chennireporters.com

நெய்தல் நிலத்தின் கருப்பு வைரமே ”லிங்கனே” உமக்கு எங்கள் வீர வணக்கம்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் தோழர் லிங்கன்  பாஸ்டின் கடந்த 25 ஆண்டு காலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.  அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லுகின்றனர் அவரின் பிரிவிற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  அது தவிர பல்வேறு தோழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் சமூக வலைதளங்களில்  கண்ணீர் அஞ்சலி பதிவையும் எழுதி வருகின்றனர்.நெய்தல் நிலத்தில் பிறந்தவர் என்பதாலோ எப்போதும் முகத்தில் ஆழ்கடல் போன்ற அமைதி. அதில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாதவர். ஆனாலும்,
ஆழ்ந்த சிந்தனையாளர். அதற்கு அறிகுறியாக நீண்டு வளர்ந்த தனது தாடியை எப்போதும் நீவி விட்டுக் கொண்டேயிருப்பார்.

சேப்பாக்கத்தில் எனது விடுதிக்கு இரண்டு தெருத் தள்ளி தங்கியிருந்தார். காலை நேர நடை பயிற்சியின் போது ஏதேனும் ஒரு தெருமுனையில் இருந்து வெளிப்படுவார்.
” நல்லா இருக்கீங்களா ? ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கும்.
அவர் தனியாக இருந்தாலும் குழுவாக இருந்தாலும் அதிகம் பேசி நான் பார்த்ததில்லை.
எனது நூல் வெளியீடுகளிலும் புதுயுகம் மகளிர் விடுதியின் நிகழ்வுகளிலும் முதல் ஆளாய் வந்து தனது அன்பை- அக்கறையை வெளிப்படுத்துவார்.

தான் பிறந்து வளர்ந்த நெய்தல் நில (கன்னியாகுமரி ) விளிம்பு நிலை மீனவ மக்களின் நலன் பற்றியே எப்போதும் சிந்தித்து செயல்பட்டவர்.
” சிந்தனை சிற்பி” சிங்காரவேலனாரை இன்றைய இளைய தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் “சிங்காரவேலர் சிந்தனைகள்” என்ற தலைப்பில் நாள்தோறும் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் வழக்கறிஞர் லிங்கன்.


இன்று மாரடைப்பார் இறந்துவிட்டார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.
” 50″க்குள் இறப்பு என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
தோழருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விளம்பு நிலை மக்கள்
அனைவரும் அனைத்து
ஒடுக்குமுறைகளில் இருந்தும்
விடுதலை பெறும் வரை ,

உங்கள் பாதையில்
நாங்கள் பயணிப்போம்…!

போய் வாருங்கள் தோழரே,
உங்களுக்கு எம் செவ்வணக்கம்..! பவா சமத்துவன்.

தோழர் லிங்கன் தன்னை வழக்குரைஞர் லிங்கன் என்று எப்போதுமே வெளிப்படுத்திக் கொண்டது கிடையாது. மிகவும் மனித நேயத்துடன் நடந்துக் கொள்ளும் பண்பாளர்.மதுரைக்கு பேரூந்து பயணத்தில் இருக்கும் போது தோழர் லிங்கனின் திடீர் மரணம் குறித்து பத்திரிகையாளர் பவா சமத்துவன் செய்தியை பகிர்ந்தார்.

இரங்கல் பதிவு எழுத எனது கை நடுங்குகிறது. அன்புத் தோழரை இனி பார்க்க இயலாது என்பதை உணரும் போது நெஞ்சம் பதறுகிறது.மக்களை அணிதிரட்ட, உரிமைக்காக போராட களத்தில் நிற்கும் முன்னணி படை வீரனை இழந்து தவிக்கிறோம். அவரின் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பு. வழக்குரைஞர் தோழர் லிங்கன் அவர்களுக்கு செவ்வணக்கம். வீர வணக்கம்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு                                                                                                                              பொதுச் செயலாளர்.                                                                                                                                     பொதுப் பள்ளிக்கான மாநில மேடை . பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பொது    நல அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரும் தோழர் லிங்கன் பாஸ்டின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமூக நலனில் அக்கறை உள்ள  எந்த பொது கூட்டங்களுக்கும் முதல் ஆளாக வந்து களத்தில் நிற்பவர் தோழர் லிங்கன். அவரது சமூக அக்கறைக்கு நாங்கள் எப்போதும் மரியாதையும் செவ்வணக்கமும் செலுத்திக்கோண்டே இருப்போம்.

இதையும் படிங்க.!