தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடைபெற்று வருவதாகவும், ஒரு பத்திரத்திற்கு ரூ.5500 லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார்.வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி
பத்திரப் பதிவு அலுவலகங்களிலும், புரோக்கர்கள் வீடுகளிலும் மாலை 5 மணிக்கு மேல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் கட்டு கட்டாக பணம் எடுக்கலாம் என்றும் இப்பணத்தை வைத்து தமிழகத்தின் கடனையே அடைத்து விடலாம் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். குறிப்பாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், தமிழகத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு, மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாரமனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில், அமலாக்கத்துறை விவசாயிகளுக்கு அளித்த சம்மன், தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத்தில் அமைக்க போகும் கூட்டணி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
அப்போது பத்திரப்பதிவு குறித்து பேசுகையில், தமிழகத்தில் பத்திரப் பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஒரு பத்திரத்துக்கு ரூ.5500 வசூலிக்கப்படுகிறதும் என்றும், இதை அமைச்சருக்கான கட்டணம் என்று கூறுகிறார்கள் என்றும் அண்ணாமலை பெரும் குற்றச்சாட்டை கூறினார்.
மேலும் தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் லாபி நிலவுவதாக கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சில புரோக்கர்களை பார்த்து பணம் கொடுத்தால் இரவு 6 மணிக்கு மேலும் பத்திரப் பதிவு செய்யலாம் என்றும் பத்திரப் பதிவுத்துறையில் ஊருக்கு ஊர் ஒரு புரோக்கர் உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக பத்திரப் பதிவுத்துறையை மிக மோசமாகவும், பணம் வசூலிக்கும் துறையாகவும் துறையின் அமைச்சர் மூர்த்தி மாற்றி வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, இதை கண்டித்து பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு முன்பு பாஜக போராட்டம் நடத்தும் என்றும், பத்திரப் பதிவு அலுவலகங்களிலும், புரோக்கர்கள் வீடுகளிலும் மாலை 5 மணிக்கு மேல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் கட்டு கட்டமாக பணம் எடுக்கலாம். இப்பணத்தை வைத்து தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி உதவியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புள்ளி விபரத்துடன் தெரிவித்த நிலையில், இதற்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருந்தார். இதுபற்றி விளக்கம் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பல மாவட்டங்கள் பீகாரை விட மோசமாக இருக்கிறது. அந்த மாவட்டங்களில் ஒரு வளர்ச்சி திட்டங்கள் கூட இல்லை. தமிழகத்தின் நிதி பகிர்வு அனைத்து மாவட்டங்களுக்கும் சரிசமாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதா? இதற்கு தமிழக முதல்வர் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து பேசிய அண்ணாமலை, அரசு போக்குவரத்து கழகத்துக்கு அரசு வழங்க வேண்டிய இலவச பயணத்துக்கான மானியம் கொடுக்கப்படவில்லை என்றும் கடன் சுமை அதிகரித்துள்ளதால் சம்பளத்தை உயர்த்த முடியவில்லை, காலியிடங்களை நிரப்ப முடியவில்லை. வருவாய் வட்டி கட்டவே சரியாக போய்விடுகிறது என்றார்.
இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில் மாநில அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணாமலை, அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்தாலும், வேலை நிறுத்தம் நடந்தால் என்ன ஆகும் என யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியதில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அண்ணாமலை மறுத்தார்.