chennireporters.com

வடலூர் வள்ளலார் அன்னதானம் அவலம். புளிக்கரைசல் தண்ணியும் பொல்லாத மனிதர்களும்.

தமிழக முழுவதும் உள்ள கோயில்களில் இந்து அறநிலைய துறை சார்பில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் தரம் இல்லாத உணவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரம் இல்லாத காய்கறிகளைக் கொண்டு சமைத்து வழங்கப்படுவதாக பெரும்பாலான பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

குறிப்பாக கடலூர் மாவட்டம் வடலூரில் இயங்கி வரும் சத்திய ஞான சபையில் வள்ளலார் தொடங்கி வைத்த அன்னதான கூடத்தில் வழங்கப்படும் உணவு தரம் இல்லாத உணவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்திய ஞான சபையை உருவாக்கிய வள்ளலார் 1867 ஆம் ஆண்டு வியாழக்கிழமை அணையா அடுப்பை மூட்டி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.இந்த சத்திய ஞான சபையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவிற்கு பொதுமக்களும் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரிசி மற்றும் மளிகை காய்கறிகள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.தினமும் காலையில் பொங்கல் மற்றும் இட்லி வழங்கப்படுகிறது. மதியம் சோறு, சாம்பார், ரசம், மோர், கூட்டு வழங்கப்படுகிறது. இரவு நேரத்தில் பெரும்பாலான நேரங்களில் புளிக்கரைசல் தண்ணியைப் போல ஒரு காரக்குழம்பு வழங்கப்படுகிறது.

இது பச்சைத் தண்ணீரில் புளியை கரைத்து பஞ்சத்தில் இருப்பவர்களுக்கு பரிதாபம் பார்த்து தருவதைப் போலவே இருக்கிறது என்கிறார்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வள்ளல் பெருமான் வயிற்றைக் கழுவ வகை செய்வார் என்று சோற்றுக்கு வழியில்லாமல் காத்திருக்கும் முதியோர்கள்.ரசம் பற்றி சொல்லவே தேவையில்லை. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு அந்த ரசம் இருக்கும். மதியம் வழங்கப்படும் மோரில் அதாவது தண்ணியில் கொஞ்சம் தயிரை கலந்து மோராக ஊற்றுவார்கள். இப்படித்தான் தினம் தோறும் வடலூர் சத்திய ஞான சபையில் வழங்கப்படும் அன்னதானத்தின் நிலை இருக்கிறது. இந்த அன்னதான கூடத்தில் வழங்கப்படும் உணவுகள் அங்கு பணியாற்றுபவர்கள் யாரும் சாப்பிடுவது இல்லையாம் அதாவது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தனியாக சமையல்  செய்யப்படுவதாக சொல்கிறார்கள்  அங்குள்ள சில ஊழியர்கள். அங்கு வழங்கப்படும் உணவை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் ஒரு நாள் கூட சாப்பிட்டது இல்லை என்கிறார்கள் அங்கு இருக்கும் முதியோர்கள்.

156 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் அன்னதானத்தின் தரம்  தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்து அறநிலையத்துறையை அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் உணவை சமைக்கும் அறைக்குச் சென்று தினமும் உணவின் தரத்தை ஆராய்ந்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேண்டுதலுக்காகவும் கருணை அடிப்படையில் உணவு வழங்க வேண்டும் என்று நிதி அளித்து வரும் பொதுமக்கள் அங்கு சாப்பிடும் போது உணவின் தரம் நன்றாக இல்லை என்று சாப்பிடாமல் இலையை குப்புற மூடிவிட்டு எழுந்து செல்கின்றனர்.

இரவு நேரங்களில் பெரும்பாலும் உணவு வீணாகிறது. காரணம் குழம்பு சரியில்லை என்பதால் நிறைய பேர் சாப்பிடாமல் செல்கிறார்கள் வேண்டுதலுக்காக அந்தப் பகுதியில் பொதுமக்கள் கொண்டுவரு வந்து தரும் உணவுகளையே பெரும்பாலும் சாப்பிடுகின்றனர். குறிப்பாக இரண்டு மூன்று வேலை தேநீர் மற்றும் உணவுகளும் இலவசமாக    வழங்கப்படுகிறது.அதிகாரிகள் தங்களது கடமைகளை சரியாக செய்யாமல் உணவு தயாரிக்கும் ஊழியர்கள் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தி தரமான உணவை வழங்க வேண்டும் வள்ளலார் மூட்டிய அணையா அடுப்பும் வள்ளலாரின் ஜோதியும் வயிறார சோறு போட மறுக்கும் கயவர்களின் வாழ்க்கையை வள்ளலாரின் ஜோதி எரித்து சாம்பலாக்கும் என்பது மட்டும் உறுதி. மனிதர்களே கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க.!