தையும் சம்பாதிப்பதில்லை.
அரசு ஊழியர்களைப்போல லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து சேர்ப்பதில்லை. மன்னர் கால புலவர்களைப்போல பரதேசிகளாகவே வாழ்ந்து மடிகின்றனர். ஆகையால், பணத்தை காரணம் காட்டி பத்திரிகை துறையை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் இல்லை.
குறிப்பாக,,கர்நாடகாவில் தானே வேலை செஞ்சீங்க?
40% லஞ்சம் கேட்டு சொந்த கட்சிக்காரனையே தற்கொலைக்கு தூண்டி சாகடித்த பிஜேபி என்ற கட்சியின் தமிழக தலைவரான உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.
ஒரு சாதாரண கேள்விக்கே,,பத்திரிகையாளர்கள் கட்சியை அவதூறு செய்யும் நோக்கத்தில் கேட்கிறார்கள் என்பது போல ஒரு நிமிடத்தில் திசை திருப்புகிறீர்கள்.
கூடவே உங்களுக்கு கோபம் வேறு அவ்வளவு வருகிறது..
சும்மா சொல்லக்கூடாது ஜெகஜ்ஜால கில்லாடி சார் நீங்க !
சரி.. உங்கள் வீட்டில் வாங்கும் உப்பின் பெயர் என்ன அண்ணாமலை சார்?
அடுத்த முறை பிரஸ் மீட் வைக்கும் போது,, அங்கு வரும் செய்தியாளர்களுக்கு, மறக்காம ஆளுக்கு ஒரு பாக்கெட் கொடுங்க..
கொஞ்சமாவது அவர்களுக்கு சொரணை வரட்டும்.