chennireporters.com

கும்பகோணம் தீ விபத்து 18ம் ஆண்டு நினைவஞ்சலி.

கும்பகோணம் தீ!
2004 ம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஒவ்வொரு மனிதனின் மனமும்,வயிறும் பற்றி எரிந்ததே! ஆம்! அன்றுதான் கும்பகோணம் தீ விபத்து!  94 பள்ளி சிறார்கள் தீக்கிரையாயினர்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தீயில் கருகிய அந்த குழந்தைகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் கல்லூரியில் படிக்கும் இளம் பெண்களாக, இளம் ஆண்களாக இருந்திருப்பார்கள்.

அந்த தீயில் குழந்தையை இழந்த ஒரு தந்தையின் ஓலம் எப்படி இருந்திருக்கும்?
மனச்சுமை வடிகாலாய் ஒரு கவிதை!

அன்று! கும்பம் தங்கிய தலம் என்று கூறியதால் கும்பகோணம்!
இன்று! உலக துக்கம் அனைத்தும் கும்பம் ஆக்கி சேர்த்த களம் கும்பகோணம்!

கும்பகோணம் எனில் கோயில் – மகாமகம், இனி – சேர்ந்தது
இளம் தளிர்களின் நினைவுச் சின்னம்!

புனித நீர் சங்கமம் என்ற மகாமகத்தில் இன்று கண்ணீரும் சங்கமம் ஆகிப் போனதோ?

தென்றல் வந்து வருடிச் செல்லும் உன் மேனியை, தீயும் வந்து அணைத்ததோ!
என் வயிறு எரிய வைத்தனையோ?

ஐய்யகோ!

காலை வரேன் என்று சொல்லி, அழகு முகத்துடன் அழுது சென்றனையே?
மாலை நான் அழ நீ மூச்சற்று கருகி வந்தனையோ?

பள்ளி விட்டு வந்து அழைக்கும், உன் குரல் கேட்க காத்திருப்பேன்!
நேரம் கடந்து விட்டால் பதறி நிற்பேன்!

ஐய்யகோ!

நீ எரியும் போது – உன் கூக்குரல் கேட்கலையே!

உன் மடிமீது – என் இறுதி மூச்சை விட நினைத்திருந்தேன்!
மூச்சற்ற உன் உடலை தூக்கிவர வைத்தனையே!

மாலை முடிந்து இரவு வந்தால் , நீ படிக்க – உன் தாயின் குரல் ஓங்கி ஒலித்திடுமே!
இன்று நாள் முழுதும் உன் தாயின் அழுகுரல் அடங்கலையே ?

எனக்கு இறுதி சடங்கு செய்வாய் நீ என நான் நினைத்திருந்தேன்!
உனக்கு இறுதி சடங்கு செய்ய வைத்தனையே?

இரவில் பாலருந்த அடம்பிடித்து , பொய் தூக்கம் தூங்குவாயே!
இன்று நான் பாலூற்ற அமைதியுடன் மெய் தூக்கம் – நீ தூங்குகிறாயோ?

வந்திருந்த சொந்தங்கள், நட்புக்கள் துக்கம் விசாரித்து, அவர் துக்கம் என் மீது இறக்கி ,
அவர்கள் மனம் பாரம் கலைந்து சென்றனரே!

ஆறுதல்கள் பல குவிந்திடினும், நீ இல்லாததால் – என்
லட்சியங்கள் ஈடேறுமா?

அனைவரும் துன்பம் நீங்கி,
தன் பணி பார்க்க உடன் சென்றிடுவர்!

எம் பிள்ளையாய்!

நீ இல்லா இவ்வீட்டில்,
உன் நினைவால் எத்தனை காலம் வாழ்ந்திடுவேன்?

வேண்டாம் இனி இவ் வாழ்வு!
விரைந்து அழைத்துக் கொள்!
மகிழ்ந்து வருவேன் நான்!

இதையும் படிங்க.!