திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் அரசின் திட்ட பணிகளை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்காமலும் திமுக ஒன்றிய செயலாளருக்கு கமிஷன் கொடுக்கும் நபர்களுக்கே பணி ஆணையை வழங்குவதாகவும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தலைமையில் அதிமுகவினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வெங்கட்டரமணா என்பவர் பதவி வகித்து வருகிறார்.
துணைத்தலைவராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சேர்ந்த திமுக மாவட்ட இளைஞரணி துணை தலைவராக உள்ள மோதிலால் என்பவரின் மனைவி ஆவார்.
பூண்டி ஒன்றியத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கோ, ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கோ வழங்குவதில்லை.
மேலும் திமுகவை சேர்ந்த ஒன்றிய குழு துணை தலைவரின் கணவர் மோதிலால் மற்றும் அவரது சகோதரரும் ஒன்றிய திமுக செயலாளருமான கிறிஸ்டி என்கிற அன்பரசு ஆகியோர் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே அரசின் திட்டப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
அது தவிர மோதிலால் எப்போதும் பி.டி.ஓ ஆபீஸில் உட்கார்ந்துகொண்டு அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள் .
வயது முதிர்ந்த அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் ஆகியோரை மோதிலால் வா, போ என்று ஒருமையில் தான் பேசுவாராம்.
இதனைக் கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி விஜயகுமார் மற்றும் பூண்டி ஒன்றிய செயலாளர்கள் பிரசாத், கந்தசாமி மற்றும் ஒன்றிய அதிமுக கவுன்சிலர்கள் விஜி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.
ஆட்சியரிடம் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 31-ம் தேதி பூண்டி BDO ஆபிசில் திருவள்ளூர் மேற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடை பெறும் என்று முன்னாள் அமைச்சர் ரமணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து மோதியின் கருத்தை அறிய நாம் அவரை தொடர்பு கொண்டோம்.அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.இது தொடர்பாக மோதியின் ஆதரவாளர்கள் தரப்பில் நம்மிடம்:
அதிமுக தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை மோதிலால் அலுவல் தொடர்பாக மட்டும் தான் பி.டி.ஒ. ஆபிஸ் செல்லுவார்.
மற்றபடி தேவையில்லாமல் அங்கே போக மாட்டார்.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றியக்குழு தலைவராக இருந்த அம்மு மாதவன் என்பவர் சேர்மனுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை அம்முவின் கணவர் மாதவனே பயன்படுத்தி வந்தார்.
அது தவிர அவர் ஏற்கனவே அந்த அலுவலகத்தில் கிராம சேவராக பணியாற்றியதால் சேர்மன் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளை மிகவும் தரம் தாழ்த்தி பேசி வந்தது மட்டுமல்லாமல் சேர்மன் பெயரில் பல லட்ச ரூபாய் அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறார்.
அது தவிர ராமஞ்சேரி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த ராமர்கோயில் அருகே உள்ள நல்ல தண்ணி கிணற்றை இடித்து தரைமட்டமாக மூடிவிட்டனர்.
தற்போது தண்ணீருக்கு அந்த கிராமத்தினர் தத்தளித்து வருகின்றனர்.உப்புத் தண்ணீரைத்தான் தற்போது கிராம மக்கள் குடித்து வருகின்றனர்.அது தவிர ராமஞ்சேரி கிராமத்தின் வளர்ச்சிக்காக பூண்டி ஒன்றிய சேர்மனாக இருந்த அம்மு மாதவன் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
தலித்துகள் உள்ள இந்து மற்றும் கிருஸ்துவ சுடுகாட்டிற்கு காம்பவுண்டு சுவர் கட்டுதல் எரிமேடை, போர்வெல் போன்ற எந்த வசதிகளையும் செய்து தரவில்லை.இது தொடர்பாக அந்த கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளனர்.
பூண்டி ஒன்றியத்தில் எந்த விதமான வளர்ச்சிப் பணிகளிலும் அவர் ஈடுபட்டதில்லை.இவர் முன்னாள் அமைச்சர் ரமணாவின் வலது கரமாக செயல்பட்டவர்.அவரது தயவில் தான் இவர் ராமஞ்சேரி கிராம பஞ்சாயத்து தலைவராகவும் இவரது மனைவி பூண்டி ஒன்றிய சேர்மனாகவும் பதவி பெற்றார்கள்.
ஆகவே அதிமுகவினர் அப்போது நடந்த தவறை மறைக்க இப்போது திமுகவினர் மீதுபொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று தெரிவித்தனர்.