chennireporters.com

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி சொத்துக்களை முடக்கியது அமலாக்க துறை.

சட்டவிரோதமாக அரசிடம் வீட்டு மனை பெற்று, அதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி உட்பட 3 பேரின் 14.23 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், லேண்ட்மார்க் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.14.23 கோடி சொத்துகள் சட்டவிரோத பணிப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏழு பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில், அமலாக்கத்துறை பணமோசடி விசாரணையைத் தொடங்கியது. உளவுப்பிரிவு முன்னாள் ஐஜி ஓய்வுபெற்ற எம் எஸ் ஜாபர் சேட், அவரது மனைவி பர்வின் ஜாபர், சென்னை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் கே.முருகையா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் கே.ராஜமாணிக்கம், கே.ராஜமாணிக்கத்தின் மகன் ஆர்.துர்காசங்கர், அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி , லேண்ட்மார்க் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த டி.உதயகுமார் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் விருப்ப ஒதுக்கீட்டை அதாவது GDQ (Government Discretionary Quota) ப்ளாட்களை, அப்போதைய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி தவறாக ஒதுக்கீடு செய்தது விசாரணையில் தெரியவந்தது. GDQ இன் கீழ் மனை பெறுவதற்கு தகுதி இல்லாத நிலையிலும், ஜாஃபர் சேட்டுக்கு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல், அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கம், தனது மகன் ஆர்.துர்காசங்கருக்கு GDQ விதிமுறைகளை மீறி மனை ஒதுக்கினார்.

 

பர்வின் ஜாஃபர் மற்றும் ஆர். துர்காசங்கர் ஆகியோர், லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷனைச் சேர்ந்த உதயகுமாருடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மனையை கூட்டு மேம்பாட்டின் அடிப்படையில் அடுக்ககம் கட்ட ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதற்காக உதயகுமார் பணம் கொடுத்துள்ளார். உதயகுமாரிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை, பர்வின் ஜாஃபர் மற்றும் ஆர். துர்காசங்கர் ஆகியோர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட மனைகளுக்காக செலுத்தியுள்ளனர்.

பர்வின் ஜாஃபர், ஆர். துர்காசங்கர் மற்றும் டி. உதயகுமார் ஆகியோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டி, பின்னர் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை பொதுமக்களுக்கு விற்று பெரும் தொகையைச் சம்பாதித்தனர். இவர்கள் மூவராலும் ஈட்டப்பட்ட ரூ.14.86 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களின் மொத்த வருமானத்தில், ₹14.23 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமலாக்கத்துறை தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

இதையும் படிங்க.!