chennireporters.com

அனைவருக்கும் அள்ளிக் கொடுத்த கருப்பு தங்கம். மறைந்தார் மதுரை சிங்கம் விஜயகாந்த்.

“தே.மு.தி.க நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023)  விடியற் காலை 5 மணியளவில் மரணமடைந்தார் என்ற செய்தி தே.மு.தி.க-வுக்கும், திரையுலகினருக்கும்,  பேரிழப்பாகும். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்திடும் வகையில், சென்னை தீவுத்திடலில் வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை வைக்கப்படும்.

 

அதைத் தொடர்ந்து, கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து மதியம் 1:00 மணியளவில் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக தே.மு.தி.க தலைமைக் கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4:45 மணியளவில் நடைபெற்று, தே.மு.தி.க தலைமைக் கழக வளாகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தே.மு.தி.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

கோயம்பேடு தே.மு.தி.க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் உடலுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரையுலகில் முத்திரை பதித்த சிறந்த நடிகரும், தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவருமான மதிப்புக்குரிய நண்பர் விஜயகாந்த் அவர்கள் (வயது 71) உடல் நலக்குறைவு காரணமாக இன்று (28.12.2023) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம், வேதனையடைகிறோம்.வெள்ளையுள்ளம் கொண்டு கறுப்பு வைரமாகவே அவர் வாழ்ந்தவர். சிறந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கு ‘பெரியார் விருது’ (30.4.1994)அளித்து மகிழ்ந்தவர்கள் திராவிடர் கழகத்தவர்.கட்சியின் பெயரில்கூட “தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்“ என்ற திராவிட உணர்வைப் பதித்தவர். அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். கலையுலகிலும், அரசியலிலும் தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து வரலாறு படைத்த அவரது மறைவால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அவரது துணைவியாரும், தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன்கள் உள்பட குடும்பத்தினர், தே.மு.தி.க.வின் பொறுப்பாளர்கள், கலையுலகத்தினர் எல்லோருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” வீரமணி

தேமுதிக நிறுவன தலைவர், தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த, மிகச் சிறந்த மனிதநேயப் பண்பாளர், புரட்சி கலைஞர் மதிப்புமிகு. ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள், மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். தமிழ் மக்களுக்காக கர்ஜித்த அந்த குரல் என்றும், எல்லோர் செவிகளிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருக்கு, 1996-ம் ஆண்டு, தமிழ்த் திரை உலகின் சார்பில், மிகப் பெரிய விழா எடுத்து, தங்க பேனா பரிசளித்தது கலைஞர் மீதும், தமிழ் மொழி மீதும் அவர் கொண்டிருந்த காதலின் வெளிப்பாடின்றி வேறில்லை.தமிழ் மக்களின் அளவீடில்லாத அன்புக்கு சொந்தக்காரரான கேப்டன் விஜயகாந்த், அவரின் மனிதநேயச் செயல்களால், என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், அன்பர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபமும் என்றார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். சிறந்த மனிதநேயர் – துணிச்சலுக்கு சொந்தக்காரர் – தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. முதலமைச்சரின் அன்புக்குரிய நண்பர்.

Captain' Vijayakanth hands over DMDK to wife Premalatha

நடிகர் சங்கத் தலைவராகவும் – எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் – அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்கள், நண்பர்கள், திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

 

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை  தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

 

அதனால், ராஜாஜி அரங்கில் அவரின் உடலை வைக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கேப்டன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கித் தர, தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றார் அண்ணாமலை.

இதையும் படிங்க.!